india

img

85 வயது தபாத்கர் படுக்கையை விட்டுக் கொடுக்கவில்லை... பொய்யான அறிக்கை வெளியிட்டு ஆர்எஸ்எஸ் தில்லுமுல்லு...

நாக்பூர்:
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில்மாநகராட்சியால் நடத்தப்படும், இந்திரா காந்தி ருக்னாலயா மருத்துவ மனையில் 85 வயதான ஆர்எஸ்எஸ்தொண்டர் நாராயணராவ் தபாத்கர், தனக்குரிய ஆக்சிஜனையும், படுக்கையையும் 40 வயது இளைஞருக்கு விட்டுக் கொடுத்து, அவரது உயிரைக்காப்பாற்றியதாகவும், இந்த தியாகத்தில் ஆர்எஸ்எஸ் தொண்டர் தபாத்கர் தனது உயிரை இழந்து விட்டதாகவும்- ஆர்எஸ்எஸ் அமைப்பு இரண்டு நாட்களுக்கு முன்பு நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது.

பார்த்தீர்களா.. ஆர்எஸ்எஸ் தொண்டர்களின் தியாகத்தை..? என்று விளம்பரப்படுத்தும் வகையில் இருந்த அந்த அறிக்கையை, சங்- பரிவாரக் கூட்டமும் வழக்கம்போல சமூகவலைத்தளங்களில் பரப்பி விளம்பரத்தைக் கூட்டினர். வெகுஜன ஊடகங்களிலும் இதைப்பற்றிய செய்திகள் மிகப்பெரிய அளவில் இடம் பிடித்தன.ஆனால், ஆர்எஸ்எஸ் வெளியிட்ட அறிக்கையில் உண்மை இல்லை; அந்த அமைப்பின் 85 வயது தொண்டர் நாராயண ராவ் தபாத்கர்,படுக்கையை யாருக்கும் தியாகம் செய்யவும் இல்லை என்று நாக்பூர் மாநகராட்சி மருத்துவமனையின் மருத்துவர் ஷீலு சிமுர்கர் உண்மையைப் போட்டு உடைத்துள்ளார்.

‘ஏப்ரல் 22 அன்று மாலை 5.55 மணிக்கு நாராயணராவ் தபாத்கர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். நாங்கள் அவரை விபத்து வார்டில் ஆக்சிஜன் இணைப்பு கொண்ட படுக்கையில் வைத்தோம். அவருடன் இருந்த உறவினர்களிடம் (மகள் ஆஷாவரி தபாத்கர், மருமகன்அமோல் பாச்போர் உள்ளிட்டோரி டம்), தபாத்கரின் நிலை மோசமடைந்து விட்டால், அவரை உயர் மருத்துவ மனைக்கு மாற்ற வேண்டியிருக்கும் என்று நாங்கள் கூறினோம். அவர்களும் ஒப்புக்கொண்டு போனார்கள். ஆனால், இரவு 7.55 மணிக்கு திடீரென திரும்பி வந்த உறவினர்கள் தபோட்கரை டிஸ்சார்ஜ் செய்ய வேண்டும் என்று கோரினார்கள். அதற்குக் காரணம் என்ன என்று எங்களுக்குத் தெரியாது. எனினும், அவரை உயர் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுறுத்தினோம். அவரது மருமகன் அமோல் பாச்போர் ஒப்புதல் கடிதத்தில் கையெழுத்திட்ட பிறகு, மருத்துவ ஆலோசனைக்கு எதிராக நாங்கள் அவருக்கு டிஸ்சார்ஜ் கொடுத்தோம்’ என்று கூறியுள்ளார்.

சமூக ஊடகங்களில் ஆர்எஸ்எஸ் பரப்பி விட்டுள்ள செய்தி குறித்த அவரிடம் கேட்டதற்கு, ‘ஏப்ரல் 22 அன்று பணியில் இருந்த எங்கள் மருத்துவமனை ஊழியர்கள் ஒருவர் கூட இதுபோன்ற எந்தவொரு சம்பவத்தையும் பார்க்கவில்லை’ என்றும் ஆர்எஸ்எஸ் தில்லுமுல்லு-வை அம்பலப்படுத்தியுள்ளார்.மருமகன் அமோல் பாச்போரும், ஆர்எஸ்எஸ் அறிக்கை குறித்து மழுப்பலாகவே பதிலளித்துள்ளார். அவர் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஏட்டிற்கு அளித்துள்ள பேட்டியில் ‘நான் பேசும் நிலையில் இல்லை. ஏனென்றால்,நானும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தேன்’ என்று தெரிவித்துள்ளார். தபாத்கர் இயல்பாக உதவி செய்யும் குணம் கொண்டவர் என்று மட்டும் பட்டும் படாமல் கூறியுள்ளார்.

;