india

img

தனியார்மயத்திற்கு எதிராக ஆவேசம்..... நாடு முழுவதும் மின் ஊழியர் வேலைநிறுத்தம்......

புதுதில்லி:
தனியார்மயமாக்குவதற்கு எதிராக நாடு முழுவதும் மின்ஊழியர்கள்  பிப்ரவரி 3 புதன்கிழமையன்று நடத்தியஒருநாள் வேலைநிறுத்தம் மகத்தான வெற்றி பெற்றுள்ளது.

தேசிய மின்சார ஊழியர்கள் மற்றும்பொறியாளர்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில்  பிப்ரவரி 3 அன்று மின்சார வாரியங்கள் தனியாருக்குத் தாரை வார்க்கத் துடித்திடும் மோடி அரசாங்கத்தின் கொள்கையைக் கண்டித்து ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்திற்கு அறைகூவல் விடுக்கப்பட்டிருந்தது.

இந்த போராட்டம் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் மகத்தான வெற்றி பெற்றுள்ளது.போராடும் மின்சார ஊழியர்கள் முன்வைத்திட்ட கோரிக்கைகள் வருமாறு:

2020 மின்சார (திருத்தச்) சட்டமுன்வடிவை ரத்து செய்ய வேண்டும். மின்சார விநியோகத்தைத் தனியாரிடம் ஒப்படைத்திடும் நடவடிக்கைகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும். பல்வேறு மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் பொதுத்துறையின்கீழ் இயங்கிவரும் மின்வாரியங்களைத் தனியாரிடம் தாரை வார்த்திட மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை விலக்கிக்கொள்ள வேண்டும். தற்போது  தனியாருக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமங்கள் அனைத்தையும் ரத்துசெய்ய வேண்டும்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தையே மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும். கட்டாய ஓய்வினை ஏற்க முடியாது. ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் கேசுவல் ஊழியர்களை முறைப்படுத்தும்வரையிலும் அவர்களின் சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். குறிப்பிட்ட கால வேலைவாய்ப்பை மின்சாரத்துறையில் ஏற்க முடியாது.  காலியிடங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும். நிரந்தர வேலைகளை நிரந்தர ஊழியர்கள் மட்டுமே பார்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை மின் ஊழியர்கள் மேற்கொண்டனர்.மின் ஊழியர்கள் மற்றும் பொறியாளர்களின்  இந்த ஒரு நாள் வேலைநிறுத்தத்தின் மூலம், அரசாங்கம் மக்கள் விரோதக் கொள்கைகளையும், முதலாளித்துவ ஆதரவுக் கொள்கையையும் அதன் மூலம் தன் கூட்டுக்களவாணி கார்ப்பரேட்டுகள் கொள்ளை லாபம் ஈட்டுவதற்கு உதவிடும் கொள்கையையும் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

மத்திய பட்ஜெட்டும், அரசாங்கம் தனியார்மயக் கொள்கையைத் தொடர்வதை மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கிறது. எனவே இதற்கு எதிராகமின் ஊழியர்கள் மற்றும் பொறியாளர்கள் நாடு முழுவதும் வீராவேசத்து டன் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். கேரளாவிலும், சண்டிகரி லும் நூறு சதவீதமான ஊழியர்கள்-பொறியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். தமிழ்நாடு, ஹரியானா ஆகிய மாநிலங்களில்80 சதவீதம் பேரும், மேற்குவங்கம், மகாராஷ்டிரா, பீகார்,  ஜார்க்கண்ட், அசாம்ஆகிய மாநிலங்களில் 50 முதல் 60 சதவீதம் வரையிலும் பங்கேற்றனர்.

போராட்டத்தை முன்னெடுக்க அறைகூவல்
சில மாநிலங்களில் நாள் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.மின்வாரியங்களைப் பாதுகாத்திட மின் ஊழியர்களும் மின் நுகர்வோரும் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றிட பரந்த மேடையைக் கட்ட வேண்டும் என்று இந்திய மின் ஊழியர் சம்மேளனம் அறைகூவல் விடுத்துள் ளது. (ந.நி.)

;