games

img

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி 

மெக்காய்  : ஆஸ்திரேலியா மகளிர் அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றுள்ளது. 

இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்நிலையில் , இன்று மெக்காய் நகரில் உள்ள ஹாரப் பார்க் மைதானத்தில் நடைபெற்ற 3 -வது ஒருநாள் போட்டியில்  டாஸ் வென்ற ஆஸ்திரேலியா மகளிர் அணியின் கேப்டன் மெக் லானிங்க் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். 

இதையடுத்து ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக ரச்சேல் ஹெய்ன்ஸ் மற்றும் அலைசா ஹெல்லி களமிறங்கினர் . சிறப்பாக ஆடிய  அலைசா ஹெல்லி 5 பவுண்டரிகளுடன்  35 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட் ஆனார்.

மேலும் , இந்திய மகளிர் அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஜூலன் கோஸ்வாமி, பூஜா வஸ்த்ராகர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ராணா 1 விக்கெட்டை கைப்பற்றினார். 

அதன் பின்னர் , 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய மகளிர் அணி களமிறங்கியது. இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ஷெபாலி வர்மா - ஸ்மிருதி மந்தனா இணை சிறப்பாக விளையாடியது. 

சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து வந்த இந்திய அணி , பின்னர் வந்த தீப்தி ஷர்மா மற்றும் ஸ்நேஹ் ராணாவின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி வெற்றிப் பாதைக்குச் சென்றது .

49.3 ஓவர்களில் இந்திய மகளிர் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 266 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. சிறப்பாக பந்துவீசிய இந்திய மகளிர் அணியின் ஜூலன் கோஸ்வாமி ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய மகளிர் அணிக்கு 2 புள்ளிகள் கிடைத்துள்ளது. எனினும் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் இந்த ஒருநாள் தொடரை ஏற்கனவே கைப்பற்றியுள்ளது. ஆஸ்திரேலிய மகளிர் அணி தொடர்ந்து 26 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்றுவந்த நிலையில், இந்த தோல்வியின் மூலம் அந்த சாதனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. 

 

 

;