facebook-round

img

மனிதம் பாடிய மகா மனிதன் வள்ளுவன் - ஆர்.பாலகிருஷ்ணன்

திருக்குறளை
திருவள்ளுவ நாயனார்
அருளிச் செய்த
"தமிழ்வேதமாகிய" திருக்குறள்
என்றும்
அதனால் திருக்குறளை
"தமிழ்மறை" என்றும்
"உலகப் பொதுமறை" என்றும்
எழுதியும் பேசியும் வந்தவர்கள்/ வருகிறவர்கள்
புரிந்து கொள்ளவேண்டிய
ஓர் உண்மை உண்டு.

அது மிக வெளிப்படையான
உண்மை.

மறை"யாக இருக்கும்
எதுவும் "பொதுவாக"
இருப்பதில்லை.

பொதுவாக இருக்கும்
எதுவும் "மறை"யாக
இருப்பதில்லை.
இருக்கும்
தேவையும் இல்லை.

"மறை" என்பதை
வினைச்சொல்லாய்
எடுத்துக்கொண்டாலும்
பெயர்ச்சொல்லாய்
எடுத்துக்கொண்டாலும்
இது தான் உண்மை நிலை.

"மறை" "பொது"வாக
இருக்குமென்றால்
உலகில்
போர் என்பதே இருக்காது.

அது விரும்பத்தக்கது
எனினும்
எதார்த்த உலகில்
அது ஓர் அதீதக் கற்பனை.

அதனால்
பொதுமறை என்பதே
ஒரு
பொருள் முரண்.

வள்ளுவன்
மனிதம் பாடிய
மகா மனிதன்.

மறை இலக்கியங்களின்
நோக்கமும் ஆக்கமும்
வேறு.
திருக்குறளின்
செயற்களமே வேறு.

யாரும்
திருக்குறளை "மறை" என்று
சொல்வதாலேயே
அது
"மறை"யாகிவிடப்
போவதில்லை.
திருவள்ளுவர்
"மறை"யோர்
ஆகப்போவதும் இல்லை.

திருக்குறள் ஒரு
திறந்தவெளி இலக்கியம்.

திருக்குறள்
தந்திரமோ மந்திரமோ இல்லை.
சொல்லப்போனால்
அது சுதந்திரம்.

முறை என்பது
வழக்கம்.
முறை என்பது நெறி.
முறை என்பது ஒழுங்கு.

வாழ்க்கை முறை
ஆட்சிமுறை
நீதிமுறை
நெறிமுறை
ஒழுங்குமுறை
வரைமுறை
முறையீடு
மேல்முறையீடு
போன்ற சொல்லாட்சிகள்
நமக்குப் புதிதல்ல.

எனவே
திருக்குறளை
பொதுமறை என்பதை விட
பொதுமுறை என்பதே
பொருத்தம்.

Balakrishnan R

;