education

img

கல்விக் கொள்கையா? பிரச்சார முழக்கமா?

இந்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை வெளியிடப்பட்டு அது குறித்து மக்களின் கருத்தறிய ஜுன் கடைசி வரை அவகாசம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதில் உள்ள மும்மொழிக் கொள்கை, இந்தி திணிப்பு குறித்து பொதுவாகப் பேசி வருகிறோம். ஆனால் இதில் இன்னும் ஏராளமான கொடிய விஷ(ய)ங்கள் உள்ளன. இதுதொடர்பாக கனடாவிலுள்ள நரம்பியல் விஞ்ஞானி, மனநல மருத்துவர் லேனா பழனியப்பன், “இது கொள்கை அறிக்கையே இல்லை; ஒரு ‘‘பிரச்சார முழக்கம்’’ என்று காரணங்களோடு விளக்குகிறார். இது கல்விக்கான மாற்றம் அல்ல; இந்திய அரசியலமைப்பையே மாற்றி கேள்விக்குறியாக்கும் முயற்சி என்கிறார்.

“பொய்கள், ஆதாரமில்லாத செய்திகள், நிரூபிக்கப்படாத விஷயங்கள், மேற்கோள் இல்லாத குறிப்புகள், எடுக்கப்படாத புள்ளி விவரங்கள், தொடர்பற்ற உண்மைகள், பொத்தாம்பொதுவான கருத்துக்கள், முட்டாள்தனமான பிதற்றல்கள், அறியப்படாத வரலாறுகள், முரண்பாடான விளக்கங்கள், விளம்பரயுக்தி, நம்பமுடியாத சான்றுகள், தவறான வாதங்கள், பயத்தை/உணர்வைத் தூண்டும் வாசகங்கள், ஒப்பனை செய்த சொல்லாடல்கள் என இந்த வரைவு அறிக்கை முழுவதும் ஒரு பிரச்சார அறிக்கைக்கான கூறுகளே உள்ளன” என்றும், கொள்கை வரைவு அறிக்கைக்கான எந்த முகாந்திரமும் இதில் இல்லை என்றும் அவர் கூறுகிறார். வரைவு கல்விக்கொள்கையில் இடம்பெற்றுள்ள சில பிதற்றல்களை அவர் குறிப்பிட்டுள்ளார்:

 இந்தியாவில் 15% தான் ஆங்கிலம் பேசுகிறார்கள். 54% இந்திதான் பேசுகிறார்கள். ஆங்கிலம் சர்வதேச மொழி கிடையாது. 

 தற்போது மாணவர்களுக்கு ஒரு கோடி வரைதான் எண்ணத் தெரியும். ஆனால் புதிய திட்டத்தில் கோடிக்கு மேல் அராப், கெராப், நீல், பத்மா, ஷாங்க், மஹாசாங்க் என பல எண்களை புரிந்துகொண்டு அது குறித்து பேச கற்றுக்கொள்வார்கள்.

 பல்வேறு விதமான பிரிவுகளைக் கொண்ட பெரிய கல்வி நிலையங்களில் படிக்கும் மாணவர்களுக்கு இரண்டு பக்க மூளையும் சிறப்பாக இயங்கும்.

 இதில் பல சமஸ்கிருத புத்தகங்களை குறிப்பிட்டு ஆயகலைகள் 64யையும் கற்றவனே உண்மையான கல்வியறிவு பெற்றவன் எனவும் அது தற்போது 512ஆக உயர்ந்திருப்பதாகவும் குறிப்பிடுகிறது. இது நவீன கல்வியை அறிமுகப்படுத்த வில்லை; மாறாக நம்மை பின்னோக்கியே அழைத்துச் செல்கிறது. 

 ஐஐடி கல்வி நிலையத்தில் கலை மற்றும் மானிடவியல் சொல்லித்தர வேண்டும். 

 கல்வியில் மாநிலத்துக்கான உரிமை குறைக்கப்பட்டு மத்திய அரசின் கல்வி அமைச்சின் கீழ் ஒருங்கிணைக்கப்படும்.

 வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் அனுமதிக்கப்படும். உயர்கல்வியில் தனியார்மயமாக்கல் தீவிரமாக்கப்படும். வெளிநாட்டு மாணவர்கள் சித்தா, ஆயுர்வேதம், யோகா, யுனானி போன்ற படிப்புகள் படிக்க நிதி வழங்கப்படும். 

 உடற்கல்வி குறித்தோ, பள்ளிக்கூடத்தில் விளையாட்டு குறித்தோ ஏதும் குறிப்பிடவில்லை. யோகா பற்றி மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையெல்லாம் பார்க்கும் போது ‘நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை’ என்று வரும் வாட்ஸப் பகிர்வுகளுக்கும் இந்த 484 பக்க கொள்கை பரப்புரைக்கும் கருத்தளவில் பெரிய வேறுபாடு கிடையாது என்றே தோன்றுகிறது எனக் குறிப்பிட்டுள்ளார் மருத்துவர் பழனியப்பன்.
 

தகவல் : முனைவர் தா.சந்திரகுரு

;