articles

img

கல்விக் கொள்கையா? மரண சாசனமா?

மோடி அரசின் புதிய கல்விக் கொள்கைஇளம் மனங்களில்  தொடக்கத்திலிருந்தே நச்சை விதைப்பதாகவும் இருப்பதால் விரிவாக ஆராய வேண்டியதாக உள்ளது.கல்விக்கொள்கையானது  23 தொகுதிகளுடன் 450பக்கங்களை கொண்டுள்ளது.  இது 5 பெரும் பிரிவுகளாக உள்ளது.  முதலில் பள்ளிக்கல்வி, இரண்டாவது உயர்கல்வி, மூன்றாவது மொழிக்கொள்கை, நான்காவது கார்ப்பரேட்டுகளுக்கு ஏற்ப கல்வியை வடிவமைப்பது,  ஐந்தாவது தேசிய கல்வி ஆணையம் அமைப்பது என பிரிக்கப்பட்டுள்ளது,  

பள்ளிக்கல்வி 
பள்ளிக்கல்வி மூன்று பரிணாமங்களைக் கொண்டது. முதலாவது சேர்க்கை, இரண்டாவது இடைநிற்றல் இல்லாமல்  தக்க வைத்துக் கொள்வது, மூன்றாவது தேர்ச்சி பெற வைப்பது. ஆனால் இந்த கல்வி கொள்கையானது இம் மூன்றையும் மறுப்பதாகவே உள்ளது.வடிகட்டும் கொள்கையை அடிப்படையாக கொண்டுள்ளது.  இந்த கொள்கையின்படி  3,5,8 ,10 மற்றும் 12 ஆகிய  வகுப்பு மாணவர்கள்  5 முறை பொதுத்தேர்வுகள் எழுத வேண்டும், பொதுவாக தேர்வு என்பதே ஒரு வன்முறையாகும். பல நாடுகள் 13 வயதுவரை தேர்வு நடத்தும் முறையை  கைவிட்டு விட்டன.கல்வி கொள்கையில் வைக்கப்படும் தேர்வுகளில்  அவர்கள் தேறாவிட்டால் அந்த வகுப்பிலேயே  அமர வேண்டும். அதாவது ஒரு 3ஆம் வகுப்பு படிக்கும் குழந்தையும் தேசிய அளவில் நடத்தப்படும் பொதுத்தேர்வை எதிர் கொண்டு அதில் தேர்ச்சி பெற வேண்டும். தெருவில் ஒரு யானை போனால் அல்லது விதவிதமான வண்ணங்களில் மிட்டாய் விற்றால் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டு அதன் பின்னர் போகும்அளவுக்கே மனப்பக்குவமும் அறிவு வளர்ச்சியும்  உள்ள 3ஆவது வகுப்பு படிக்கும் ஒரு குழந்தை தேசியஅளவிலான பொதுத்தேர்வை எப்படி எதிர்கொள்ளும். இது என்ன வகையான திட்டம்? இதில் என்ன உள்நோக்கம்?

குழந்தைத் தொழிலாளர்கள் - திருமணங்கள் 
சாதாரணமாக பிளஸ் 2 மாணவர்கள் பெயில்ஆகிவிட்டாலே அவர்களை மனதளவில் தேற்றுவதுகடினமான ஒன்று.  அப்படியிருக்க 3 ,5 மற்றும் 8 ஆவது வகுப்பு படிக்கும் மாணவர்கள் பொதுத்தேர்வை எதிர்கொண்டு தேர்ச்சி பெறாவிட்டால் அவர்கள் மனம் உடைந்து போவார்கள்.  அதனால் அவர்கள் படிக்க ஆர்வமற்று பள்ளியை விட்டு வெளியேறி விடுவார்கள்.இதில் ஆண் குழந்தைகளாக இருந்தால் குழந்தை தொழிலாளர்களாவார்கள். பெண் குழந்தைகளாக இருந்தால் அவர்களுக்கு திருமணம் செய்து வைத்து விடுவார்கள்.  இதனால் குழந்தைத் தொழிலாளர்கள் அதிகரிப்பதும், குழந்தைதிருமணங்கள் நடப்பதும் அதிகமாகும். இது போன்று இடைநிற்றல்கள் கடந்த  10 ஆண்டுகளுக்கு முன்னதாக அதிகமாக இருந்தது. அதன் விளைவாக குழந்தைத் தொழிலாளர்களும் அதிகமாக இருந்தனர். கடந்த 2005ல் மேற்கொள்ளப்பட்ட  ஆய்வு ஒன்றில்நாடு முழுவதும் இடைநிற்றல்கள் அதிகமாகி 5 கோடியே  8 லட்சம் குழந்தைத் தொழிலாளர்கள் இருந்தனர்.  2.3 கோடி பெண் குழந்தைகள் பள்ளியிலேயே  இல்லை. இது போன்ற சேதங்களை தவிர்க்கவே, பள்ளியில் மாணவர்களை இருக்க வைக்கவே 8 ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெற வைப்பதுஎன்ற  முறை இருந்தது.  இப்போதைய கல்விக் கொள்கையில் அந்த தக்க வைக்கும் முறை நீக்கப்பட்டுவிட்டது.  

இதனால் கிராமப்புறங்களிலும் கடலோரக் கிராமங்களிலும் பழங்குடியினரின்  மத்தியிலும் இடைநிற்றல் அதிகமாகி குழந்தைத்  தொழிலாளர்களும் குழந்தை திருமணங்களும் அதிகரிக்கும்.  முதல் தலைமுறையாக கல்வியில் நுழைபவர்கள் நுழையவே முடியாது அப்படியே நுழைந்தாலும்  உயர்கல்விக்கு வர முடியாதபடி வடிகட்டப்படுவர்.  ஒரு நாட்டின் குடிமக்களை எப்படியாவது கல்வி கற்க  வைப்பது என்றுதான் இதுவரை இருந்த ஆட்சியாளர்கள் பல அற்புதமான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.  முன்னதாக ஆட்சி செய்த காமராஜர் உணவின்றி வறுமையில் வாடும்  குழந்தைகளும் படிக்க வேண்டி மதியஉணவு திட்டத்தை  கொண்டு வந்தார். அதன் பின்னர்வந்தவர் எம்ஜி ஆர்  அந்த மதிய உணவு திட்டத்தை  சத்துணவு திட்டமாக மாற்றினார்.  கலைஞர் சைக்கிள் அளித்தார்.  ஜெயலலிதா மடிக்கணினி அளித்தார்.  இவர்கள் நோக்கமெல்லாம்  எப்படியாவது கிராமப்புறங்களையும்  பின்தங்கிய  பகுதியிலுள்ள மாணவர்களையும்  படிப்பதற்காக பள்ளிக்கு வரவைப்பதுதான்.  ஆனால் மோடி ஆட்சியோ தலித், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டவர்கள்  உள்ளிட்ட அனைத்து ஏழை, எளிய மக்கள்  படிக்கவே கூடாது என்று திட்டமிட்டே  தேசிய கல்விக் கொள்கையை  கொண்டு வந்துள்ளது.

தொகுப்பு முறையில் பள்ளிகள்?
மோடி அரசின் புதிய கல்விக்கொள்கையில் பள்ளிகல்வியை பொறுத்தவரை தொகுப்பு அணுகுமுறை அல்லது ஒரு வளாகத்திற்குள் ஒரே மட்டத்திலுள்ள பள்ளிகளை அடக்குவது,  அதாவது உயர்நிலைப்பள்ளிகளை  ஒன்றாக இணைத்து 10 கிலோ மீட்டருக்கு ஒன்றாக அமைப்பது, இதன் மூலம் பள்ளிகளை தரப்படுத்துவதாக கூறுகிறார்கள். ஆனால் முன்புமாணவ - மாணவிகள் பள்ளிக்கு தொலை தூரம்சென்று படிக்கும் சிரமத்தை தவிர்க்க தமிழகத்தில்1960 களில்  5 கிமீட்டருக்கு ஒரு பள்ளி தொடங்கப்பட்டது.  அப்படியிருந்தும் சில பகுதிகளில் இரண்டுபேருந்துகளுக்கு மாறி மாறி பயணித்தும் பல கிமீ நடந்தும் ஆறுகளை கடந்தும் நமது மாணவர்கள் படித்து வருகின்றனர்.அவர்களுக்கு இலவச சைக்சிள் அளிக்கப்பட்டதும் எப்படியாவது நமது குழந்தைகள் படிக்க வேண்டும் என்ற அக்கறையில்தான். இன்னும் பள்ளிகளை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வரும் வேளையில் இருக்கின்ற பள்ளிகளையும் குறைக்கும் திட்டம்  முன் வைக்கப்படுகிறது.  10 கிமீ க்கு  ஒரு பள்ளி எனும் போது பெண்குழந்தைகளை அனுப்புவதற்கு பெற்றோர்கள் தயங்குவார்கள்.  

சின்னச் சின்ன கடைகளை ஒழித்து பெரிய மால்கள் திரையரங்குகளை ஒழித்து விட்டு மல்ட்டி பிளக்ஸ் திரையரங்குகள் என்பது போன்ற பெரும் முதலாளிகளின் திட்டமே தொகுப்பு முறை பள்ளிகள் ஆகும். இது எந்த அறிவியல் அடிப்படையும் இல்லாமல்எந்த திட்டமிடலும் இல்லாமல்  கொள்கை முன்வைப்பது அதிர்ச்சிக்குரிய விசயமாகும்.

மும்மொழிக் கொள்கை
3 ஆவதுவகுப்பிலிருந்தே குழந்தைகள் மும்மொழிகளை  கற்றுக்கொள்ள வேண்டுமாம். தாய்மொழியுடன் கூடுதலாக இந்தியும் சமஸ்கிருதமும் கற்றுக்கொள்ள வேண்டும். இதில் சமஸ்கிருதம் கட்டாயமாக்கப்பட்டு அதற்கு இந்த கொள்கையின் பல இடங்களில்  அதிகமான முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே மிகச்சிறந்த இலக்கியத்தரம், உலகின் சிறந்த அறிவு உள்ள  மொழி சமஸ்கிருதம் என்றும் அது சிறுவயது முதல் பயிற்றுவிக்கப்படவேண்டும் என்று  கூறுகிறது. சமஸ்கிருத மொழியானது கிபி 9 ஆம் நுற்றாண்டிலேயே பேச்சுவழக்கை இழந்த மொழி.நீண்டகாலமாக அது இந்து மதத்துடன் மட்டுமே அதாவது கோயில்களில் மந்திரம் ஒதுவதற்கும் சடங்குகளை செய்வதற்கும் மட்டுமே இணைக்கப்பட்டு  வருகிறது. இன்றும் அப்படியே தொடர்கிறது. ஆனால் உலகிலேயே தொன்மையான மொழியும் செம்மொழியுமான தமிழை போகிறபோக்கில் பிற மொழிகளுடன் பட்டியலிட்டு கூறப்படுகிறது.குழந்தை  பருவத்திலேயே சமஸ்கிருத மொழியை திணித்து அவர்களின் இந்துத்துவ கோட்பாடுகளை இளம் வயதிலேயே அவர்களின் மனங்களில் பதிய வைப்பதே அவர்களின் நோக்கமாகும்.  

அபிமன்யூ  கற்றுக் கொண்டானாம் 
தாய்மொழியை  தவிர்த்து அந்நிய மொழியை  ஒருகுழந்தையிடம் திணிக்கலாமா என்று கேட்டால், அவர்கள் கூறும் காரணம். அபிமன்யூ கர்ப்பத்திலிருக்கும்போதே போர் வியூகத்தை கற்றுக்கொண்டான் என்கிறார்கள்.ஒரு குழந்தை தாய்மொழியில் பேசும்திறன் வேறு; எழுதுவது  வேறு. குழந்தைக்கு மூன்றுமொழியை திணிப்பது குழந்தையின் மூளை வளர்ச்சியை பாதிக்கும் என்பது உலகளாவிய அறிவியலாளர்களின் கருத்து. இதில் மேட்டுக்குடியினர் ஆங்கில வழிக்கல்வியையே விரும்புகின்றனர்.  ஆனால் வளர்ந்த நாடுகளான  அமெரிக்கா, இங்கிலாந்து, நார்வே, ஜப்பான், ஜெர்மனி தற்போது மிகவேகமாக வளர்ந்து வரும் சீனம் உள்ளிட்ட நாடுகளிலுள்ள பகுதிகளுக்கேற்பவே தேவைகளுக் கேற்பவே கல்வியானது வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்தந்தப் பகுதிகளிலுள்ள தாய்மொழியோ, கல்வியானது போதிக்கப்படுகிறது. பலரும் நினைப்பதுபோன்று அமெரிக்கா முழுவதும் ஒரே மொழியிலோ ஒரே பாடத்திட்டமோ கிடையாது. இங்கு இஎம்ஐ எனப்படும் ஆங்கில வழிக் கல்வியானது கற்றலைக் குறைப்பதற்கும் கல்வி இலக்குகளை அடைவதை கட்டுப்படுத்துவதாகவே அமையும் என உலகளாவிய அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆன்லைன் கல்வி முறை சாத்தியமா ?
உலகளவில் நேரடிக்கல்வி முறையே பள்ளிக்கல்வியில் சிறந்தது. அதில் ஆசிரியர் - மாணவர் நேரடியாக தொடர்பு கொண்டு கற்றுக்கொடுக்கின்றனர். மாணவரின் அறிவு வளர்ச்சி என்பது ஒரே மாதிரியும் இருக்காது. ஒவ்வொரு மாணவரின் அறிவு, அவர்களின்பின்னணி (பின்தங்கிய பகுதியிலிருந்தோ அல்லது பழங்குடியினர் பகுதியிலிருந்தோ வருபவர்கள்)யைபொறுத்தே ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கற்றுக்கொடுப்பார்கள்.

கட்டுரையாளர் : மெய்.சேது ராமலிங்கம்

;