articles

img

மீண்டு வந்திருக்கும் உயர்சாதி அரசியல்: மண்டல் மூலம் பெற்ற பலன்களுக்கு எதிரான எதிர்புரட்சியாக மாறியுள்ள ஹிந்துத்துவாவின் எழுச்சி

ஹிந்து தேசியவாதம் பொதுவாக இனம்-மதம் சார்ந்த இயக்கம் என்று வரையறுக்கப்படுகிறது என்றாலும், மண்டலுக்கு எதிரான எதிர்வினையாக இருந்த சமூக காரணிகளுடனும் தொடர்புடையதாகவே அதன் கடைசி கட்ட விரிவாக்கம் இருந்தது. மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்துவதாக அப்போதைய பிரதமர் வி.பி.சிங் அறிவித்த உடனேயே ‘சூத்திரர்களின் புரட்சியால் எதிர்பார்க்கப்படுகின்ற எந்தவொரு வீழ்ச்சியையும் எதிர்கொள்வதற்காக தார்மீக, ஆன்மீக சக்திகளைக் கட்டியெழுப்ப வேண்டிய அவசரத் தேவை எழுந்துள்ளது’ என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆர்கனைசர் பத்திரிகை எழுதியது. இரண்டாம் மண்டல் வந்தபோது ​ ‘தகுதி என்ற கடைசி கோட்டையை அழிக்க மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் முனைந்துள்ளது...’ என்று அதே பத்திரிகை வாதிட்டது. 2004ஆம் ஆண்டில், மீண்டும் 2009இல் தோற்கடிக்கப்பட்ட பின்னர் - மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு, தன்னுடைய ஹிந்து தேசியவாத சித்தாந்தம், ஆதரவு தளத்தின் நலன்கள் ஆகியவற்றிற்கு எதிரான கொள்கைகள் ஆழமாக வேர்பிடிப்பதைத் தடுப்பதற்கான உத்தியை வளர்த்தெடுத்துக் கொள்வது பாஜகவிற்கு மிகவும் அவசரமான தேவையாகிப் போனது.    

அதற்கான சரியான மாற்றாக குஜராத்தில் நரேந்திர மோடி துவக்கி வைத்த தேசிய-ஜனரஞ்சக முத்திரை இருந்தது. துருவமுனைப்பை ஏற்படுத்துவதற்கான நுட்பங்களைக் கடைப்பிடித்து மற்றவர்களை அச்சுறுத்துவதற்குப் பதிலாக, ஹிந்துக்களின் இருத்தலியலுக்கான பாதுகாப்பு என்ற பெயரில் சாதி தடைகள் அனைத்தையும் மீறி இதர பிற்படுத்தப்பட்டவர்கள், தலித்துகளைக் கூட அதன் மூலம் ஈர்க்க முடிந்தது. அதற்கு துருவமுனைப்பை ஏற்படுத்த முடிந்தது மட்டுமே காரணம் என்றில்லாமல், சாமானியர்களுக்கானது என்று பாஜகவை தோன்றச் செய்ததும் காரணமானது. பாஜக அதுவரையிலும் உயர்சாதியினருடன் மட்டுமே அடையாளம் காணப்பட்டு வந்தது. மோடியும் பின்தங்கிய சாதியிலிருந்து வந்தவர்தான். டீக்கடைக்காரர், ஆங்கிலம் பேசுகின்ற தில்லி நிர்வாகத்தால் தான் பலியானது போன்ற கதைகளை உருவாக்கி அவர் நடித்தார். பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சார்ந்த பலரிடமும் இருந்த அந்த உணர்வை அவர் பகிர்ந்து கொண்டார். அனைத்திற்கும் மேலாக மண்டலுக்குப் பிறகு தங்களை விடுவித்துக் கொள்ளத் தொடங்கியிருந்த பலரும் நடுத்தர வர்க்கத்தில் தங்களை இணைத்துக்  கொள்வதில் வெற்றி பெற முடியாதிருந்தனர். வேலைகளை உருவாக்குவதற்கு ‘குஜராத் மாதிரியை’ பயன்படுத்தப் போவதாக உறுதியளித்த மோடியால் மண்டலால் பயனடைந்தவர்களிடம் இருந்த விரக்தியைப் பயன்படுத்திக் கொள்ள முடிந்தது.     

ஏற்கனவே பாஜகவிற்கு நகர்ப்புற, உயர்சாதி நடுத்தர வர்க்கத்தின் ஆதரவு இருந்து வந்த நிலையில், மோடி இதர பிற்படுத்தப்பட்டவர்களின் வாக்குகளைக்  கொண்டு வந்து சேர்த்தார். 2009இல் பாரதிய ஜனதா கட்சிக்கென்று 22 சதவீதமாக இருந்த இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் ஆதரவு 2014இல் 34 சதவீதம், 2019இல் 44 சதவீதம் என்று அதிகரித்துக் கொண்டே சென்றது. இந்த புள்ளிவிவரங்கள் மோடியின் பாஜக அதிகாரத்திற்கு வந்ததை விளக்குகின்றன. இந்த நிலைமையே முற்றிலும் முரணாக உயர்சாதி அரசியல்வாதிகளின் மறுபிரவேசத்திற்கும் வழிவகுத்துக் கொடுத்தது. 2014 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் ஹிந்தி பகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக எம்.பி.க்களில் உயர்சாதியினர் 45 சதவீதம் பேர் இருந்தனர். பாஜகவின் வேட்பாளர் பட்டியல் மூலமே உயர்சாதியினருக்கு அதிகப்படியான பிரதிநிதித்துவம் கிடைத்தது. பட்டியல் வகுப்பு மற்றும் பட்டியல் பழங்குடியின வேட்பாளர்களை நீக்கி விட்டுப் பார்த்தால், பாரளுமன்றத் தேர்தலில் ஹிந்தி பகுதிகளில் பாஜகவின் ஒட்டுமொத்த பொது வேட்பாளர்களில் 62 சதவீதம் பேர் உயர்சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். அது மற்ற பிற கட்சிகளில் 37 சதவீதம் என்ற அளவிலேயே இருந்தது. 2019இல் மோடியால் அமைக்கப்பட்ட அரசாங்கத்தில் இருந்த 55 அமைச்சர்களில் 47 சதவீதம் பேர் உயர்சாதியினரைச் சேர்ந்தவர்கள், 13 சதவீதம் (ஜாட், பட்டேல், ரெட்டி உட்பட) ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள், 20 சதவீதம் பேர் இதர பிற்படுத்தப்பட்டவர்கள், 11 சதவீதம் பேர் பட்டியல் வகுப்பினர் மற்றும் ஏழு சதவீதம் பேர் பட்டியல் பழங்குடியினர் மற்றும் முஸ்லீம் ஒன்று, சீக்கியர் ஒன்று என்றிருந்தனர்.  

மோடி அரசு இதற்கு இணையாக இடஒதுக்கீடு முறையையும் மாற்றியமைத்திருக்கிறது. முதலாவதாக பொதுத்துறை நிறுவனங்களின் சீர்குலைவு காரணமாக பட்டியல் வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டே வந்துள்ளது. 2014 மற்றும் 2018க்கு இடைப்பட்ட காலத்தில் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யூபிஎஸ்சி) மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட குடிமைப் பணியாளர்களின் எண்ணிக்கை 1,236இலிருந்து 759 ஆக ஏறக்குறைய 40 சதவீத அளவிற்கு குறைந்துள்ளது. இரண்டாவதாக இந்திய நிர்வாக அமைப்பில் பக்கவாட்டு நுழைவு முறை உருவாக்கப்பட்டிருப்பதன் மூலம், ஏற்கனவே இருந்து வருகின்ற ஒதுக்கீடு முறை நீர்த்துப் போகச் செய்யப்பட்டுள்ளது. மூன்றாவதாக 2019ஆம் ஆண்டில் பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவினருக்காக (ஈடபிள்யுஎஸ்) பத்து சதவீத ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியதன் மூலம் பின்தங்கியவர்கள் என்பதற்கான நிலையான வரையறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. பலவீனமாக இல்லாத உயர்சாதியினருக்கு ஒதுக்கீடு செய்து தரப்பட்டுள்ளது (பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவின்கீழ் தகுதிபெற ஆண்டுக்கு ரூ.8,00,000 வருமான வரம்பை நிர்ணயித்திருப்பதன் மூலம் 95 சதவீத உயர்சாதியினரை அரசாங்கம் ஒதுக்கீட்டிற்குத் தகுதி பெற்றவர்களாக்கி உள்ளது).

இதுதவிர பாஜக தலைவர்கள் உயர்சாதியினரின் தார்மீக மேன்மை குறித்து பொதுவெளியில் புகழ்ந்து பேசத் தொடங்கியுள்ளனர். எடுத்துக்காட்டாக மக்களவை சபாநாயகரும், ராஜஸ்தானைச் சேர்ந்த பாஜக தலைவருமான ஓம் பிர்லா ‘மற்ற எல்லா சமூகங்களுக்கும் எப்போதும் வழிகாட்டும் வகையில் பிராமண சமூகம் செயல்பட்டு வருகிறது… தங்கள் பிறப்பின் காரணமாக சமூகத்தில் உயர்ந்த நிலையில் பிராமணர்கள் உள்ளனர்’ என்று அறிவித்தார். பாஜக தலைவர்கள் அசுத்தம் என்ற கருத்தின் மீது தங்களுக்கு இருக்கின்ற நம்பிக்கையைப் பிரதிபலிக்கும் சாதி அடிப்படையிலான வெளிப்பாடுகளையும் காட்சிப்படுத்தி வருகின்றனர். யோகி ஆதித்யநாத் உத்தரபிரதேச முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், அதற்கு முன்னர் அகிலேஷ் யாதவ், மாயாவதி, முலாயம் சிங் யாதவ் ஆகியோரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த மிகப்பரந்த முதலமைச்சரின் பங்களாவைச் சுத்திகரிப்பு செய்வதற்கான சடங்குகளுக்கான விரிவான ஏற்பாடுகளை ஹிந்து பூசாரிகள் செய்தனர்.     

ஹிந்து உயர்சாதியினரின் விழுமியங்களை நடைமுறைப்படுத்த சங்பரிவார் முயன்றது. லவ்ஜிஹாத்திற்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரங்கள் முஸ்லீம்களைக் குறிவைத்து தொடங்கப்பட்டாலும், அதில் கீழ்சாதியினரும் சேர்ந்தே உயிரிழந்தனர்.  இதுவொன்றும் புதியதல்ல. முஸ்லீம்கள் அல்லது தலித் ஆண்களுடன் ஓடிப்போன பட்டேல் சிறுமிகளை இருபது ஆண்டுகளுக்கு முன்பு மீட்டெடுத்த அகமதாபாத்தை தளமாகக் கொண்டு இயங்கி வந்த பஜ்ரங் தளத் தலைவரான பாபு பஜ்ராங்கி அந்த சிறுமிகள் தங்கள் சாதிக்குள்ளேயே திருமணம் செய்து கொள்வதை உறுதி செய்தார். அதேபோன்று  ‘ஹிந்துக்களாக மாற விரும்பும் முஸ்லீம்கள் சுத்திகரிக்கப்படுவார்கள், அவர்களுக்கென்று புதிய சாதி ஒன்றை நாங்கள் உருவாக்குவோம்’ என்று 2014இல் ஆதித்யநாத் அறிவித்தார். அவரது அறிவிப்பு சமூகத்தைக் கட்டமைக்க சாதியைப் பயன்படுத்திக் கொள்வதற்கான தெளிவான எடுத்துக்காட்டாகவே இருந்தது.      

இதேபோன்று தோல் பதனிடும் வேலைகளைச் செய்த தலித்துகளை பசு பாதுகாவலர்கள் தாக்கினர். 2016ஆம் ஆண்டில் உனாவில் (மீண்டும் குஜராத்), பசுவைப் படுகொலை செய்ததாகக் கூறிய ஹிந்து விழிப்புணர்வாளர்கள் உயிரற்ற மாட்டின் தோலை உரித்துக் கொண்டிருந்த தலித் தொழிலாளர்களைத் தாக்கினர். வேறொரு மதத்திற்கு மாறியிருந்த ஹிந்து தலித்துகளை மீண்டும் மதம் மாற்றுவதற்கும் இதேபோன்றதொரு பங்கை விழிப்புணர்வு குழுக்கள் ஆற்றின. கர்வாப்சி இயக்கமும் தலித்துகளைப் பாதித்தது. எடுத்துக்காட்டாக 2018ஆம் ஆண்டில் உத்தரப்பிரதேசத்தில் பஜ்ரங்தள் செயற்பாட்டாளர்கள் முஸ்லீமாக மாறிய இளம் தலித் ஒருவரை மீண்டும் மதம் மாற்றியதாகக் கூறப்படுகிறது.  

இதை விழிப்புணர்வாளர்கள் இதற்கு முன்னரே செய்திருந்த போதிலும், இப்போது மதமாற்றத்திற்கு எதிரான, இறைச்சிக் கூடங்களை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டங்கள் புதிதாகக் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. மீண்டும் தாக்குதலுக்குள்ளாகும் நிலைமையிலேயே தலித்துகள் இருந்து வருகின்றனர்.  குஜராத்தில் பௌத்த மதத்திற்கு மாற விரும்புவோர் 2003 முதல் மாவட்ட நீதிபதியின் அனுமதியைப் பெற வேண்டும். உத்தரப்பிரதேசத்திலும் லவ்-ஜிகாத் எதிர்ப்பு அவசரச் சட்டத்தின் விளைவாக அதே போன்றதொரு பிரச்சனை ஏற்படுமா என்பதைப் பார்க்க வேண்டும். அரசின் போக்கு இதுபோன்ற சட்டங்கள், அவசரச் சட்டங்கள் ஆகியவற்றில் மட்டுமல்லாது காவல்துறையினரின் நடத்தையிலும்கூட வெளிப்படுகின்றது. இந்த பரிணாம வளர்ச்சியை நன்கு விளக்குவதாகவே நகர்ப்புற நக்சல்கள் என்று அழைக்கப்படுவர்களுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கியிருக்கும் அரசால் தலித்துகள் இவ்வாறு தனிமைப்படுத்தப்படுகின்ற விதம் இருக்கிறது.   

பீமா-கோரேகான் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவருடைய வீட்டில் தேடுதலை மேற்கொண்ட காவல்துறையினர் ‘உங்கள் வீட்டில் பூலே, அம்பேத்கர் ஆகியோரின் படங்கள் உள்ளன. ஆனால் தெய்வங்களின் படங்கள் எதுவும் ஏன் இல்லை?’ என்று அவரிடம் அப்போது கேட்டதாகக் கூறப்பட்டது. மேலும் குற்றம் சாட்டப்பட்டவரின் மகளிடம்  ‘உங்கள் கணவர் ஒரு தலித், எனவே அவர் எந்தவொரு பாரம்பரிய வழக்கத்தையும் பின்பற்றுவதில்லை. ஆனால் பிராமணராக இருக்கின்ற நீங்கள் ஏன் நகைகள் அல்லது குங்குமப் பொட்டு அணியாமல் இருக்கின்றீர்கள்? பாரம்பரியமான மனைவியைப் போன்று ஏன் நீங்கள் ஆடை அணியவில்லை?’ என்ற கேள்விகளை அவர்கள் எழுப்பினார்கள்.    

ஆக பாஜக அதிகாரத்தில் அமர்ந்திருப்பது மண்டலுக்குப் பிந்தைய எதிர்புரட்சியாக மட்டுமல்லாமல், உயர்சாதி அரசியலை, கொள்கைகளை  மீண்டும் கொண்டு வருவதற்கு உதவியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், அரசு ஊக்குவித்து வருகின்ற சட்டத்திற்குப் புறம்பான விழிப்புணர்வு வழியாக உயர்சாதி நடைமுறைகள் மற்றும் நெறிமுறைகளைக் கொண்டு வருவதற்கும் துணை போயிருக்கிறது. தன்னுடைய அரசியல் அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்ட கட்டுப்பாட்டு பாணியைக் கடைப்பிடித்து ஆர்எஸ்எஸ் பாரம்பரியத்துடன் மிகவும் பொருந்தக்கூடிய சமூக ஒழுங்கு அமல்படுத்தப்படுவதை எடுத்துக்காட்டுவதாகவே இந்த புதிய ஒழுங்குமுறை இருக்கிறது.    

https://indianexpress.com/article/opinion/columns/hindu-nationalism-mandal-commission-upper-caste-politics-modi-govt-7181746/?fbclid=IwAR28Hp6YlSDhKXkJoFL49OsANRlnNAnNiujir3BxeWruxt-DfJMd5IhSVdU

கிறிஸ்டோஃப் ஜாஃப்ரலோட்

நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்

2021 பிப்ரவரி 10

தமிழில்: தா.சந்திரகுரு

 

;