தமிழகம்

img

தேசியக்கல்விக்கொள்கையைக் திணிக்க தே.கல்லுப்பட்டியில் ரகசியக் கூட்டம்

மதுரை:
ஏழை-எளிய மக்களின் கல்வி உரிமையைப் பறிக்கும் வரைவு தேசியக் கல்விக்கொள்கை-2019-ஐ எப்படித் திணிப்பது என்பது குறித்த  ரகசியக்கூட்டம் மதுரை மண்டலப் பணிமனை என்ற பெயரில் மதுரையிலிருந்து சுமார 35 கி.மீ தொலைவிலுள்ள தே.கல்லுப்பட்டியில்  கள்ளிக்குடி சாலையில் ஆள்அரவமற்ற இடத்தில் உள்ள  மாவட்ட ஆசிரியர் கல்விமற்றும் பயிற்சித்துறை கல்லூரியில் வெள்ளியன்று நடைபெற்றது.

மதுரை மண்டலப் பணிமனைக் கூட்டம் என்ற பெயரில் நடைபெற்ற ரகசியக் கூட்டத்தில்கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த தேர்வு செய்யப்பட்ட மாவட்டக் கல்விஅலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள், மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் என 100 பேர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில்  மாநில கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவன (scert) இயக்குநர் முத்துபழனிச்சாமி, இணை இயக்குநர் ஜெயக்குமார், பேராசிரியர் ஆசிர் ஜூலியஸ் மற்றும் நான்கு உதவிப்பேராசிரியர்கள், மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் கலந்துகொண்டுபெரிய திரையில் கணினி மூலம் வரைவு தேசியக் கல்விக்கொள்கை-2019-ஐ விளக்கினர்.மூன்று அமர்வுகளாக இந்தக் கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து கலந்து கொண்டவர்களிடம் கருத்துக் கேட்கப்பட்டது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு
கூட்டம் நடைபெறும் தகவலறிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் முருகன், சி.மணிகிருஷ்ணன் ஆகியோர் விரைந்து வந்து தாங்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று கருத்துக்களை பதிவு செய்ய வேண்டுமென உசிலம்பட்டி காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ராஜாவிடம் முறையிட்டனர். அவர் அதற்கு அனுமதி மறுத்ததோடு இது பொதுமக்களுக்கான கூட்டமோ, சாமானியர்களுக்கான கூட்டமோ அல்ல அதிகாரிகள் பங்கேற்றுள்ள கூட்டம் என கல்விக்கொள்கையைப் பற்றி முழுமையாக அறிந்தவர் போல் வியாக்கியானம் செய்தார்.

வாலிபர் சங்கம் முற்றுகை
வாலிபர் சங்கத்தின் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் கார்த்திக், மாநகர் மாவட்டத் தலைவர் பி.கோபிநாத், மாவட்டச்செயலாளர் செல்வா, மாவட்டப் பொருளாளர்பார்த்தசாரதி, மாவட்டத் துணைச் செயலாளர் பாவெல்சிந்தன், மாவட்டக்குழு உறுப்பினர்குரோனி செந்தில் உட்பட ஏராளமானோர் ரகசியக்கூட்டம் நடைபெற்ற கல்லூரியை முற்றுகையிட்டனர். அவர்களும் தங்களது கருத்துக்களை கூட்டத்தில் பதிவு செய்யவேண்டுமென காவல்துறையிடம் வலியுறுத்தினர். துணைக் கண்காணிப்பாளர் ராஜா பாடிய பல்லவியையே திரும்பப் பாடினார். கடைசியில், கூட்டத்தில் பங்கேற்றிருந்த இயக்குநர்களில் ஒருவரான ஆசிர் ஜூலியஸ் என்பவரைஅழைத்து வந்தனர். அவரோ, “இது பணிமனைக்கூட்டம்” பொதுமக்களுக்கான கருத்துக்கேட்புக் கூட்டமல்ல என வாலிபர்சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களிடம் கூறினார். அவரது கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்த தலைவர்கள் இப்படித்தான் திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், சென்னை உள்ளிட்ட  நகரங்களில் நடத்தப்பட்டுள்ளது. பகிரங்கமாக நடத்த வேண்டிய கூட்டத்தை ரகசியமாக நடத்துவது ஏன் என சரமாரியாக கேள்வியெழுப்பினர். இயக்குநரோ அரசு சொல்லிக்கொடுத்து அனுப்பியதை அச்சரம் பிசகாமல் திரும்பத் திரும்ப கூறினார்.
கருத்துக்கேட்புக் கூட்டத்திற்கான காலக்கெடு ஜூலை 30-ஆம் தேதியோடு நிறைவடையும் நிலையில் பொதுமக்களிடம் எப்போது கருத்துக் கேட்பீர்கள் என கேள்வியெழுப்பினர். ஆனால், பேச்சுவார்த்தை நடத்தியஅதிகாரி எதைஎதையோ கூறி சமாளித்தார்.இதைத் தொடர்ந்து வாலிபர் சங்கத்தினர் ஆசிர் ஜூலியஸிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதில், பொதுமக்களிடமும் கருத்துக்கேட்புக்கூட்டம் நடத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, வாலிபர் சங்க புறநகர் மாவட்டச் செயலாளர் கார்த்திக், பணிமனைக் கூட்டம் என்ற பெயரில்அதிகாரிகளை வைத்து ரகசியக் கூட்டம் நடத்துகின்றனர். ஜூலை 30-ஆம் தேதிக்குள்மாணவர்கள், பேராசிரியர்கள், சமூக ஆர்வலர்களிடம் கருத்துகேட்புக் கூட்டங்களை மத்திய அரசு நடத்த வேண்டும். இந்தக் கூட்டத்தை கருத்துக்கேட்புக் கூட்டமாக கணக்கில் கொள்ளக்கூடாது. பொதுமக்கள், அரசியல் கட்சிகள், சமூக நல அமைப்புகள் பங்கேற்கும் பொது கருத்துக்கேட்புக்கூட்டம் குறித்து தகவல் ஏதுமில்லை என்கிறார் அதிகாரி. ஏமாற்றநினைத்தால் மாநில அளவில் மறியல் போராட்டம் நடைபெறும் என்றார்.

எந்த ஒரு கூட்டமென்றாலும் மதுரை மாநகரில் நடத்துவதைத் தான் அரசு வழக்கமாகக் கொண்டிருக்கும். இந்த ரகசியக் கூட்டத்தை  மதுரையில் நடத்தினால் கடும் எதிர்ப்பைச் சந்திக்க நேரிடும் என்ற பயத்தாலும் யாரும் எளிதில் வந்துவிடக்கூடாது என்பதை மனதில்கொண்டும் 40 கி.மீ. தொலைவில் உள்ள தே.கல்லுப்பட்டியில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.பொதுவாக அரசுத்துறை அதிகாரிகளின் கூட்டமென்றால் அதற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்படுவதில்லை. அதிகாரிகளும் பாதுகாப்பு கேட்பதில்லை. ஆனால், இந்தக் கூட்டத்திற்கு உசிலம்பட்டி காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் இராஜா தலைமையில் காவல்துறையினர் கூட்டம் நடைபெறுமிடத்தில் குவிக்கப்பட்டிருந்தனர். அதிகாரிகள் கூட்டமென்றால் ஏன் காவல்துறையினர் குவிக்கப்பட வேண்டுமென்பதற்கு யாரிடமிருந்தும் பதில் கிடைக்கவில்லை.

நமது நிருபர்
 

;