வெள்ளி, ஆகஸ்ட் 7, 2020

தமிழகம்

img

ஆக.4-ல் மாநிலம் முழுவதும் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்....

சென்னை:
கொரோனா தொற்று பரவி வருவதால் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நோய் எதிர்ப்பு மாத்திரைகள் வழங்க வேண்டும்.  டாஸ்மாக் நிறுவன ஊழியர்கள் அனைவருக்கும் ரூ.50 லட்சம் காப்பீடு செய்திட வேண்டும் என்று வலியுறுத்தி  ஆகஸ்ட் 4 ஆம் தேதி மாநிலம் முழுவதும் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் (சிஐடியு) மாநிலப் பொதுச்செயலாளர்  கே.திருச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளன நிர்வாகிகள் கூட்டம் ஜூலை 9  அன்று சம்மேளனத் தலைவர்  கே.பழனிவேலு தலைமையில் நடைபெற்றது.இதில் டாஸ்மாக் ஊழியர் பிரச்சனைகளில் தமிழக முதல்வர் தலையிடக் கோரியும், நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஊழியர்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி ஆகஸ்ட் 4 ஆம் தேதி அனைத்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று  தீர்மானிக்கப்பட்டது.
கொரோனா நோய்தொற்று டாஸ்மாக் கடைகளில் பரவி ஊழியர்கள் பாதிக்கப்படுகிற நிலைமையை கருத்தில் கொண்டு அனைத்து கடைகளுக்கும் தேவையான தரமான முகக்கவசம், கையுறை, கிருமி நாசினி மற்றும் தெர்மல் கருவி உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை காலதாதமின்றி நிர்வாகம் வழங்க வேண்டும். ஜிங்க், வைட்டமின் நோய் எதிர்ப்பு மாத்திரைகளை நிர்வாக ஏற்பாட்டில் அனைத்து ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும். கொரோனா தொற்றுக்கு ஆளாகும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு உரிய சிகிச்சைக்கான ஏற்பாட்டை நிர்வாகம் ஏற்றுக் கொள்ள வேண்டும். நோய் தொற்று கண்டறியப்பட்ட கடைகளில் உள்ள அனைத்து ஊழியர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் பரிசோதனை செய்தவற்கு நிர்வாகம் தனி கவனம் செலுத்த வேண்டும்.
டாஸ்மாக் நிறுவன ஊழியர்கள் அனைவருக்கும் ரூ50 லட்சம் காப்பீடு செய்திட வேண்டும். மருத்துவ சிகிச்சைக்கான செலவினங்களுக்கு உச்சவரம்பு நீக்கப்பட்டு முழு தொகையும் வழங்க வேண்டும்.

கொரோனா ஊரடங்கினால் கடைகளின் பாதுகாப்பு கருதி நிர்வாக ஏற்பாட்டில் கிடங்கு மற்றும் தனியார் மண்டபங்களுக்கு சரக்குகள் கொண்டு செல்லப்பட்ட போது டாஸ்மாக் அதிகாரிகள், காவல்துறையினர், மதுக்கூட உரிமதாரர்கள், கட்டிட உரிமையாளர், வருவாய் துறையினர் மற்றும் பத்திரிகையாளர்கள் பல தரப்பினர் அதிகாரத்தை பயன்படுத்தி ஊழியர்களை மிரட்டி சரக்குகளை எடுத்தது,  கிடங்குகள் மற்றும் திருமண மண்டபங்களில் நிர்வாக கண்காணிப்பில் இருந்த சரக்குகள் குறைவு ஏற்பட்டது என மாவட்டங்களில் நடைபெற்ற சம்பவங்கள் மீது உரிய விசாரணை நடத்திட வேண்டும்.

கடை ஆய்வு என்ற பெயரில் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வரும் மண்டல, மாவட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கடைகளில் மாமூல் தராத ஊழியர்களை குறி வைத்து பழிவாங்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தெற்கு ஆசியாவிலேயே மிகச் சிறந்த மருத்துவ திட்டமான மத்திய அரசின் இஎஸ்ஐ மருத்துவ திட்டத்தைவிட கூடுதலான மருத்துவ திட்டங்களை ஊழியர்கள் அனுபவித்து வருவதாக கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்குவதும்,கையெழுத்து போட மறுக்கும் கடைகளுக்கு சரக்குகள் அனுப்பப்படமாட்டாது என மாவட்ட மேலாளர்கள் மிரட்டுவதுமான நிர்வாகத்தின் நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;