ஒவ்வொரு கணக்கெடுப்பிலும் எங்களை தீக்குளிக்கச் சொல்கிறீர்கள்! ஒன்றிய அரசு மீது திமுக எம்.பி., ராசாத்தி (சல்மா) குற்றச்சாட்டு
13 Dec 2025, 4:23 pm

ஒவ்வொரு கணக்கெடுப்பிலும் எங்களை தீக்குளிக்கச் சொல்கிறீர்கள்! ஒன்றிய அரசு மீது திமுக எம்.பி., ராசாத்தி (சல்மா) குற்றச்சாட்டு

புதுதில்லி, டிச. 13- ஒவ்வொரு விவாதத்திலும், ஒவ்வொரு கணக்கெடுப்பிலும் எங்களை தீக்குளிக்கச் சொல்கிறீர்கள் என்று ஒன்றிய அரசு மீது திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநிலங்க ளவை உறுப்பினர் ராசாத்தி (சல்மா) குற்றம் சாட்டினார். நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. வந்தேமாதரம் பாடலின் 150ஆண்டைக் கொண்டாடும் விதத்தில் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு ராசாத்தி (சல்மா) அவரது முதல் உரையை துவக்கினார். அவர் பேசும் போது, இந்தியா ஒரே மதத்தினால் ஒன்றாக வில்லை. நியாயத்தால், சமத்துவத்தால், சமூக நல்லிணக்கத்தால், மனிதநேயத்தால்தான் ஒன்றாக இருக்கிறது. “வந்தே மாதரம் பற்றி நாம் முடிவில்லா விவாதத்தில் சிக்கிக்கொண்டிருக்கும்போது, இந்தியா எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சனைகள், உண்மையான ஒற்றுமை பற்றிய சவால்கள் என்ன?” மற்றும் “எப்படி நம் நாட்டை உண்மையாக ஒன்றுபட்ட நாடாக மாற்றலாம்?” இந்த விவாதம், இந்த நாட்டின் ஒற்று மைக்காக கொண்டு வரப்பட்ட விவாதமல்ல.

வரவிருக்கும் மேற்கு வங்க தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸையும் ஜின்னாவையும் குற்றம் சாட்டும் பழைய பிரிவினை அரசி யலை மீண்டும் உயிர்ப்பிக்க முயல்கிறது. உண்மையான பிரச்சனைகள் இருக்கும் போது, தேர்தல் நன்மைக்காக ‘வந்தே மாதரம்’ விவாதத்தை எழுப்புவது மக்கள் கவனத்தைத் திசை திருப்புவதற்கான அரசியல் நாடகம் தவிர வேறொன்றும் இல்லை. ‘வந்தேமாதரம்’ ஆனந்தமடம் என்ற நாவலில் உள்ள பாடல் என்பதை இந்த அவை நினைவில் கொள்ள வேண்டும். எங்களை தீக்குளிக்கச் சொல்கிறீர்கள் இந்தியா-பாகிஸ்தான் என இரு நாடு களாகப் பிரிந்தபோது, இஸ்லாமியர்க ளுக்கான எங்களுக்கும் ஒரு நம்பிக்கை இருந்தது. இந்தியாதான் எங்கள் தாய் நாடு. நாங்கள் இங்குதான் குடியிருப்போம் என்று தீர்மானகரமான முறையில் முடிவெடுத்து எங்கள் முன்னோர்கள் இந்தியாவில் அவர்கள் வாழ்வைத் தொடர்ந்தனர். பெரும்பான்மை சமூகத்தினர் எங்கள் சகோதரர்கள் என்ற நம்பிக்கையில்தான் எங்கள் குடும்பங்கள் இங்கு தொடர்ந்து வசித்தன.

ஆனால் ஒவ்வொரு விவாதத்திலும், ஒவ்வொரு கணக்கெடுப்பிலும் எங்களைத் தீக்குளிக்கச் சொல்கிறீர்கள். எங்களின் நாட்டுப்பற்றைச் சந்தேகப்படுகிறீர்கள். அதை நாங்கள் உங்க ளுக்கு நிரூபித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். நம் உள்துறை அமைச்சர் அமித் ஷா குழந்தைகளுக்கு வந்தே மாதரம் மூலம் நாட்டுப்பற்று உணர்வுகளை ஊட்டவேண்டும் என்று சொல்கிறார். தேசிய குடும்ப சுகாதார ஆய்வறிக்கையின்படி இந்தியாவில் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 35 சதவீதத்தினர் ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இப்போது தேவைப்படுவது நாட்டுப்பற்று உணர்வு மட்டு மல்ல, குழந்தைகளுக்கு உணவு, ஊட்டச்சத்து, மருத்துவ பராமரிப்பு மற்றும் பாதுகாப்பான வளர்ச்சியாகும். நேருவின் பின்னால் ஒளிந்து கொண்டு... எப்பொழுதெல்லாம் இந்த நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்படுகிறதோ, பிரச்ச னைகள் எழுகிறதோ, அப்பொழுதெல்லாம் நீங்கள் ஓடி ஒளியும் ஒரேயொரு இடம் நேரு, முஸ்லிம்கள். இந்த முறை ஜின்னா.

உங்களுடைய கூற்றின்படியே நேருவின் பின்னால் நீங்கள் ஒளிந்து கொண்டு இந்த ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிறீர்கள்; கேடயமாக அவரை உங்களை பாதுகாக்க வைத்துக்கொள்ளுகிறீர்கள். இந்த நாட்டின் விடுதலைக்காக நேரு பல ஆண்டுகள் சிறையில் இருந்தார். பெ. சுந்தரம் பிள்ளை எழுதிய மனோன் மணியம் பாடலை, தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிமுகப்படுத்தியபோது, கலைஞர் அவர்கள் அதில் வரும் “ஆரியம்போல் வழக்கொழிந்து” என்ற வரியை நீக்கிவிட்டு, அந்தப் பாடலை நம் தமிழ்த்தாய் வாழ்த்தாக வடிவமைத்தார். எந்த ஒரு மக்களையும் இழிவுபடுத்தக் கூடாது, அனைவரும் சமம். யாருடைய மனமும் புண்படக் கூடாது என்பதற்காக அந்தச் சொற்களை நீக்கினார். எங்களுக்கும் ஒரு கனவு... மார்ட்டின் லூதர் கிங் அவர்கள் தனது பிரசித்த பெற்ற உரையில் “எனக்கு ஒரு கனவு இருக்கிறது” என்று கூறியிருந்தார். தலைவர் அவர்களே, எங்களுக்கும் ஒரு கனவு இருக்கிறது. இந்த நாட்டில் சக மனிதர்களோடு, சகோதரர்களோடு, இந்த நாட்டின் குடி மக்களாக ஒற்றுமையாக இணைந்து பயணிக்க வேண்டும். இந்த நாட்டை அடுத்த கட்ட முன்னேற்றத்துக்கு எடுத்துச்செல்ல வேண்டும் என்பதே அந்தக் கனவு. இவ்வாறு ராசாத்தி பேசினார். (ந.நி.)