மனித உறவுகளின் மெல்லிய ஏக்கங்களின் தொகுப்பு
31 May 2026, 8:21 pm

மனித உறவுகளின் மெல்லிய ஏக்கங்களின் தொகுப்பு

இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர் வா. ஸ்டாலின் எழுதிய “ஏன்டி சொல்லாம விட்டோம்” என்ற சிறுகதைத் தொகுப்பு, சமகாலத் தமிழ் இலக்கியத்தில் விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வியலைப் பேசும் ஒரு குறிப்பிடத்தக்க படைப்பாகும். தென் மாவட்டமான இராமநாதபுரத்தின் வறட்சி, கடல் சார்ந்த எதார்த்தங்கள், அந்த மண்ணின் வாசனை மற்றும் பேச்சு வழக்கு ஆகியவற்றை மையமாகக் கொண்டு இக்கதைகள் நகர்கின்றன.

“ஏன்டி சொல்லாம விட்டோம்” என்ற தலைப்பே ஒருவித ஏக்கம் நிறைந்த தேடலை வாசகர்களுக்கு உணர்த்துகிறது. நம் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து பக்கத்து வீட்டுக்காரர் கதை சொன்னால் எப்படி இருக்குமோ, அத்தகைய அணுக்கமான எதார்த்தக் கதைசொல்லல் முறையை ஆசிரியர் கையாண்டுள்ளார். இத்தொகுப்பில் பெண்களின் மன உணர்வுகளுக்குப் பெருமளவு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

சமூகம் மற்றும் குடும்பக் கட்டமைப்பிற்குள் பெண்கள் தங்களுக்குள் புதைத்து வைத்திருக்கும் ஏக்கங்களை ஆசிரியர் மென்மையாகத் தொட்டுச் செல்கிறார். மாற்று மதத்தைச் சேர்ந்த இரு தோழிகள், தங்களின் குழந்தைப் பருவம் தொட்டுத் திருமணம் கடந்து, பிள்ளைகள் பெற்ற காலம் வரை தங்களின் நட்பைத் தொடர்கிறார்கள்.

அவர்கள் இருவரும் தங்கள் வாழ்வில் சந்தித்த சில முக்கியக் கடந்து வந்த விஷயங்களை, தங்களது கணவன்மார்களிடமும் குழந்தைகளிடமும் “ஏன் சொல்லாமல் விட்டோம்?” என்று ஏங்கும் இடமே கதையின் மையப்புள்ளியாகும்.

சரியான நேரத்தில் பேசப்படாத ஒரு வார்த்தை, மனிதர்களின் வாழ்க்கையை எப்படியெல்லாம் மாற்றியமைக்கிறது என்பதை ஆசிரியர் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார்.

அதோடு நில்லாமல், சமூகத்தில் நிலவும் மூடநம்பிக்கைகள், மனித உறவுகளின் ஆழம், சமூகக் கட்டுப்பாடுகள், மனிதநேயத்தின் தேவை மற்றும் பெண் கல்வியின் அவசியம் குறித்தும் ஆசிரியர் மிகவும் நுட்பமாக விவாதித்துள்ளார்.

வட்டார வழக்கை இயல்பாகப் பயன்படுத்தியிருந்தாலும், பிற பகுதி வாசகர்களும் எளிதில் புரிந்து கொள்ளும் ஆழமான தமிழ் நடையில் இக்கதைகள் செதுக்கப்பட்டுள்ளன.

மனித மனங்களின் மெல்லிய உணர்வு களையும், ராமநாதபுரத்து எளிய மக்க ளின் வாழ்வாதாரப் போராட்டங்களை யும் ரசிக்க விரும்பும் ஒவ்வொருவரும் அவசியம் வாசிக்க வேண்டிய ஈரமான நினைவுகளின் தொகுப்பு இந்நூல்.

ஏன்டி சொல்லாம விட்டோம்? ஆசிரியர்: வா. ஸ்டாலின் வெளியீடு: மசிவன் பதிப்பகம், ஆயந்தூர் விலை: ₹150 தொடர்புக்கு: 9486069548