சாகித்ய அகாடமி விருது நிறுத்திவைப்பு ஒன்றிய அரசுக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் கடும் கண்டனம்
31 Dec 2025, 3:37 pm
<p><strong>சாகித்ய அகாடமி விருது நிறுத்திவைப்பு ஒன்றிய அரசுக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் கடும் கண்டனம்</strong></p>
<p>சென்னை, டிச.31 – சாகித்ய அகாடமி விருது அறிவிப்பை ஒன்றிய அரசு திடீரென நிறுத்திவைத்திருப்பதற்குக் கண்டனம் தெரிவித்து, தமிழகத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். அதிர்ச்சியளிக்கும் நடவடிக்கை தமிழில் எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வனுக்கு அறிவிக்கப்பட்ட விருது உட்பட, இந்தியாவின் 24 மொழிகளிலும் விருது பெறுவோரின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டு, கடந்த டிசம்பர் 18-ஆம் தேதி அறிவிக்கப்பட இருந்தன. ஆனால், ஒன்றிய கலாச்சார அமைச்சகம் இதில் தலையிட்டு அறிவிப்பை நிறுத்திவைத்துள்ளது. இது சாகித்ய அகாடமி போன்ற சுதந்திரமான கலாச்சார அமைப்பின் மீது நடத்தப்படும் தாக்குதல் என அக்கூட்டறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தன்னாட்சி அதிகாரம் பறிப்பு கடந்த 10 ஆண்டுகளில் நீதித்துறை, தேர்தல் ஆணையம் போன்ற தன்னாட்சி அமைப்புகளைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பாஜக அரசு, தற்போது கலை மற்றும் இலக்கிய அமைப்புகளையும் முடக்கப் பார்ப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. “விருதுக்குரியவர்களை இனி கலைத் தொடர்பில்லாத அதிகாரிகளா தேர்ந்தெடுக்கப்போகிறார்கள்?” என்ற அச்சத்தையும் அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை கேரள சாகித்ய அகாடமி போல, தமிழுக்கெனத் தனித்துவமான, அரசியல் தலையீடு இல்லாத ஒரு தன்னாட்சி அமைப்பைத் தமிழ்நாடு அரசு உருவாக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். படைப்பு, விமர்சனம், ஆய்வு மற்றும் இளம் எழுத்தாளர் என நான்கு பிரிவுகளில் மேன்மையான விருதுகளை மாநில அளவிலேயே வழங்க வேண்டும் என்றும், லலித் கலா அகாடமி போல நுண்கலைகளுக்கும் தனியே அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒப்பமிட்ட முக்கிய ஆளுமைகள் இந்தக் கூட்டறிக்கையில் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்கள் வண்ணதாசன், இமையம், கவிஞர் தேவதேவன், அ. மார்க்ஸ், பெருமாள் முருகன், கனிமொழி கருணாநிதி எம்பி, ஓவியர் புகழேந்தி, இயக்குநர்கள் வசந்தபாலன், அஜயன் பாலா மற்றும் நூற்றுக்கணக்கான படைப்பாளிகள் கையெழுத்திட்டுள்ளனர்.</p>
<p> </p>
