எழுத்தாளர் பூமணியின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்!
yesterday

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணியின் உடல் இன்று ஆண்டிப்பட்டியில், 30 குண்டுகள் முழங்க செய்து அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி, கடந்த 12-ஆம் தேதி உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவரது உடல், நேற்று ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி பாரதி நகரில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து, இறுதி நிகழ்வுகளுக்காக பிற்பகல் 2 மணிக்கு பூமணியின் உடல் அவரது சொந்த ஊரான கோவில்பட்டி அருகே ஆண்டிப்பட்டிக்கு கொண்டு வரப்பட்டது.

அங்கு, எழுத்தாளர் பூமணியின் உடலுக்கு அரசு சார்பில் அமைச்சர் பெ.மதன்ராஜா, மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கா.கருணாநிதி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். போலீசார் சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சரவணன் தலைமையிலான 10 காவலர்கள் வானத்தை நோக்கி 3 சுற்றுக்களாக 30 குண்டுகள் முழங்க செய்து, அரசு மரியாதை செலுத்தினர். இதை தொடர்ந்து அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.