தீக்கதிர் உலக செய்திகள்
10 Nov 2026, 9:59 pm

இஸ்ரேல் எதிர்கட்சிக்கு கம்யூனிஸ்ட் கட்சி எச்சரிக்கை

நேதன்யாகுவை ஆட்சியில் இருந்து அகற்ற அரபு கட்சிகளுக்கும் சியோனிஸ்ட் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே ஒரு தற்காலிக உடன்படிக்கை உருவாக்க வேண்டும் என்று இஸ்ரேல் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. ராம் மற்றும் ஜாயிண்ட் லிஸ்ட் அரபுக் கட்சிகள் கூட்டணியின் ஆதரவு இல்லாமல் எதிர்கட்சி தலைவரான காடி ஐசன்காட்டினால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது. அரபுக்கட்சிகளுடன் கூட்டணி சேர மறுத்து எதிர்க்கட்சிகள் செய்யும் தாமதத்தையும் தயக்கத்தையும் நேதன்யாகு தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வார் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

வலது மற்றும் இடதுசாரி வேட்பாளர்கள் : பிரான்ஸ் தேர்தலில் முன்னிலை

பிரான்ஸ் நாட்டில் அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பான கருத்துக்கணிப்புகளில் தீவிர வலதுசாரித் தலைவர் மரின் லீ பென் மற்றும் தீவிர இடதுசாரித் தலைவர் ஜீன்-லுக் மெலஞ்சான் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இம்மானுவேல் மக்ரானின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், நாட்டின் மோசமான பொருளாதார நெருக்கடி நிலைமைகளும் அரசியல் சூழலும் வலது மற்றும் இடதுசாரி கட்சிகளுக்கு சாதகமாக மாறியுள்ளது. இதனால் அந்நாட்டு தேர்தல் களம் பரபரப்பாக உள்ளது.

ஈரானுடன் வலுவான உறவு : தொடர சீனா விருப்பம்

மேற்காசிய நாடுகளுக்கான சீனாவின் சிறப்புத் தூதர் ஜாய் ஜுன் ஈரானுடன் வலுவான உறவுகளைத் தொடர சீனா விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். ஈரானின் தேசிய பாதுகாப்பு அமைப்பின் துணைச் செயலாளர் அலி பகிரி கானியைச் சந்தித்து பேசிய போது இத்தகவலை தெரிவித்துள்ளார். மேற்காசிய நாடுகளில் நிலவும் போர்ப் பதற்றத்தைத் தணிக்கும் முயற்சிகளை சீனா தீவிரப்படுத்தி வருகிறது. இதன் பின்னணியில் ஈரான், ஓமான் மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு சீன தூதர் ஜாய் ஜுன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

கியூப அமைச்சர் சீனாவுக்கு பயணம்

கியூபா வெளியுறவுத்துறை அமைச்சர் புரூனோ ரோட்ரிக்ஸ் சீனாவுக்கு அதிகாரப்பூர்வமான பயணம் மேற்கொள்கிறார். கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராகவும் அந்நாட்டின் சிறப்புத் தூதராகவும் இவர் உள்ளார். செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை இவர் சீனாவில் முக்கிய அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்த சந்திப்பில் அமெரிக்காவின் தடைகளால் கியூபாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்து விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது.

‘நாடு திரும்பினால் மரண தண்டனை’

ஷேக் ஹசீனா இந்தியாவில் இருந்து வங்கதேசத்துக்கு திரும்பி வந்தால் அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை தீர்ப்பு நிறைவேற்றப்படும் என்று அந்நாட்டின் அரசு வழக்கறிஞர் எச்சரித்துள்ளார். வங்கதேசத்தில் மாணவர்கள் இளைஞர்களின் பெரும் போராட்டத்தை தொடர்ந்து ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். எனினும் தான் டிசம்பர் மாதம் வங்கதேசம் திரும்புவேன் என அவர் கூறி வருகிறார். இந்நிலையில் தான் வங்கதேச அரசு வழக்கறிஞர் எம்.அமினுல் இஸ்லாம் ஷேக் ஹசீனா மரண தண்டனையை எதிர்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என கூறியுள்ளார்.

உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட தென்னாப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சி

271 இடங்களை வென்று சாதனை

கேப் டவுன்,நவ.10- தென்னாப்பிரிக்காவில் கடந்த நவம்பர் 4 அன்று உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில், முதன்முறையாகத் தென்னாப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சி தனித்துப் போட்டி யிட்டு சுமார் 271 நகராட்சி கவுன்சில் இடங்களையும் 2.39 சதவிகித வாக்குகளையும் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

பல ஆண்டுகளாக ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியின் ஒரு பகுதியாகவே பிரச்சாரம் செய்தும் போட்டியிட்டும் வந்த கம்யூனிஸ்ட் கட்சி, தற்போது தனித்துப் போட்டியிட்டுப் பெற்றுள்ள இந்த வெற்றி, அந்நாட்டு அரசியலில் அக்கட்சிக்கு முக்கியமான வெற்றியாக உருவாகியுள்ளது. தேர்தல் முடிவுகள் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை. முழு முடிவுகள் வரும் போது எண்ணிக்கை அதிகரிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் இத்தேர்தலில் 31 சதவிகித வாக்குகள் மட்டுமே பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளது. எனினும் அக்கட்சி வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மிக மோசமான பின்னடைவையும் சந்தித்துள்ளது. 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளுடன் ஒப்பிடும்போது, ஏ.என்.சி கட்சியின் வாக்கு சதவீதம் சுமார் 14 புள்ளிகள் வரை சரிந்துள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் அக்கட்சி போதிய பெரும்பான்மை பெற முடியாமல் கூட்டணி ஆதரவுடன் ஆட்சி நடத்தி வரும்நிலையில், இந்த முடிவுகள் அக்கட்சிக்கு மீண்டும் ஒரு பின்னடைவாக உள்ளது. நாட்டின் தற்போதைய மோசமான நெருக்கடி சூழ்நிலையால் அதிருப்தி அடைந்த வாக்காளர்கள், மைய வலதுசாரி கட்சியான டெமாக்ரடிக் அலையன்ஸ் (DA), முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஜுமாவின் எம்.கே கட்சி, கம்யூனிஸ்ட்களின் பக்கம் திரும்பியுள்ளனர். டெமாக்ரடிக் அலையன்ஸ் சுமார் 22.9 சதவீத வாக்குகளுடன் நாட்டின் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. அந்நாட்டின் தலைநகரான கேப்டவுனில் இக்கட்சி தனிப்பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஜுமாவின் எம்.கே கட்சி சுமார் 9.9 சதவீத வாக்குகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள், குறிப்பாக வலது சாரிகளும் எதிர்க்கட்சியுமான ‘டெமாக்ரடிக் அலையன்ஸ்’ உடன் இணைந்து கூட்டணி அரசாங்கத்தை உருவாக்கியது உள்ளிட்ட பல்வேறு கொள்கை முரண்பாடுகளால், அக்கூட்டணியில் இருந்து விலகித் தனித்துப் போட்டியிட தென்னாப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்தது.

இந்த உள்ளாட்சித் தேர்தல், கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை களையும் அது எதற்காக உள்ளது என்பதையும் மக்களிடம் மீண்டும் பிரச்சாரம் செய்வதற்கும், மக்களின் நம்பிக்கைக்கான சரியான மாற்று என்பதை தாங்களே என எடுத்துக் கூறுவதற்கும் கிடைத்த ஒரு நல்வாய்ப்பாக அமைந்தது என அக்கட்சியினர் கூறியுள்ளனர். தேர்தலை எதிர்கொள்ள போதுமான பணம் இல்லை என்றாலும் நாங்கள் கணிசமான அளவுக்கு முத்திரை பதித்து எங்கள் கட்சியின் பலத்தை நிரூபித்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளனர்.