தீக்கதிர் உலக செய்திகள்
30 Sept 2026, 10:47 pm

நாஜி கட்சிக்குத் தடை : சமூக ஜனநாயக கட்சி வலியுறுத்தல்

ஜெர்மனியின் தீவிர வலதுசாரியும் நாஜி ஆதரவுக் கட்சியுமான ‘ஆல்டர்நேட்டிவ் ஃபார் ஜெர்மனி’-யை தடை செய்ய வேண்டும் என சமூக ஜனநாயகக்கட்சி வலியுறுத்தியுள்ளது. செப்டம்பர் துவக்கத்தில் சாக்ஸனி-அன்ஹால்ட் மாநிலத்தேர்தலில் ஆல்டர்நேட்டிவ் ஃபார் ஜெர்மனி கட்சி வெற்றி பெற்றது. மேக்லென்பர்க்-வெஸ்டர்ன் பொமரேனியா மாநிலத்தில் 38.2 சதவிகித வாக்குகளைப் பெற்றது. எனினும் அக்கட்சி ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக விளங்குவதாகவும், “இனவெறியை இயல்பாக்குவதாகவும்” அந்நாட்டில் உள்ள பெரும்பாலான கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

நேட்டோவுடன் நேரடி மோதல் : ரஷ்யா எச்சரிக்கை

ரஷ்யாவின் காலினின்கிராட் பிராந்தியத்திற்கு அருகில் நேட்டோ அமைப்பின் ராணுவப் பயிற்சிகள் அதிகரித்து வருகிறது. இதேநேரத்தில் அவ்வமைப்பில் உள்ள நாடுகளின் போர் வெறிப் பேச்சுக்களும் ரஷ்யாவிற்கும் நேட்டோவிற்கும் நேரடி போர் மூளும் அபாயத்தை அதிகரித்து வருவதாக ரஷ்யா எச்சரித்துள்ளது. மேலும் “கையிருப்பில் உள்ள அனைத்து ஆயுதங்களையும் கொண்டு” காலினின்கிராட் பகுதியைக் பாதுகாக்க உறுதியுடன் இருப்பதாக பெல்ஜியத்தில் உள்ள ரஷ்ய தூதரகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் போரால் லெபனான் குடும்பங்கள் தவிப்பு

இஸ்ரேல் ராணுவம் லெபனான் மீது தொடர்ந்து போர் புரிந்து வருகின்றது. லெபனானின் நீண்டகாலப் பொருளாதார நெருக்கடியும் இப்போரும் இணைந்துள்ள நிலையில் அந்நாட்டின் 80 சதவீதக் குடும்பங்கள் தங்களின் அடிப்படைத் தேவைகளைக்கூடப் பூர்த்தி செய்து கொள்ள முடியாமல் தவிக்க விடப்பட்டுள்ளனர். இதனை ஐ.நா அவையும் உறுதி செய்துள்ளது. இஸ்ரேலின் கொடூர தாக்குதல்களால் குழந்தைகள் கடும் பசியில் உள்ளனர், அவர்களின் கல்வி சீர்குலைந்துள்ளது, அந்நாட்டு மக்கள் மருத்துவ உதவியின்றி அவதிப்பட்டு வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுத உதவி பெறுவதற்காக ஜெலன்ஸ்கி ரகசியத்தை வெளியிட்டாரா?

உக்ரைன் ராணுவம் கைது செய்த வடகொரியா வீரர்களை தென்கொரியாவிற்கு கடத்தியதாக ஐநா அவையில் மிக முக்கியமான ராணுவ ரகசியத்தை ஜெலன்ஸ்கி அம்பலப்படுத்தினார். தன நாட்டுக்கு தென்கொரியாவிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் பிற ராணுவ உதவிகளைப் பெறுவதற்காகவே இந்த ரகசியத்தை அவர் பகிரங்கமாக வெளியிட்டிருக்கலாம் என்று தென்கொரிய உளவு அமைப்பு கருதுவதாக அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

40-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் : ஆப்க ன் எல்லையில் சுட்டுக்கொலை

பாகிஸ்தான் எல்லையிலிருந்து ஆஃப்கானிஸ்தானுக்குள் ஊடுருவிய 40-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளைச் சுட்டுக்கொன்றதாகவும், 60-க்கும் மேற்பட்டோரைக் கைது செய்துள்ளதாகவும் ஆப்கானிஸ்தான் தெரிவித்துள்ளது. ஆஃப்கானிஸ்தானின் வடகிழக்கு மாகாணமான நூரிஸ்தானில் உள்ள காம்தேஷ் மாவட்டத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை நடந்த தொடர் மோதல்களில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பைச் சேர்ந்த 41 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 62 பேர் உயிருடன் பிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் “ஆதரவுடன்” இவர்கள் ஆஃப்கானிஸ்தானுக்குள் ஊடுருவியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

‘செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களுடன் டிரம்ப் புது ஒப்பந்தம்’

வாஷிங்டன்,செப்.30-செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மனிதகுலத்திற்கு ஆபத்தாக மாறிவிடக் கூடாது என்பதற்காக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மற்றும் உலகின் முன்னணிதொழில் நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள் இணைந்து ஒரு புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

வாஷிங்டனில் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்தஅறிவிப்பு வெளியானது. ஆந்த்ரோபிக், ஓபன் ஏஐ, கூகுள், மெட்டா, எக்ஸ் ஏஐ, என்விடியா ஆகிய 6 பெரிய நிறுவனங்களின் தலைவர்கள் இதில் கையெழுத்திட்டுள்ளனர். கூகுள் நிறுவனதலைமை அதிகாரி சுந்தர் பிச்சை, மீட்ட நிறுவனத்தின் மார்க் ஜுக்கர்பெர்க் , எலான் மஸ்க் போன்ற முன்னணிதொழில் அதிபர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள், செயற்கை நுண்ணறிவு மாடல்களைக் கண்காணிக்கவும், அவற்றில் ஏதேனும் கோளாறுகள் அல்லது ஆபத்துகள் இருந்தால் உடனடியாகச் சரிசெய்யவும் நிறுவனங்களுக்குள் தனிக் குழுக்கள் அமைக்கப்படும். பாதுகாப்பு அமைப்புகள் சரியாகச் செயல்படுகின்றனவா என்பதைச் சரிபார்க்க, தணிக்கையாளர்களுடன் இணைந்து பணியாற்ற இந்நிறுவனங்கள் ஒப்புக்கொண்டுள்ளன.

செயற்கை நுண்ணறிவுதொழில் நுட்பத்திற்கு அரசாங்கம் கடுமையான சட்டங்களையோ, கட்டுப்பாடுகளையோ விதிக்காது; நிறுவனங்களே தங்களைச் சுயகட்டுப்பாட்டுடன் வழிநடத்திக் கொள்ள வேண்டும் என்பதே டிரம்ப் நிர்வாகத்தின் நிலைப்பாடாகும். அதாவது இந்த ஒப்பந்தம் கட்டாயமானது அல்ல; வெறும் விருப்பத்தின் பேரில்உருவானது.நிறுவனங்களே கொள்கைகளை உருவாக்கி, அவர்களே தணிக்கையாளர்களை நியமித்துக் கொள்வது எந்த அளவிற்குப் பாதுகாப்பாக இருக்கும்?” அரசு எந்த கட்டுப்படும் விதிக்காது ஆனால் நிறுவங்கள் தங்களைசுயகட்டுப்பாட்டுடன் இயங்கவேண்டும் என டிரம்ப் கூறுவது இந்தஒப்பந்தத்தின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாகியுள்ளது.

செயற்கை நுண்ணறிவுகள் மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறுகின்றன எனவே அவற்றை கட்டுப்படுத்தும் வகையில் செயல்பட வேண்டும். இந்ததுறையில் ஆராய்ச்சி வேகத்தை (போட்டியை) கட்டுப்படுத்த வேண்டும் என உலகம் முழுவதும் குரல் எழுந்துவருகின்றது. தொழில் நுட்ப வளர்ச்சியிலும் தவறுகளை கண்டறிவதிலும் இணைந்து செயல்பட சீனா அழைப்பு விடுத்துள்ள நிலையில் டிரம்ப் எடுத்துள்ள இந்த நடவடிக்கை பெருநிறுவனங்களின் கட்டுப்பாடற்ற செயல்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் அமைத்துவிடுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.