தீக்கதிர் உலக செய்திகள்
25 Aug 2026, 9:13 pm

தீக்கதிர் உலக செய்திகள்

சூடானில் வெறிச்செயல் : அமைதிப்படை வீரர்கள் படுகொலை

தெற்கு சூடானில் ஐ.நா அமைதிப் படை மீது ஆயுதமேந்திய கும்பல் நடத்திய தாக்குதலில் இரண்டு வீரர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதனை தெற்கு சூடானுக்கான ஐ.நா தூதுக்குழு உறுதி செய்துள்ளது.இந்தத் தாக்குதலுக்கு உடனடியாக எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. மேலும் அமைதிப்படையைச் சேர்ந்த மூவர்,தெற்கு சூடான் காவல்துறையைச் சேர்ந்த இருவர், இரு பொதுமக்கள் என ஏழு பேர் இத்தாக்குதலில் பலியாகியுள்ளதாகவும் தூதுக்குழு தெரிவித்துள்ளது. அமைதிப்படையின் மீதான தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என இத்தாக்குதலுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.

ஆர்க்டிக் பகுதி வழியாக ரஷ்யா சீனா வர்த்தகம்

ரஷ்யாவும் சீனாவும் ஆர்க்டிக் பகுதி வழியிலான வர்த்தகத் தொடர்புகளை விரிவுபடுத்தியுள்ளதாக ‘ரோசாட்டம்’ (Rosatom) நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஒத்துழைப்பைத் தனது ‘பனிப் பட்டுப் பாதை’ திட்டத்தின் ஒரு பகுதி என்று சீனா குறிப்பிட்டுள்ளது. ரஷ்யாவின் முர் மான்ஸ்க் பிராந்திய துறைமுகத்தில் இருந்து இந்த பாதை சீனாவுடன் இணைகிறது. 2025 ஆம் ஆண்டில் இத்துறைமுகம் மூலமாக ரஷ்யா 48 நாடுகளுடன் வர்த்தகம் செய்தது. இந்த துறைமுகம் மூலமாக ரஷ்யாவிற்கு கிடைத்த மொத்த வெளிநாட்டு வர்த்தகத்தில் சீனா சுமார் 40 சதவிகித பங்கைக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கொள்ளையர்கள் தாக்குதல் : ஹைட்டியில் 40 பேர் கொலை

ஹைட்டியில் கென்ஸ்காஃப் நகர தேவாலயத்திற்குள் தஞ்சம் புகுந்திருந்த மக்கள் மீது கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி சுமார் 40 பேரை படுகொலை செய்தனர். அவர்களில் சிலர் தூக்கில் தொங்கவிடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். இன்னும் சிலர் காணாமல் போயுள்ளனர் எனவே தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என அந்நகர மேயர் மாசில்லியன் கூறியுள்ளார். பல மாதங்களாக கொள்ளையர்களின் வன்முறையால் பல கொடுமைகளை அந்நகரம் அனுபவித்து வருகிறது. வன்முறைக்கு பயந்து ஏற்கெனவே

வீடுகளை விட்டு வெளியேறியுள்ள மக்களை குறிவைத்து இப்போது தாக்குதல் நடத்தப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

சர்வதேச கடற்பரப்பு வெப்பநிலை வரலாற்றில் இல்லாத அதிகரிப்பு

உலகளவில் சராசரி கடல் மேற்பரப்பு வெப்பநிலை வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு மிக உயர்ந்த அளவை எட்டியுள்ளதாக கோப்பர்நிகஸ் வானிலை கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 21-22 ஆகிய நாட்களில் கடலின் மேற்பரப்பு வெப்பநிலை 21.1 டிகிரி செல்சியஸை (69.98 டிகிரி ஃபாரன்ஹீட்) எட்டியதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது. 2024 மார்ச் மாதம் 21.09 டிகிரி செல்சியஸ் பதிவாகி இருந்தது இதுவே அதிக பட்சமான அளவாக இருந்த நிலையில் தற்போது அது அதிகரித்துள்ளது. வேகமாக தீவிரமடைந்து வரும் ‘எல் நினோ’ மற்றும் பெருநிறுவனங்களால் ஏற்படும் காலநிலை மாற்றம் ஆகியவை “முன்னெப்போதும் இல்லாத அழுத்தத்தை” கொடுத்து வருகிறது.

பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் : பாக் தகவல்

ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் இடையிலான மோதல் போக்கை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் நடைபெற்ற உயர் மட்டப் பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் மற்றும் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி ஆகியோர் திங்கள்கிழமை ஈரானுக்கு பேச்சுவார்த்தை நடத்த சென்றனர். ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான், வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி உள்ளிட்ட உயர்மட்ட தலைவர்களுடன் நடத்திய பேச்சவார்த்தைக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஈரான் மீது பொருளாதாரப் போர்: அமெரிக்காவுக்கு சீனா எதிர்ப்பு

பெய்ஜிங்/டெஹ்ரான், ஆக. 25 -ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரப் போரை அறிவித்துள்ளது. ஈரானை பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்தும் வகையிலும் ஈரானுடன் பொருளாதார உறவுகளை மேற்கொள்ளும் நாடுகளை மிரட்டும் வகையிலும் விடப்பட்டுள்ள அறிவிப்பிற்கு சீனா தனது கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.இத்தகைய தடைகள் யாருடைய நலனுக்கும் உகந்தது அல்ல என்றும் அறிவுரை வழங்கியுள்ளது.

அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடைகளை தீவிரப்படுத்திச் சென்றால் , அது உலகப் பொருளாதாரத்திற்குப் பேரழிவாக அமையும் என்று ஈரானும் எச்சரித்துள்ளது. “பொருளாதாரப் போர் தொடர்ந்தால், ஹோர்முஸ் நீரிணை, பாரசீக வளைகுடா என எந்தப் பகுதி வழியாகவும் ஒரு சொட்டு எண்ணெய் கூட ஏற்றுமதி செய்யப்படாது என்று ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் மொஹ்சென் ரெசாய் எச்சரித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின் ஜியான், “ஒருதலைபட்சமான தடைகள் எதற்கும் தீர்வாகாது; மாறாக பதற்றத்தை தான் மேலும் அதிகரிக்கும். அனைத்துத் தரப்பி

னரும் பகுத்தறிவுடன் செயல்பட வேண்டும். போரை மேலும் தீவிரப்படுத்து கின்ற மற்றும் உலகளாவிய பொருளாதார வளர்ச்சி மற்றும் நிதி உறுதித்தன்மையை பாதிக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் தவிர்க்க வேண்டும் என்று கூறினார். மேலும், “ஈரானில் உள்ள தனது நலன்களைப் (முதலீடுகள்) பாதுகாக்க சீனா தேவையான அனைத்தையும் செய்யும்” என்றும் லின் குறிப்பிட்டார்.

ஈரானை தனிமைப்படுத்துவதற்காக “பொருளாதார டி-டே” (economic D-Day) என்ற பெயரில் ஒரு பொருளாதார போரை தொடங்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடந்த வாரம் அறிவித்திருந்தார். அதன் பின்னணியில் ஈரானின் பொருளாதாரத்தை குறைந்தபட்சம் பாதுகாத்து வருகின்ற உலக அளவிலான வர்த்தக நடவடிக்கைகளை குறிவைத்து முடக்கும் வகையில் பொருளாதார தடை மற்றும் அழுத்த நடவடிக்கைகளை அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் அறிவித்துள்ளார்.

மற்ற நாடுகள் மற்றும் நிறுவனங்கள் ஈரானுடன் வணிகம் செய்வதைத் தடுக்கும் நோக்கில், எண்ணெய் உள்ளிட்ட ஈரானின் அனைத்து வருவாய் ஆதாரங்களையும் அமெரிக்கா குறிவைத்து முடக்கும் என்று பெசென்ட் தெரிவித்தார். உலகம் முழுவதும், ஈரான் ஆட்சியைத் தக்கவைத்து பாதுகாக்கும் ஒவ்வொரு பொருளாதாரத் தொடர்பையும் துண்டித்து, ஈரானை தனிமைப்படுத்துவதே எங்கள் நோக்கமாகும். உலக நாடுகள் அமெரிக்கா அல்லது ஈரான் ஆகிய இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஈரானுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் நாடுகள் ‘இரண்டாம் நிலைத் தடைகளுக்கு’ உள்ளாக்கும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதாவது ஈரான் மீதான ஆயுத தாக்குதல்கள் அமெரிக்கா எதிர்பார்த்த விளைவுகளை ஏற்படுத்தாத நிலையில் பொருளாதார ரீதியாக பெரிய தடைகளை ஏற்படுத்தி அதன் மூலம் ஆட்சிக்கவிழ்ப்பை நடத்த அமெரிக்கா திட்டமிடுகிறது.

திங்கள்கிழமை ஃபைனான்ஷியல் டைம்ஸ் (Financial Times) இதழில் வெளியான ஒரு கட்டுரையில், ஈரானுடன் பொருளாதாரத் தொடர்பு வைத்துள்ள அனைத்து நாடுகளையும், “உலகில் ஒரு தீய சக்தியாக” செயல்படும் ஈரானின் “ஊழல் ஆட்சிக்கு உடந்தையாக இருப்பவர்கள்” என்று பெசென்ட் கூறியதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

ஈரான் மீது தடைகள் விதிப்பது தொடர்பான திட்டங்களுக்கு ஒத்துழைக்கு மாறு கடந்த வாரம் சீனாவிடம் பெசென்ட் வெளிப்படையாகவே பேசினார். அப்படி செய்தால் அது சீனாவுக்கு ஒரு “பெரிய நன்மையாக” அமையும் என்றும் அவர் உறுதி அளித்தார். ஆனாலும் அமெரிக்காவின் ஆசை வார்த்தை களுக்கு இடம் கொடுக்காமல் ஈரானுக்கு ஆதரவாக பேசியுள்ளது சீன அரசு.

ஈரானின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாகவும், அந்நாட்டின் கச்சா எண்ணெய்யை அதிகளவில் வாங்கும் நாடாகவும் சீனா திகழ்கிறது. சீனா மற்றும் ஈரான் ஆகிய இரண்டு நாடுகளும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) மற்றும் பிரிக்ஸ் (BRICS) அமைப்புகளில் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்புகள் பன்முகத்தன்மையை நிலைநாட்டவும் , அனைத்து வகையான ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளுக்கு எதிராகவும் செயல்பட்டு வருகின்றன.