தீக்கதிர் உலக செய்திகள்
11 Jul 2026, 10:12 pm

ஜப்பானில் சூறாவளி : பிலிப்பைன்ஸில் நிலச்சரிவுகள்

ஜப்பானில் மணிக்கு 144 கி.மீ முதல் 198 கி.மீ பலத்த காற்று மற்றும் கனமழையுடன் சூறாவளி வீசி வருகிறது. இதனால் அந்தத் தீவில் விமானம் மற்றும் படகு சேவைகள் சனிக்கிழமை முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இச் சூறாவளியால் ஏற்பட்ட கனமழையின் காரணமாக பிலிப்பைன்ஸின் மின்டானாவோ தீவில் அடுத்தடுத்து இரண்டு நிலச்சரிவுகள் நிகழ்ந்துள்ளன. இதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர், 6 பேரைக் காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தைவானில் பாதுகாப்பு நடவடிக்கையாக மலைப்பகுதிகளில் வசிக்கும் 14,000-க்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மேற்கு கரையில் இடம்பெயரும் பாலஸ்தீனர்கள்

இஸ்ரேல் ராணுவத்தின் நடவடிக்கைகளால் மேற்குக் கரையில் பாலஸ்தீனர்கள் இடம்பெயரும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இப்பகுதியில் இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீனர்களின் வீடுகளை இடிப்பது, அவர்களின் நிலங்களை ஆக்கிரமிப்பது, பிறகு தாக்குதல் நடத்துவது என தொடர்ந்து அட்டூழியங்கள் செய்து வருகின்றது. இதனால் தங்குமிடம், வாழ்வாதாரம் மற்றும் அத்தியாவசிய சேவைகளைப் பெறுவதில் அவர்களுக்கு கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது என ஐநா அவை கவலை தெரிவித்துள்ளது.

வெனிசுலா நிலநடுக்கம் : பலி எண்ணிக்கை 4,118

வெனிசுலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 4,118 ஆக அதிகரித்துள் ளது. மீட்புக் குழுவினர் தொடர்ந்து இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 6,462 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். நிலநடுக்கத்தால் வீடுகளை இழந்த 17,907 பேர் வீடற்ற வர்களாக மாறியுள்ளனர். தற்போது நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 89 தற்காலிக முகாம்களில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 86,794 குடும்பங்களுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் மீட்புப் பணிகளில் 30,076 பணியாளர்கள், 29,843 தன்னார்வலர்கள் மற்றும் 3,454 சர்வதேச மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

அமைதியை உருவாக்கும் நடவடிக்கை : வளர்ச்சிக்கு முன்னுரிமை வேண்டும்

ஐ.நா அவையும் அமைதியை கட்டியெழுப்பும் நடவடிக்கையில் சர்வதேச சமூகம் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது. வறுமை, அநீதி மற்றும் நிர்வாகக் குறைபாடுகளே பல போர்களுக்கு வேராக உள்ளன. எனவே, வளர்ச்சி இல்லாமல் நீடித்த அமைதி சாத்தியமில்லை என்று ஐநா பொதுச் அவை விவாதத்தின் போது ஐ.நாவுக்கான சீனாவின் துணை நிரந்தரப் பிரதிநிதி சுன் லெய் குறிப்பிட்டுள்ளார். மேலும் வறுமை ஒழிப்பு, கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் மற்றும் பொது சேவைகள் போன்ற வாழ்வாதாரம் சார்ந்த துறைகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

ஈரானை தாக்க தயாராக உள்ளதாக இஸ்ரேல் அறிவிப்பு

ஈரான் மீது மீண்டும் தனது தாக்குதலைத் துவங்க தயாராக இருக்கிறோம் என இஸ்ரேல் கூறியுள்ளது. அப்படித் தாக்குதலை தொடங்கினால் “முன்பை விட அதிக பலத்துடன்” தாக்குதல் நடத்தப்படும் என்று இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார். ராணுவ நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் தேவைப்பட்டால் மூன்றாவது முறையாகவும் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும். வான்வழி மேலாதிக்கத்தை மீண்டும் நிலைநாட்ட ராணுவம் தயாராக உள்ளது என பேசியுள்ளார்.

ஈரானை அழிக்க தயாராக உள்ளோம் : டிரம்ப் மிரட்டல்

வாஷிங்டன், ஜூலை 11- ஈரானின் பல்வேறு பகுதிகளை அழிக்கும் அளவுக்கு அமெரிக்க ராணுவம் தயார் நிலையில் இருக்கிறது என டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். ஈரானின் மதத் தலைவர் காமேனியின் இறுதிச் சடங்கு நடைபெற்று வந்த சமயத்தில் அமெரிக்கா அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்தியது. மூன்று நாட்களுக்கு மேலாக நடத்திய தாக்குதலில் ஈரானில் 17 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.100 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்நிலையில் காமேனியின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற மக்கள் அமெரிக்காவின் ஆதிக்கப் போர் வெறிக்கு எதிராகவும் டிரம்ப்பை கண்டித்தும் கோசம் எழுப்பினர். இதனை காரணமாக வைத்து மீண்டும் ஈரானை சீண்டியுள்ளார் டிரம்ப். அதாவது ஈரான் தன்னை படுகொலை செய்ய முயற்சித்தால், அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்த அமெரிக்க ராணுவம் ஆயிரம் ஏவுகணைகளையும் அதன் தொடர்ச்சியாக மேலும் ஆயிரக்கணக்கான ஏவுகணைகளையும் ஏவி தாக்குதல் நடத்த தயாராக உள்ளது என போர் சூழலை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் பேசியுள்ளார். ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டாலும் போர்நிறுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார். ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்கள் மீதான தாக்குதல்களை ஈரான் நிறுத்த வேண்டும். அந்த நீரிணைப்பாதையை எவ்விதக் கட்டணமும் இன்றி திறந்த நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. போர் துவங்கியதில் இருந்து அந்நீரிணையை ஈரான் தனது முழு கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. ஈரான் மற்றும் ஓமன் அரசுக்கு மட்டுமே அந்த பகுதியை நிர்வகிக்க அதிகாரம் உண்டு எனவும் ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என நாங்கள் கேட்கவில்லை. பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தராக உள்ள கத்தார் நாட்டு அதிகாரிகளை மட்டுமே சந்திக்க ஒப்புக்கொண்டுள்ளோம் என ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கத்தார் நாட்டுப் பிரதிநிதிகள் ஈரான் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த மோதல் காரணமாக கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இது உலகப் பொருளாதார மந்தநிலை குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி 28 அன்று தொடங்கிய இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.