அணுசக்தித் துறையின் வரலாற்றுச் சாதனை அணு உலை வெப்பத்தைப் பயன்படுத்தி ஹைட்ரஜன் தயாரிக்கும் உலகின் முதல் ஆலை
29 Jun 2026, 9:47 pm
<p><strong>அணுசக்தித் துறையின் வரலாற்றுச் சாதனை அணு உலை வெப்பத்தைப் பயன்படுத்தி ஹைட்ரஜன் தயாரிக்கும் உலகின் முதல் ஆலை</strong></p><p>கல்பாக்கம், ஜூன் 29- சென்னை அருகே கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் (ஐஜிசிஏஆர்) அமைந்துள்ள அதிவேக சோதனை ஈனுலையின் அணுக்கரு வெப்பத்தைப் பயன்படுத்தி, ஹைட்ரஜன் தயாரிக்கும் உலகின் முதல் ஆலை தொடங்கப்பட்டுள்ளது. நாட்டின் தூய்மையான எரிசக்தி மற்றும் மேம்பட்ட அணுசக்தி தொழில்நுட்பத் திட்டத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக, இது கருதப்படுகிறது. அணுசக்தித் துறை இன்று தொடங்கி வைத்தது. அணுசக்தித் துறை செயலாளர் மற்றும் அணுசக்தி ஆணையத்தின் தலைவர் டாக்டர் அஜித் குமார் மொஹந்தி, ஐஜி சிஏஆர் இயக்குநர் ஸ்ரீகுமார் ஜி.பிள்ளை முன்னிலையில் இந்த ஆலையைத் தொடங்கி வைத்தார். இந்த ஆலை, மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தால் (பிஏஆர்சி) உள்நாட்டிலேயே உரு வாக்கப்பட்ட தாமிரம்-குளோரின் 'வெப்ப-வேதியியல் செயல்முறையைப் பயன்படுத்தி, அணுசக்தி மூலம் ஹைட்ரஜன் தயாரிப்பதை உறுதிப்படுத்தும் தொழில்நுட்ப மாதிரி யாக நிறுவப்பட்டுள்ளது. அணுசக்தி வெப்பத்தை ஹைட்ரஜன் தயாரிப்புடன் வெற்றிகரமாக இணைத்திருப்பது, ஒரு முன்னோடித் தொழில்நுட்பத் திருப்பு முனையாக அமைவதுடன், மேம்பட்ட அணு உலைகளைப் பயன்படுத்தி பெரிய அளவில் கார்பன் அற்ற ஹைட்ரஜன் உற்பத்திக்கான புதிய பாதையைத் திறந்துள்ளது. இந்தத் திட்டத்தின் சிறப்பம்சங்கள் உலகிலேயே முதன்முறை: சோதனை அடிப்படையிலான தான் பயன்படுத்தும் எரிபொருளைக் காட்டிலும் அதிக எரிபொருளை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட அதிவேக ஈனுலை வெப்பத்தைப் பயன்படுத்தி தாமிரம்-குளோரின் முறையில் ஹைட்ரஜன் தயாரிக்கும் உலகின் முதல் ஆலை இதுவாகும். நாட்டின் ஒரே இயங்கும் அதிவேக ஈனுலையின் தனித்துவமான திறன்களை இது அடிப்படையாகக் கொண்டது.பிஏஆர்சி உருவாக்கிய இந்தத் தொழில் நுட்பம், நாட்டின் தற்சார்பு இலக்கிற்குப் பெருமை சேர்க்கிறது. மின்சாரம் தயாரிப்பதற்கு அப்பால், அணுசக்தியை ஹைட்ரஜன் போன்ற தூய எரிசக்தி உற்பத்தியிலும் பயன்படுத்த முடியும் என்பதை இது நிரூபித்துள்ளது. எதிர்கால எரிசக்தித் தேவைகளுக்கு ஹைட்ரஜன் ஒரு மிக முக்கியமான காரணியாகக் கருதப்படுகிறது. தற்போது உலகம் முழுவதும் பல ஹைட்ரஜன் தயாரிப்பு முறைகள் ஆராயப்பட்டு வரும் நிலையில், தாமிரம்-குளோரின் வெப்ப சி முறை அதன் குறைவான இயக்க வெப்பநிலை மற்றும் அதிக வெப்ப இயக்கவியல் திறன் காரணமாக மிகவும் நம்பிக்கைக்குரியதாகக் கருதப்படு கிறது. அணு உலை வெப்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம், படிம எரி பொருட்களைச் சார்ந்திருப்பது குறைவ தோடு, பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றமும் முற்றிலும் தடுக்கப்படு கிறது. இந்த ஆலையைத் தொடங்கி வைத்த டாக்டர் அஜித் குமார் மொஹந்தி பேசுகையில், "அணுசக்தியை ஹைட்ரஜன் போன்ற வளர்ந்து வரும் தூய எரிசக்தி தொழில்நுட்பங்களுடன் இணைப்பது, நிலையான எரிசக்தி எதிர்காலத்தை நோக்கிய ஒரு முக்கியப் படியாகும். கார்பன் அற்ற மின்சாரத்தை வழங்குவதுடன், உயர்-வெப்ப செயல்முறை வெப்பத்தையும் வழங்கும் அணுசக்தியின் தனித்துவமான திறன், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கும் இலக்குகளுக்குப் பெரிதும் உதவும். இந்தச் சாதனையைச் சாத்தியமாக்கிய பிஏஆர்சி மற்றும் ஐஜிசிஏஆர் விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருக்கு எனது பாராட்டுகள்’ என்று தெரிவித் தார். ஐஜிசிஏஆர் இயக்குநர் ஸ்ரீகுமார் ஜி. பிள்ளை கூறுகையில், "நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அதிவேக ஈனுலை மூலம் நாம் பெற்றுள்ள செயல்பாட்டு அனுபவம் மற்றும் தொழில்நுட்பத் திறனே இந்த வெற்றிக்கு அடிப்படை. இது போன்ற மேம்பட்ட அணுசக்தி அமைப்புகள், இந்தியாவின் தூய எரிசக்தி மாற்றத்திற்கும், நீண்டகால எரிசக்தி பாதுகாப்புக்கும் எவ்வளவு முக்கியமானது என்பதை இந்தத் திட்டம் உலகிற்குப் பறைசாற்றியுள்ளது” என்று குறிப்பிட்டார். இந்த புதிய ஆலை, எதிர்காலத்தில் வணிக ரீதியான பயன்பாட்டிற்காக ஹைட்ரஜன் உற்பத்தியை விரிவுபடுத்து வதற்கான ஆராய்ச்சிகளுக்கு மிகச்சிறந்த அடித்தளமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.</p>
