விளையாட்டு
4 Mar 2026, 5:01 pm

உலகக்கோப்பை கால்பந்து : ஈரான் பங்கேற்குமா?

வரலாற்றில் முதல்முறையாக மூன்று வட அமெரிக்க நாடுகள் (அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ) இணைந்து 23ஆவது சீசன் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்துகின்றன. ஜூன் 11ஆம் தேதி தொடங்கி ஜூலை 19ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தொடரில் ஈரான் நாடு குரூப் ஜி-இல் இடம்பிடித்துள்ளது. ஜூன் 15 அன்று லாஸ் ஏஞ்சல்ஸில் (அமெரிக்கா) நியூஸிலாந்துக்கு எதிராகவும், ஜூன் 21 அன்று பெல்ஜியத்திற்கு எதிராகவும் (லாஸ் ஏஞ்சல்ஸ்), ஜூன் 26 அன்று சியாட்டிலில் (அமெரிக்கா) எகிப்திற்கு எதிராகவும் விளையாட உள்ளது. அதாவது ஈரான் நாடு தனது 3 லீக் போட்டிகளையும் அமெரிக்காவில் தான் விளையாட உள்ளது. உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கு இன்னும் 3 மாதங்களே உள்ள சூழலில், தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்தியது மட்டுமல்லாமல், உயர் தலைவர் காமேனியை கொன்றுள்ளதால் அமெரிக்கா - இஸ்ரேல் மீது ஈரான் கடும் கோபத்தில் உள்ளது. இதனால் அமெரிக்காவில் நடைபெறும் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை புறக்கணிக்கும் வாய்ப்புள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக ஈரான் கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் மெஹ்தி தாஜ் கூறுகையில், “ஈரான் நாட்டின் அடையாளமாக இருந்த உயர் தலைவரையே அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கொன்றுள்ளது. பிறகு எப்படி அங்கு சென்று கால்பந்து விளையாட முடியும்? போர் பதற்றம் தணிந்தாலும் அமெரிக்காவில் உலகக்கோப்பை போட்டிகளில் விளையாட முடியுமா என்பது தனக்குத் தெரியவில்லை. நிச்சயமாகச் சொல்லக்கூடிய ஒன்று என்னவென்றால், இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, நாங்கள் உலகக்கோப்பையை நம்பிக்கையுடன் எதிர்நோக்குவோம் என்று எதிர்பார்க்க முடியாது” என்று அவர் விளையாட்டு இணையதளத்திடம் தெரிவித்தார். டிரம்ப் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்ட பயணத் தடையின் முதல் பதிப்பிலேயே (முதல் பட்டியலில் இடம்பிடித்த நாடுகள்) ஈரானைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் ஈரான் ரசிகர்கள் அமெரிக்காவில் நடைபெறும் போட்டிகளை காண செல்ல முடியாது. இதன்மூலம் ஈரான் இல்லாமலேயே 23ஆவது உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தடுப்பாட்டத்தில் பலமிக்க ஈரான் ஈரான் அணி சாம்பியன் அணி இல்லை என்றாலும், அந்த அணியுடன் விளையாட எதிரணிகளுக்கு சற்று தயக்கம் இருக்கும். காரணம் மெக்சிகோ அணி போன்று தடுப்பாட்டத்தில் சுவர் அமைத்து விளையாடும் பழக்கமுடையது ஈரான் அணியாகும். அதாவது உலகக்கோப்பை சாம்பியனாக இருந்தாலும், ஈரானிடம் கோலடிப்பது மிக சிரமமான விஷயம் ஆகும். நாங்களும் கோலடிக்க மாட்டோம்; உங்களையும் கோலடிக்க விடமாட்டோம் என்ற சொற்றொடருக்கு ஏற்ப 52 ஆண்டுகளாக உலகக்கோப்பையில் விளையாடி வருகிறது ஈரான். லீக் சுற்றை தாண்டியது இல்லை என்றாலும், முக்கிய அணிகளின் நாக் அவுட் சுற்று வாய்ப்பை காவு வாங்கியுள்ளது. இதனால் ஒவ்வொரு உலகக்கோப்பை தொடர்களிலும் ஈரான் நாட்டின் ஆட்டம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் 2ஆவது அரையிறுதியில் இந்தியா - இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை

10ஆவது சீசன் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வியாழனன்று நடைபெறும் 2ஆவது அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி, இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இந்தியா - இங்கிலாந்து ஆகிய இரு அணிகளும் 4ஆவது முறையாக இறுதிக்கு முன்னேறி, 3ஆவது முறையாக டி-20 உலகக்கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் தீவிர பயிற்சியுடன் களமிறங்குகிறது. இதனால் மும்பையில் நடைபெறும் இந்த ஆட்டம் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா - இங்கிலாந்து நேரம்: இரவு 7:00 மணி இடம்:மும்பை, மகாராஷ்டிரா சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ ஸ்டார் (ஓடிடி)