தளவாய் சுந்தரத்தின் படத்தை கிழித்தெறிந்த மகளிர் அணியினர்
26 Mar 2026, 2:46 pm
<p><strong>தளவாய் சுந்தரத்தின் படத்தை கிழித்தெறிந்த மகளிர் அணியினர்</strong></p>
<p>கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளில் 5 தொகுதிகளைக் கூட்டணிக் கட்சியான பாஜகவிற்கு அதிமுக தலைமை ஒதுக்கியதால், குமரி மாவட்ட அதிமுகவினர் கடும் கோபத்திலும் கொந்தளிப்பிலும் ஆழ்ந்துள்ளனர். குமரி மாவட்டத்தில் அதிமுகவை ஒட்டுமொத்தமாக பாஜகவிடம் அடகு வைத்துவிட்டதாகத் தற்போதைய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் மீது முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நாஞ்சில் முருகேசன் மற்றும் தொண்டர்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளனர். மாவட்டத்தில் கன்னியாகுமரி தொகுதிக்கு மட்டுமே அதிமுக போட்டியிடுகிறது; மீதமுள்ள 5 தொகுதிகளையும் பாஜகவிற்குத் தாரை வார்த்ததால் மாவட்ட அதிமுகவில் பெரும் குழப்பமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன் ஆவேசம்! செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் முருகேசன், “தளவாய் சுந்தரம் செய்தது மிகப்பெரிய துரோகம். நான் கன்னியாகுமரி தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடுவேன். அவரை விடக் கூடுதல் வாக்குகளைப் பெறுவேன். இல்லையென்றால் தற்கொலை செய்துகொள்வேன். தளவாய் சுந்தரத்திற்குத் தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்கக் கூடாது; ஒரு சாதாரண தொண்டனுக்குக் கொடுக்க வேண்டும். நான் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்று அதிமுகவிற்கு ஆதரவு கொடுப்பேன்” என்று கொதித்துள்ளார். நாகர்கோவில் வேப்பமூட்டில் தளவாய் சுந்தரத்தைக் கண்டித்து ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பெரும் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. தளவாய் சுந்தரம் உருவப்படம் கிழிப்பு! குமரி மாவட்டத்தில் அதிமுகவை விட்டுக் கொடுத்த தளவாய் சுந்தரம் ஒழிக என்ற முழக்கங்களுடன் அவருடைய உருவப் படத்தை அதிமுக மகளிர் அணியினர் கிழித்தெறிந்து கண்டனம் தெரிவித்தனர். வரும் மார்ச் 29-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குமரி மாவட்டம் வரவிருக்கும் நிலையில், ஏற்பட்டுள்ள இந்தக் கோஷ்டிப் பூசலால் என்ன செய்வது என்று தெரியாமல் தளவாய் சுந்தரம் தரப்பு தவித்து வருகிறது!</p>
