இனியாவது திருந்துங்க...? - பழனி சோ.முத்துமாணிக்கம்
13 Dec 2025, 1:22 pm
<p><strong>இனியாவது திருந்துங்க...?</strong></p>
<p>அசைவற்று உட்கார்ந்திருந்தார் விநாயகர். எங்கும் போகாமல் ஒரே இடத்தில் இருந்ததால் வயிறு வழக்கத்துக்கு மேலாக வீங்கியிருந்தது. ஆண்டுக்கு ஒருமுறை தன் வடிவ பொம்மையைத் தெருக்கள் தோறும் வைத்து , காதுகளைக் கூசவைக்கும் குத்துப்பாடல்களை ஒலிபெருக்கியில் கதறவிட்டு, ஒருவாரத்துக்கு அப்பகுதி மக்களைக் கொடுமைப்படுத்தி, பின்பு கடலிலோ ஆற்றிலோ கரைப்பதை அடியோடு வெறுத்தார் விநாயகர். ”எங்கப்பா கணேசா! இப்பிடிப் பண்ணிட்டியே . உன் சிலைகளைக் கரைச்ச மறுநாளே கம்மாயில இருக்கற மீனுக எல்லாம் செத்து மிதக்குதே! எங்காச்சும் இந்தக் கொடுமையைப் பாத்ததுண்டா?” என்று ஊர்மக்கள் முறையிட்டனர். ஊர்த்தலைவரைப் பார்த்து, “தெருத்தெருவா என் பொம்மையை வைத்து, இழுத்துட்டுப் போய் கம் மாய்க்குள் அழுத்தி கால் தனியா, கை தனியா, உடம்பு தனியான்னு என்மேல ஏறிப் பிச்செறிஞ்சு கொடுமைப்படுத்தி னீங்களே! நான் ஏதாவது உங்ககிட்ட கேட்டனா? அந்தக்காலத்துல பச்சைக் களிமண்ணுல உடனுக்குடன் செஞ்சு கும்பிட்டாங்க மக்கள். இப்ப என்ன டான்னா, கைகால் ஒடஞ்சாக் கட்டுப் போடற மாவுல கண்ட கண்ட இரசா யனப் பொருளைக் கலந்து கவர்ச்சி யான நிறத்தோட என் பொம்மையைச் செய்யறீங்க. அதைக் கம்மாயில கலந்தா நஞ்சாயிருமேடா மடப் பொறப்புகளே! மீன்மட்டுமா சாகும்; நாளைக்கு நீங்க அந்தத் தண்ணியைப் புழங்குனா உங்களுக்கும் அதே கதி தானே! “ என்றார் விநாயகர் . மக்கள் கூட்டத்தில் மயான அமைதி. இனம் புரியாத அச்சம் எல்லோர் முகத்தி லும் கரிபூசியிருந்தது. என்ன பேசி விநா யகரை அமைதிப்படுத்தலாம் என்று தலைவர் தலையைச் சொரிந்து கொண்டு பேசத் தொடங்கினார். “எப்படியாவது உங்களைக் கும்பிட்டு அருள் பெறணும்னுதான் சாமி இப்படி ஊர்வலம் போறோம்“ ”கும்பிடுங்கய்யா, வேண்டாங் கலை. உங்களோட சேர்ந்துவாழற மற்ற மதத்துக்காரங்களுக்கு எடைஞ்சல் பண்ணறது, தெருவை மறிச்சு என் சிலையைப் பத்து நாட்களுக்கு வைப்பது, ஒலிபெருக்கியை அதிக ஒலி யோடு பாடவைத்து மக்கள் தூக்கத் தையே கெடுக்கறது..ஏய்யா இதுக்குப் பேரு பக்தியா ? ஏன் பேரை ஏன்யா கெடுக்கிறீங்க ? ஞானப்பழத்தை முரு கனுக்குக் கொடுக்காமல் எனக்குக் கொடுத்ததில ஏதோ சதி இருக்குன்னு நீங்களா ஒரு கதையைக் கட்டி விட்டுட்டீங்க. நீங்களா கற்பனை பண்ணிக்கிட்டு ஏய்யா புரளி கிளப்பு றீங்க. என்னை நெனச்சாலே போதும்யா. அங்க பாருங்க மிதிவண்டீல போற ஒருத்தர் என்னைப் பாத்து அவரு கன்னத்தில போட்டுக்கிட்டு, அவரா அவருக்கு முத்தம் கொடுத்துக்கிட்டுப் போறாரு பாருங்க.அவரை நான் பாராட்டுறேன்யா. ஆனா என் பேரைச் சொல்லி ஊரைக் கெடுத்து ஊரணி யைக் கெடுத்து உங்க வாழ்க்கை யையே கலவரம் ஆக்கிக்கிறீங்களே! இனியாவது திருந்துங்கையா “ விநா யகருக்கு மூச்சிறைத்தது. ’நான் அப்பவே சொன்னேன்ல‘... ‘நம்மூர்ச் சாமியைக் கும்பிடுங்கையா மொதல்ல ‘..எந்தச் சாமியால மக்க ளுக்குத் தொந்தரவு இல்லையோ அதைக் கும்பிடலாங்க’ என்ற பல வகைக் குரல்கள் அங்கே கலக்கத் தொடங்கின.</p>
