நூறு நாள் வேலை கிடைப்பதில்லை ஏன்?
9 Apr 2026, 5:30 am

நூறு நாள் வேலை கிடைப்பதில்லை ஏன்?

ஈரோடு, ஏப். 8- நூறு நாள் வேலை கிடைப்பதில்லை ஏன் என பாஜவை கேட்கப் போறோம் என ஈரோட்டில் நடைபெற்ற பிரச்சாரத்தில் துரை வைகோ எம்.பி., குறிப்பிட்டார். ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் சா.அந்தியூர் செல்வராஜுக்கு ஆதரவாக, அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசுகையில், இந்தியா முழுவதும் 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதியை ஒன்றிய அரசு தான் தீர்மானிக்கிறது. ஆண்டுக்காண்டு இதற்கான நிதியை ஒன்றிய அரசு குறைத்து வருகிறது. 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் 30, 40 நாட்கள் கூட வேலை கொடுக்கவில்லை. தற்போது அதற்கு வேறு பெயர் வைத்து 150 நாள் வேலைத்திட்டம் என்கின்றனர். இதுகுறித்து முடிவெடுக்க வேண்டியது ஒன்றிய அரசுதான். எனவே, இத்தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பிரச்சாரத்திற்கு வரும்போது, நேரடியாகவே இத்திட்டம் குறித்து கேள்வி எழுப்புங்கள், என்றார்.

இதன்பின் செய்தியாளர்களிடம் துரை வைகோ பேசுகையில், இப்பகுதியில் விவசாயிகள் கரும்பு, மஞ்சள், நெல் போன்றவற்றை விவசாயித்து வருகின்றனர். ஒன்றிய அரசு மஞ்சள் ஆராய்ச்சி மையம் அமைக்க ரூ.30 கோடி நிதி ஒதுக்கியது. இதுவரை மஞ்சள் ஆராய்ச்சி மையத்திற்கான நிதி வரவில்லை. ஜல்ஜீவன் திட்டம் மூலம் வீட்டுக்கு வீடு குடிநீர் அளிக்கும் திட்டத்தை, பாஜக எம்எல்ஏ தன் சொந்த தொகுதியில் கூட செயல்படுத்தவில்லை. ஜனநாயகமும், சமூகநீதியும் பெற வேண்டும். மதச்சார்பின்மைக்கும் மதவாதத்திற்கும் எதிரான, ஜனநாயகத்திற்கும் பாசிசத்திற்கும் எதிரான போட்டி நடைபெற்று வருகிறது. இதில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க வேண்டும், என்றார்.