நிதி ஒதுக்கியும் முழுநேர நூலக கட்டுமானப் பணியை தொடங்காதது ஏன்?
5 Jan 2026, 6:21 pm
<p><strong>நிதி ஒதுக்கியும் முழுநேர நூலக கட்டுமானப் பணியை தொடங்காதது ஏன்?</strong></p>
<p>அனைவருக்கும் இலவச மாக அறிவு, கல்வி, தகவல் மற்றும் கலாச்சாரத்தைப் பகிர்ந்தளிப்பதே ஒரு பொது நூலகத்தின் முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும். ஆனால், பள்ளிக்கல்வித் துறை யின் தற்போதைய மந்தமான நடவடிக்கைகள் இந்த உன்னத நோக்கத்தையே கேள்விக் குறியாக்கும் வகையில் அமை ந்துள்ளன. கடந்த 1959-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அம்பத்தூர் முழு நேர கிளை நூலகம், வெறும் புத்தகச் சேமிப்புக் கிடங்காக மட்டும் செயல்படவில்லை; அது பல்லாயிரக்கணக்கான இளை ஞர்களின் வாழ்வை ஒளிமய மாக்கும் ஓர் "அறிவுப் பாசறை யாக"த் திகழ்கிறது. மூன்று லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்ற, ஆசியாவிலேயே மிகப்பெரிய தொழில்பேட்டையைக் கொண்ட ஒரு பகுதியில், பல்லா யிரக்கணக்கான வாசகர்கள் ஒரே ஒரு முழுநேர நூலகத்தை மட்டுமே நம்பியிருக்கும் அவலம், கல்விப் பரவலாக்கலில் நாம் இன்னும் கடக்க வேண்டிய நீண்ட தூரத்தையே பறைசாற்றுகிறது. சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் மூலம் ரூ.11 கோடி மதிப்பீட்டில், 12,456 சதுர அடியில் மூன்று தளங்களுடன் நவீனக் கட்டடம் கட்டப்படும் என்ற அறிவிப்பு 2025-26 மானியக் கோரிக்கையில் வெளியானது. இருப்பினும், வெறும் அறிவிப்புகள் மட்டும் மாணவர்களின் அறிவுப் பசியைத் தீர்த்துவிடாது. கட்டு மானப் பணிகளில் ஏற்பட்டு ள்ள தேக்கநிலை, போட்டித் தேர்வுகளுக்காகக் கனவுகளுடன் காத்திருக்கும் ஏழை மாண வர்களின் தலையில் இடியாய் இறங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் அறிவிக்கப்பட்ட 27 "முதல்வர் படைப்பகங்களில்" 26 இடங்களுக்கான பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், 27-ஆவது படைப்பகமான அம்பத்தூர் நூலகப் பணி மட்டும் இன்னும் தொடக்க நிலையைக் கூட எட்டாமல் முடங்கிக் கிடப்பது மிகுந்த வருத்தத்திற்குரியது. இந்த நூலகத்தின் மகத்து வத்திற்கு ஒரு சான்றாக, மகா ராஷ்டிர மாநிலத்தில் மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்றுள்ள அருண் ஐஏஎஸ் உள்ளிட்ட பல ஆளுமைகளைக் குறிப்பிடலாம். கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் இங்கிருந்து 24 மாண வர்கள் பல்வேறு அரசுப் பணி களில் சேர்ந்து சாதனை படைத்து ள்ளனர். வசதி படைத்தவர்கள் விலையுயர்ந்த பயிற்சி மையங்களுக்குச் சென்றுவிட முடியும்; ஆனால், ஏழ்மையான பின்னணியைக் கொண்ட மாண வர்கள் அதிகார வர்க்கத்திற்குள் நுழைவதற்கு இருக்கும் ஒரே ஆயுதம் இத்தகைய பொது நூலகங்கள் மட்டுமே. அம்பத்தூரில் போதிய இட வசதி இல்லாத காரணத்தால், சுமார் 122-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல கிலோமீட்டர் கடந்து அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கும், 200-க்கும் மேற்பட்டோர் அண்ணா நகரிற்கும் அலைகின்றனர். இத்தகைய "அறிவுப் புலம்பெயர்வு" ஒரு மக்கள் நல அரசுக்கு அழகல்ல. கல்வியை மாணவர்களின் இருப்பிடத்திற்கே கொண்டு செல்வதே ஒரு சிறந்த அரசின் கடமையாகும். அம்பத்தூர் மண்டலத்தில் உள்ள ஐந்து நூலகங்களில், காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கும் ஒரே நூலகம் இதுதான். அப்படியிருக்க, ரூ.11 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் பணிகள் முடங்கிக் கிடப்பது ஏன்? இது ஒப்பந்ததாரர்களின் மெத்தனமா அல்லது நிர்வாகச் சீர்கேடா என்ற கேள்வி எழுகிறது. கல்வியையும் மருத்துவத்தை யும் இரு கண்களாகக் கருதும் "திராவிட மாடல்" அரசின் முதல மைச்சர் இதில் உடனடியாகத் தலையிட வேண்டும். சிஎம்டிஏ மூலம் அறிவிக்கப்பட்ட இத்திட்டத்தைப் போர்க்கால அடிப்படையில் செயல்படுத்தி, நவீன டிஜிட்டல் வசதிகள், குளி ரூட்டப்பட்ட ஆய்வுக்கூடங்கள் மற்றும் தங்குதடையற்ற இணைய வசதியுடன் கூடிய ஒரு "படைப்பகமாக" இதனை மாற்ற வேண்டும். கல்வி என்பது விற்பனைப் பண்டமல்ல அது அனைவருக்கும் சமமாகக் கிடைக்க வேண்டிய சமூக நீதி. அம்பத்தூர் நூலகக் கட்டுமானத்தை விரைந்து முடிப்பதே அந்த நீதியை நிலை நாட்டும் உண்மையான செயலாகும். -நநி</p>
