தீவிரமடையும் வெப்ப அலை ஐரோப்பிய மக்கள் கவனமாக இருக்க உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
21 Jun 2026, 11:37 pm

தீவிரமடையும் வெப்ப அலை  ஐரோப்பிய மக்கள் கவனமாக இருக்க  உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

லண்டன், ஜூன் 21- காலநிலை மாற்றம், சூப்பர் எல்-நினோவால் குளிர்ந்த சீதோஷ்ண பிரதேச பகுதியான ஐரோப்பிய கண்டத்தின் பல்வேறு நாடுகள் கடுமையான வெப்ப அலையில் சிக்கி தவித்து வருகின்றன. இதனால் ஐரோப்பிய மக்கள் கடும் எச்சரிக்கையுடம் இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

2 லட்சம் பேர் பலி

இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் ஐரோப்பா முழுவதும் 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கடுமையான வெப்பம் சார்ந்த உடல்நலக் குறைபாடுகளால் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டும் வழக்கத்தை விட அதிக வெப்பநிலை பதிவாகும் என எதிர்பார்க்கப்படுவதால், இது மக்களுக்கு கடுமையான உடல் சோர்வு மற்றும் உயிருக்கு ஆபத்தான ‘வெப்ப பக்கவாதம்’ போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். இதனைக் கருத்தில் கொண்டு, குளிர்விப்பு மையங்களைத் திறப்பது, தொழிலாளர்கள் மதிய வெயிலில் வேலை செய்வதைத் தவிர்க்கும் பொருட்டு அவர்களுக்கு நெகிழ்வான வேலை நேரங்களை அல்லது இடைவேளைகளை அறிமுகப்படுத்துவது போன்ற வெப்பத் தடுப்புத் திட்டங்களை நாடுகள் உடனடியாகச் செயல்படுத்த வேண்டும்” என்று அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பிரான்சில் ரெட் அலர்ட்

ஐரோப்பா கண்டத்திலேயே பிரான்ஸ் நாட்டில் தான் அதிகளவில் வெயில் கொளுத்தி வருகிறது. அந்நாட்டின் சில பகுதிகளில் ஞாயிறன்று வெப்பநிலை 40 டிகிரி செல்ஸியஸ் அளவிற்கு வெப்பநிலை நீடித்தது. வரும் நாட்களில் நிலைமை இன்னும் மோசமாகலாம் என பிரான்ஸ் தேசிய வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலர்ட்’ (அதிதீவிர வெப்ப எச்சரிக்கை) எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக பாரீஸில் உள்ள ஈபிள் கோபுரம் மற்றும் பிற முக்கிய பொது இடங்களில் பொதுமக்களைக் குளிர்விப்பதற்காகப் பனித்துளி தெளிப்பான்கள் அமைக்கப்பட்டுள்ளன.