பிறவி குறைபாட்டால் அதிகரிக்கும் குழந்தைகளின் இறப்பு விகிதம் - உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!
29 Jun 2026, 10:58 am

உலகம் முழுவதும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்புகளில் பிறவிக் குறைபாடுகளின் பங்கு அதிகரித்து வருவதால், புதிதாக பிறந்த குழந்தைகளுக்கான பரிசோதனைகளை பெருமளவில் விரிவுபடுத்துமாறு உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் சுமார் 80 லட்சம் குழந்தைகள் பிறவிக் குறைபாடுகளுடன் பிறக்கின்றனர். இவர்களில் பலர் உரிய மருத்துவத் தலையீடு கிடைக்காவிட்டால் கடுமையான உடல் பாதிப்பு அல்லது உயிரிழப்பைச் சந்திக்கும் அபாயம் இருப்பதாக WHO தனது புதிய தொழில்நுட்ப அறிக்கையில் எச்சரித்துள்ளது.

குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் (LMIC) தொற்றுநோய்களால் ஏற்படும் குழந்தை இறப்புகளை வெற்றிகரமாகக் குறைத்து வரும் நிலையில், தற்போது பிறவிக் குறைபாடுகளே ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் உயிரிழப்புக்கு முக்கிய காரணமாக மாறி வருகின்றன என்பது அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2000 முதல் 2023 வரை, சஹாராவிற்கு தெற்கே உள்ள ஆப்பிரிக்க நாடுகளில் பிறவிக் குறைபாடுகளால் ஏற்படும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 1 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாகவும், தெற்காசியாவில் 3 சதவீதத்திலிருந்து 11 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது. உலகளவில் தற்போது 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் மொத்த உயிரிழப்புகளில் சுமார் 8 சதவீதம் பிறவிக் குறைபாடுகளால் ஏற்படுகின்றன.

பிறவிக் குறைபாடு ஆரம்பத்திலேயே கண்டறியப்படாத காரணத்தால் எந்தக் குழந்தையும் ஆரோக்கியமான எதிர்காலத்தை இழக்கக் கூடாது என்று WHO தலைமை இயக்குநர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரியேசஸ் தெரிவித்துள்ளார்.

சிகிச்சைக்கான அணுகலைத் தடுக்கும் சவால்கள்:

பிறந்த குழந்தைகளுக்கான பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கான செலவுகளை குடும்பங்களே நேரடியாகச் சுமக்க வேண்டிய நிலை, ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடிய குழந்தைகளை அத்தியாவசிய சிகிச்சையிலிருந்து விலக்குகிறது. மேலும், குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் சிறப்பு மருத்துவ சேவைகள் மற்றும் நீண்டகால மறுவாழ்வு வசதிகள் போதுமான அளவில் இல்லாததும் சிக்கலை அதிகரிக்கிறது.

பரிசோதனை மற்றும் நோயறிதல் மட்டுமே உயிர்களைக் காப்பாற்றாது. அதற்குப் பின்னர் உடனடி மற்றும் தொடர்ச்சியான சிகிச்சை கிடைப்பதும் அவசியம் என்று WHO வலியுறுத்துகிறது. ஆனால் அவசர மருத்துவப் போக்குவரத்து வசதிகள் இல்லாமை, மருத்துவப் பணியாளர்கள் பற்றாக்குறை போன்றவை சிகிச்சைத் தொடர்ச்சியை பாதிக்கின்றன.

மேலும், குறுகிய மற்றும் நீண்டகால கண்காணிப்புக்கான தரவு அமைப்புகள் இல்லாததால், அரிவாள் செல் இரத்த சோகை (Sickle Cell Disease), பிறவியிலேயே ஏற்படும் தைராய்டு சுரப்பிக் குறைபாடு (Congenital Hypothyroidism), காது கேளாமை போன்ற ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சையளிக்கக்கூடிய நோய்களுக்குக்கூட குழந்தைகள் உரிய சிகிச்சையைப் பெற முடியாத நிலை உருவாகிறது.

"புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கான பரிசோதனை என்பது ஒரு நாட்டின் குழந்தைகளின் எதிர்காலத்தில் செய்யக்கூடிய மிகச் சிறந்த முதலீடுகளில் ஒன்றாகும்" என்று WHO-வின் தாய், குழந்தை மற்றும் இளம்பருவ நலத் துறையின் விஞ்ஞானி டாக்டர் ஆயிஷா டி கோஸ்டா தெரிவித்துள்ளார்.

அரசின் நிதி ஆதரவு அவசியம்:

இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வாக, புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கான பரிசோதனை மற்றும் நோயறிதல் திட்டங்களுக்கு அரசுகள் முழுமையான நிதி ஒதுக்க வேண்டும் என்றும், ஏழை குடும்பங்கள் பேரளவு மருத்துவச் செலவுகளைச் சந்திக்காத வகையில் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் WHO பரிந்துரைக்கிறது.

நீண்டகாலத் திட்டமாக, வெளிநாட்டு நிதியுதவியை மட்டுமே நம்பியிருக்கும் முறையிலிருந்து விலகி, வரிவருவாய் மற்றும் தேசிய மருத்துவக் காப்பீட்டு திட்டங்கள் மூலம் இத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக, ஒவ்வொரு நாடும் குறைந்தபட்சம் ஒரு முக்கிய பிறவிக் குறைபாட்டைக் கண்டறியும் பரிசோதனைத் திட்டத்தை தொடங்கி, பின்னர் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கேற்ப அதை படிப்படியாக விரிவுபடுத்தலாம் என்று WHO அறிவுறுத்தியுள்ளது