மனுசனா எப்போ மாறுவோம்? - பழனி சோ.முத்துமாணிக்கம்
11 Jul 2026, 9:18 pm

மனுசனா எப்போ மாறுவோம்? - பழனி சோ.முத்துமாணிக்கம்

பழமுதிர்சோலை மலை உச்சியில் அன்று குரங்குகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. நூறு ஆண்டுகளைத் தாண்டி, விழுதுகள் பரப்பிச் செம்மாந்து நின்று கொண்டிருந்தன ஆலமரங்கள்.

கண்ணின் மணிகளைப் போல் ஆலம்பழங்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. பறவைகள் கூடடையும் நேரம்; எல்லாப் பறவைகளும் சேர்ந்து கூச்சலிட்டது மதுரைத் தெப்பக்குளம் வரை கேட்டது. ‘கர்... கர்...’ என்ற ஒலி காட்டை நிரப்பிக் கொண்டிருந்தது.

எல்லாரும் வந்துட்டீங்களா?” என்று வாலழகன் உரக்கக் கேட்டவுடன், “வந்துட்டோம், வந்துட்டோம்!” என அனைத்துக் குரங்குகளும் சிரித்தபடி கூறின.

அவை வாயைத் திறந்தாலே சிரிப்பது போல் இருக்குமே! “இந்த வானர மாநாட்டுக்குத் தலைமை ஏற்று, நமக்கு ஏற்படும் துன்பங்களை நீக்குவதற்குத் தக்க வழிகாட்ட இருக்கும் ‘மேல்தாவி’ அவர்களே, தமிழ்நாட்டின் மூலைமுடுக்குகளில் இருந்தும் வனங்களில் இருந்தும் வந்திருக்கும் நம் சொந்தங்களே, வணக்கம்! எல்லோரும் அவரவர்க்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்துக் கூறினால், கலந்து பேசி முடிவெடுக்க வசதியாக இருக்கும்” என்று வாலழகன் மாநாட்டைத் தொடங்கி வைத்தான்.

முதலில் திண்டுக்கல் சிறுமலையிலிருந்து வந்த வாலழகன் பேசத் தொடங்கினான்: “ஐயா, இதுவரைக்கும் எங்க மலையில வாழைப்பழம், பலாப்பழம்னு சாப்பிடறதுக்கு நிறையக் கிடைச்சதுங்க.

ஆனா, இப்ப மனுஷங்க புதுசு புதுசா வர்றாங்க... மரங்களை வெட்டுறானுங்க... இனிமேல் பழங்கள் கிடைக்கிறது ரொம்பச் சிரமம். நாம் என்ன ஆடு, மாடுகளைப் போலப் புல்லைத் திங்க முடியுமா, சொல்லுங்க?” என்றான் கவலையோடு.

அடுத்து, “காட்டுல இருக்கிற மிருகங்களுக்குன்னு தனியா பெரிய அளவுல காடு வேணும்ங்கையா. கொடைக்கானல்ல எல்லா வகை மரங்களும் இருக்கு; விதவிதமா பழங்களும் இருக்கு. ஆனா, மலையைப் பூராம் கைப்பற்றி, தங்குற விடுதிகளை (ஹோட்டல்) ஏராளமாகக் கட்டிக்கிட்டாங்க இந்த மனுஷங்க. அட... நாம வசிக்கிற இடத்துல அன்னாடம் கூட்டம் கூட்டமா மனுஷங்க வந்துகிட்டே இருந்தா, நாம எப்படிங்க நிம்மதியா இருக்க முடியும்?” என்று கடுங்கோபத்தோடு பேசி முடித்தான் கொடைக்கானல் ‘வெந்தாடி’. “பழனிமலையிலிருந்து வர்றேங்கையா” என்று தயங்கித் தயங்கிச் சொல்லத் தொடங்கியது ‘செந்தாடி’ என்ற குரங்கு. “

முருகனைப் பார்க்க அன்னாடம் வர்ற கூட்டம் இருக்கே, அதைச் சொல்ல முடியாது. நாங்க மலைக்கோயில் அடிவாரத்துல மரத்துக்கு மரம் தாவி விளையாடினா, பார்த்துட்டுச் சும்மா போக வேண்டியதுதானே; அதைவிட்டுட்டுப் பிஞ்சுக் கல்லைக் கொண்டு விரட்டுறாங்க சின்னப் பசங்க! பெரியவங்க இரக்கப்பட்டுத் தேங்காய், பழம் கொடுப்பாங்க, அது வேற விஷயம்.

ஆனா, மலைமேல ஒரு மண்டபத்துல ஒரு பெரியவர் ஐம்பது பேரை உட்கார வச்சுப் பேசிக்கிட்டு இருந்ததை ஒருநாள் கேட்டேங்க. ‘மனசை அலையவிடாதீங்க, மனசு ஒரு குரங்கு மாதிரி, அங்கும் இங்கும் தாவும்’னு என்னென்னவோ பேசிக்கிட்டு இருந்தாரு.

சரி... அவரு மனசை அடக்கச் சொல்றாரா, இல்லை குரங்கை அடக்கச் சொல்றாரான்னு தெரியாம ஓடிவந்து தப்பிச்சுக்கிட்டேன்யா!” என்றது. அடுத்து ‘நெடுவாலன்’ என்ற குரங்கு பேசத் தொடங்கியது: “தமிழ்நாட்டுல நம்ம இனத்துக்குச் சிலை பல இடத்துல இருக்குங்க. ஆனா, நாமக்கல் அநுமார்னா எல்லாருக்கும் பிடிக்கும்ங்க.

அடிக்கடி 108 வடையைக் கோத்து மாலை போடுவாங்க. இதைப் பார்த்துட்டு நான் ஒருநாள் அநுமார் சிலைகிட்ட போய் ஒரேயொரு வடையைப் பிடுங்கினேன். உடனே பெரிய சத்தம்! அங்கே இருக்கிற பக்தர்கள், ‘ஏய்... விரட்டு, விரட்டு’ன்னு எல்லாரும் சேர்ந்து என்னை விரட்டிட்டாங்க. அநுாரைக் கும்பிடுறாங்க; ஆனா, நான் போய் வடையை எடுத்தா விரட்டுறாங்க...

ஏங்க இப்படி?” என்று நியாயமான கேள்வியோடு முடித்தது. குற்றாலத்திலிருந்து வந்த ‘கோணவாலன்’ பேசத் தொடங்கும் போது, “வானரங்கள் கனிகொடுத்து மந்தியிடம் கொஞ்சும்; மந்திசிந்து கனிகளுக்கு வான்க

விகள் கெஞ்சும்” என்று அழகாகப் பாடத் தொடங்கியது. உடனே எல்லாக் குரங்குகளும் பாராட்டி ஆரவாரம் செய்தன. கோணவாலனுக்கு மிக்க மகிழ்ச்சி! தலைவர் மேல்தாவி, “என்னய்யா, பாட்டெல்லாம் பாடித் தூள் கிளப்புறீங்க?” எனச் சிரித்தபடியே கேட்டார்.

அதற்குக் கோணவாலன், “எங்க முப்பாட்டன் இந்தப் பாட்டைப் பாடிக்கொண்டே இருந்ததாக எங்க பாட்டன் சொன்னதுங்கையா. ‘குற்றாலக் குறவஞ்சி’ங்கிற பாட்டு குற்றாலத்தோட பெருமையைச் சொல்லும்ங்க. ஆனா, அருவியில தண்ணி வராத காலத்துல மக்களும் வரமாட்டாங்க; அப்ப எங்க பாடும் திண்டாட்டம்தான்!” என்றது.

அடுத்து ‘காடுகாவல்’ என்ற குரங்கு எழுந்தது: “ரொம்ப அடர்த்தியான காட்டுக்குள்ள புலி, சிறுத்தை, சிங்கத்திடமிருந்து மத்த விலங்குகளைக் காப்பாத்துற வேலை எனக்கு.

மரத்து மேல இருந்து தூரத்துல எதிரிங்க வர்றதைப் பார்த்து எச்சரிக்கை பண்ணுவேன். ஆனா பாருங்க... இந்தச் சிறுத்தை தான் வேட்டையாடுனதைத் தூக்கிக்கிட்டு மரத்து மேல ஏறி வரும், அங்க வச்சுத்தான் சாப்பிடும். அதுகிட்ட இருந்து நான் என்னைக்காப்பாத்திக்க வேற வழி பார்க்கணும்!” என்று பேசி முடித்தது.

திருப்பரங்குன்றத்திலிருந்து வந்த நெடுவாலன் எழுந்து எல்லோரையும் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டுப் பேசத் தொடங்கியது: “மனுஷங்க நம்மைக் கடவுளா கோயில் கட்டிக் கும்பிடுவாங்க; ஆனா, நேரில் பார்த்தா மதிக்க மாட்டாங்க.

போன வாரம் ஒரு விழாவுல பழைய பாட்டொண்ணு பாடிக்கிட்டு இருந்தாங்க... யாரோ, *‘காண்பதற்கே உருப்படியாய் இருப்பதையும் கெடுப்பதுவும் குரங்குக் குணம்’*னு நம்மைக் கேலி செஞ்சு மனுஷங்க பாடுறாங்க! குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்னு அறிவியல் சொல்லுது. அப்ப நாம எப்ப மனுஷனாகப் போறோம்? ஒன்னும் புரியல, தலைவர் தான் விளக்கணும்!” என்றது.

அனைத்துத் துயரங்களையும் கேட்ட தலைவர் ‘மேல்தாவி’ கம்பீரமாக எழுந்தார்: “ரொம்ப மகிழ்ச்சி! எல்லாரும் மனசுல இருக்கிறதைத் தெளிவாச் சொன்னீங்க

. காட்டுல இருக்கிற நம்மைப் பிடிச்சுப் பொழப்பு நடத்துற குரங்காட்டிகள் இப்ப இல்லைன்னு நினைக்கிறேன், அதுவரைக்கும் சந்தோஷம். ஆனா, கோயில்கள்ல இருக்கிற நம்ம உறவுகள் மக்கள்கிட்ட செய்யற குறும்புகள் இப்ப எல்லை மீறிப் போய்க்கிட்டு இருக்குது! பழமுதிர்சோலை மலையேறிப் போற மக்கள் இப்ப பயமில்லாம கைகள்ல பைகளைக் கொண்டுபோக முடியல. மரத்துக்கு மரம் தாவித் தாவி விளையாடுறது நம்ம குணம், அதை எவரும் தப்புன்னு சொல்லல.

மனுஷங்க மனம் இருக்கிற இடத்துல இருந்துகிட்டே உலகத்தையே சுத்தி வரும், அதனாலதான் அதை ‘குரங்கு மனம்’னு சொல்றாங்க. கோயில்கள்ல நம்ம சிலை இருக்கேன்னுட்டு நீங்க மக்கள் பக்கத்துல போயிடாதீங்க.

மக்கள் பல வடிவங்கள்ல, யானை வடிவத்துல, மாட்டு வடிவத்துல கடவுளைக் கும்பிடுவாங்க; ஆனா, நேர்ல கடவுள் இப்படி விலங்குகளா வந்தா அவங்க ஒத்துக்க மாட்டாங்க! அப்புறம், நாம சாப்பிடுற முறையே மாறிடுச்சு.

வனாந்திரத்துல கிடைக்கிற காய்கனிகளைச் சாப்பிட்டுட்டு ஆரோக்கியமா இருந்த நாம், ஊருக்குள்ள வந்த பின்னால மனிதர்கள் தர்ற பலகாரங்களையும், பிஸ்கட்டுகளையும் சாப்பிட்டுப் பழகிட்டோம். வெளிநாட்டுல இருக்கிற நம்ம இனத்தாரே பசும்புல்லைச் சாப்பிடுறதை நான் பார்த்திருக்கேன்.

இயற்கையோடு சேர்ந்து வாழ்ந்தா நம்ம உடம்பும் நல்லா இருக்கும். கடைசியா, ‘மனுஷனா எப்போ மாறுவோம்?’னு கேட்டீங்க... மனுஷனா வளர்ச்சியடையறது நீங்க நினைக்கிறபடி உடனே நடப்பதில்லை.

பேராசை இல்லாத பொறுமையான வாழ்க்கை, சக உயிர்களுக்கு அநீதி இழைக்காத குணம், எல்லா மக்களுக்குமான உதவி என வாழத் தொடங்கினால், நீங்களும் விரைவில் மனிதர்களை விட உயர்ந்த உன்னதமான நிலையை அடைந்துவிடலாம்!” என்று தீர்ப்பு வழங்கினார்.

மாநாடு இனிதே கலைந்தது... வால்களைச் சுழற்றிக் கொண்டு எல்லாக் குரங்குகளும் மகிழ்ச்சியோடு மரத்துக்கு மரம் தாவித் தாவிச் சென்ற காட்சி காடு முழுவதும் மிக அழகாகக் காட்சியளித்தது.