சிதம்பரத்தில் வெளிவட்டச் சாலை எப்போது பயன்பாட்டுக்கு வரும்?
8 Dec 2025, 4:39 pm
<p><strong>சிதம்பரத்தில் வெளிவட்டச் சாலை எப்போது பயன்பாட்டுக்கு வரும்?</strong></p>
<p>சிதம்பரம், டிச.8- சிதம்பரம் நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக, ரூ. 60 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் வெளிவட்டச் சாலை எப்போது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று நகர்வாசிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். சிதம்பரம் உலகப் புகழ்பெற்ற நட ராஜர் கோயில், கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அண்ணாமலை பல்கலைக்கழகம் ஆகியவை அமைந்துள்ளதால், ஆன்மீக மற்றும் சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. இங்கு நடைபெறும் தேர் மற்றும் தரிசன விழாக்கள் போன்ற விழா காலங்களில் நகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் அவசர ஊர்திகள் மருத்துவமனைக்குச் செல்ல தாமதம் ஏற்படுவதும் உண்டு. இந்த நெரிசலைக் குறைக்க, கடலூர் மார்க்கத்திலிருந்து வரும்போது தில்லையம்மன் ஓடை வாய்க்காலில் வெளிவட்டச் சாலை அமைக்க வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நடவடிக்கை எடுத்தார். இந்த வெளிவட்டச் சாலை அமைப்பதற்காக முதலில் ரூ. 40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பொதுப்பணித்துறை மூலம் சாலை அமைக்க ஏதுவாக தடுப்புச் சுவர் கட்டப்பட்டது. சாலை அமைப்ப தற்காக மேலும் ரூ. 20 கோடியை முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார். மொத்தமாக ரூ. 60 கோடி நிதி இருந்தும், சாலை அமைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், பொதுப்பணித்துறை சார்பில் தடுப்புச் சுவர் அமைக்கும் பணி கள் முடிந்துவிட்டன. ஆனால், சாலை அமைப்பதற்காக மூன்று இடங்க ளில் குறுகியதாக உள்ள நிலத்தை நெடுஞ்சாலைத் துறைக்கு கையகப்படுத்தும் பணிகள் நடை பெற்று வருவதால் தாமதம் ஏற்படுவ தாகக் கூறியுள்ளனர். அமைச்சர் இந்த விஷயத்தை முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று நட வடிக்கை எடுத்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். கோரிக்கை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், மழை மற்றும் இயற்கைச் சூழலால் தாமதம் ஏற்பட்டது. தற்போது நிலம் கையகப்படுத்தும் பணியால் மேலும் காலதாமதம் ஆகிறது. வரும் ஜனவரி மாதம் நடராஜர் கோயிலின் ஆருத்ரா தரிசனம் மற்றும் தேர் திருவிழாவின் போது வெளிவட்டச் சாலை பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்த்திருந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. எனவே, 2026 ஜூலையில் நடைபெறும் ஆனித் திருமஞ்சன தேர் மற்றும் தரிசன விழாவிற்குக் குள்ளாவது வெளிவட்டச் சாலை அமைக்கும் பணிகளை முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். (ந.நி)</p>
