இது மாற்றம் அல்ல!
8 May 2026, 9:38 pm

இது மாற்றம் அல்ல!

இந்திய அரசியலமைப்பின் கீழ் நடைபெறும் தேர்தல்கள் மக்கள் நலனுக்கான மாற்றத்தை உரு வாக்க வேண்டுமே தவிர, ஒரு குறிப்பிட்ட சமூகத் திற்கு எதிரான வன்மத்தை விதைக்கக் கூடாது. ஆனால், மேற்கு வங்கத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய சூழல், இந்திய ஜனநாயகம் சந்தித்து வரும் ஆகப்பெரும் அச்சுறுத்தலையே உணர்த்துகிறது.

மேற்கு வங்கத்தின் அடுத்த முதல்வராக அறி விக்கப்பட்டுள்ள சுவேந்து அதிகாரி, மத ரீதியான பிளவை பகிரங்கமாகத் தூண்டிவிடுவது கடும் கண்டனத்திற்குரியது. “நந்திகிராம் இந்துக்கள் என்னை வெற்றி பெற வைத்தனர், நான் அவர்க ளுக்காகவே உழைப்பேன்” என்று அவர் கூறு வது, ஒரு மாநிலத்தின் முதல்வராகப் பொறுப்பேற்க உள்ளவருக்குரிய கண்ணியம் அல்ல. ‘அனைவ ருக்குமான அரசு’ என்ற ஜனநாயகப் பண்பை விடுத்து, முஸ்லிம் சமூகத்தைத் தனிமைப்படுத்தி அவர் பேசியிருப்பது, வரவிருக்கும் அவரது ஆட்சியின் போக்கை இப்போதே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

அண்டை நாடான வங்கதேசத்தில் நடக்கும் சம்பவங்களை முன்வைத்து, காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலைப் போல இங்கும் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என அவர் பேசியி ருப்பது, ஓர் இந்தியத் தலைவரின் நாவிலிருந்து வரக்கூடாத வன்முறைத் தூண்டல். இது மாநி லத்தின் சட்டம் ஒழுங்கைச் சீர்குலைப்பதோடு, சிறு பான்மையினரிடையே தேவையற்ற அச்சத்தை யும் உருவாக்கும்.

தேர்தல் முடிவுகள் வெளியான 48 மணி நேரத்திற்குள் கொல்கத்தா முதல் பிர்பூம் வரை மாநிலம் முழுவதும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைகள் கவலையளிக்கின்றன. திரிணா முல் காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் மாணவர் அமைப்பினர் மீது நடத்தப்படும் தாக்குதல்கள், எதிர்க்கட்சிகளே இல்லாத ஒரு மாநிலத்தை உரு வாக்கத் துடிக்கும் பாசிசப் போக்கின் வெளிப்பாடு.

பிர்பூமில் விவசாயி அபீர் ஷேக் படுகொலை, முர்ஷிதாபாத்தில் சிபிஎம் தோழர் சபிகுல் இஸ்லாம் சுடப்பட்டது எனப் பல உயிர்கள் காவு வாங்கப்பட்டுள்ளன. லுங்கி அணிந்திருப்பவர்க ளைக் கண்டாலே இழிவுபடுத்துவதும், சிறு பான்மையினர் வசிக்கும் பகுதிகளில் தீ வைப்பதும் “மாற்றம்” அல்ல, அது ஜனநாயகத்தின் வீழ்ச்சி.

இதில் மிக முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது தேர்தல் ஆணையத்தின் மெத்த னப் போக்கு. தேர்தல் பாதுகாப்புப் பணிகளுக்காக ஆயிரக்கணக்கான பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டிருந்தும், வன்முறை நடக்கும் இடங்களில் அவர்கள் மவுனப் பார்வையாளர்க ளாக இருப்பது ஏன்? அதிகார மாற்றத்தின் போது ஏற்படும் பதற்றத்தைக் கணித்து, சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கத் தவறிய தேர்தல் ஆணையம் இந்த உயிரிழப்புகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும். எனவே வன்முறையைக் கட்டுப்படுத்தவும், சிறு பான்மையினர் மற்றும் எதிர்க்கட்சியினரின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.