வேளாண் சட்டம் போல ‘விபி ஜி ராம் ஜி’ திட்டத்தையும் திரும்பப்பெற வைப்போம்!
1 Feb 2026, 3:51 pm
<p><strong>வேளாண் சட்டம் போல ‘விபி ஜி ராம் ஜி’ திட்டத்தையும் திரும்பப்பெற வைப்போம்! </strong></p>
<p>சிவகங்கை, பிப். 1 - “மூன்று வேளாண் சட்டங்கள், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு போலவே, ‘விபி ஜி ராம் ஜி’ திட்டத்தையும் மக்கள் துணையுடன் திரும்பப் பெற வைப்போம்!” என்று ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சூளுரைத்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக வெள்ளிக்கிழமை (ஜனவரி 30) சிவ கங்கை மாவட்டம் காரைக்குடிக்கு வந்தார். இங்கு சனிக்கிழமையன்று காலை கானாடுகாத்தானில் ரூ. 61.78 கோடியில் கட்டப்பட்டுள்ள வேளாண் கல்லூரியையும், சி. சுப்பிரமணியம் பெயரிலான புதிய பன்னோக்கு அரங்கத்தையும், பின்னர் கழனிவாசல் பகுதியில் ரூ. 100.45 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சட்டக் கல்லூரியையும் திறந்து வைத்தார். காரைக்குடியில், சிவகங்கை மாவட்டத்திற்கான கூட்டு குடிநீர் திட்டத்தைத் தொடங்கி வைத்த அவர், ரூ. 2559.50 கோடி மதிப்பில் முடிவுற்ற 49 திட்டப்பணிகளைத் திறந்து வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ. 205.06 கோடி மதிப்பில் 15,453 பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கியும் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: தமிழ்நாடு நம்முடைய அரசின் திட்டமிட்ட செயல்பாடுகளால், மாநிலம் வளர்ந்திருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமர், தமிழ்நாடு வளரவேண்டும் என்று பேசி இருக்கிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு, ஒன்றிய அரசின் பொருளாதார அறிக்கை வெளியாகி இருக்கிறது. ஒன்றிய அரசின் பட்ஜெட்டுக்கு முன்பாக இந்த அறிக்கை வந்திருக்கிறது. அதிலும், தமிழ்நாட்டை மனம் திறந்து பாராட்டி இருக்கிறார்கள். புதிதாக தொழில் தொடங்குவதை ஊக்குவிக்கும் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு மேம்படுத்தி இருப்பதாக ஒன்றிய அரசு பாராட்டி இருக்கிறது. உற்பத்தித் துறை வேலை வாய்ப்பில், தமிழ்நாடு முதலிடம் என்று ஒன்றிய அரசின் பொருளாதார அறிக்கை பாராட்டுகிறது. ‘பெண்களுக்கான வேலை வாய்ப்பைப் பெருக்கும் திட்டங்களை தமிழ்நாடு தீட்டியிருக்கிறது, இது மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி’ என்று பெருமையாக சொல்லியிருக்கிறது.. இந்த அறிக்கையை பிரதமரும், ஆளுநரும் படிக்கவேண்டும். படிக்காமல் எந்த நிகழ்ச்சிக்கும் போய்விட வேண்டாம். அறிக்கை நீங்கள் வழங்கிய அறிக்கை தான். உங்கள் ஒன்றிய அரசு தந்திருக்கக்கூடிய அறிக்கை தான். ‘தமிழ்நாட்டிற்கான தொழில் முதலீடுகள் வேறு மாநிலத்திற்கு சென்றுவிட்டது’ என்று ஆளுநர் அவர்கள் குற்றம் சாட்டி வருகின்ற நிலையில்தான் ஒன்றிய அரசின் அறிக்கை, தமிழ்நாட்டை இன்றைக்கு பாராட்டியிருக்கிறது. கிராமப்புறப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருந்து வந்த மகாத்மா காந்தி பெயரிலான 100 நாள் வேலை திட்டத்தை ஒன்றிய பா.ஜ.க. அரசு காலி செய்துவிட்டு, (‘விபி-ஜி ராம் ஜி’ என்ற) வேறு பெயரில் புது திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது. ஒன்றிய பாஜக ஆட்சியாளர்களுக்கு, மகாத்மா காந்தியையும் பிடிக்காது! மக்கள் நன்றாக இருந்தாலும் பிடிக்காது! அதனால்தான் இப்படி செய்கிறார்கள். இதனை நாடாளுமன்றத்தில் நம்முடைய கூட்டணி எம்.பி.க்கள் தீவிரமாக எதிர்த் தார்கள். 100 நாள் வேலை திட்டம் என்று சொல்லுகின்ற மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தில், தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு வரை நாம் கணக்கிட்டுப் பார்த்தால், 65 லட்சம் குடும்பங்கள் பயனடைந்திருக்கிறார்கள். ஆண்டுக்கு 10 ஆயிரம் கோடியிலிருந்து 12 ஆயிரம் கோடி ரூபாய் வரை கிராமப்புற மக்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், இப்போது அவர்கள் கொண்டு வந்திருக்கின்ற புதிய திட்டத்தில் இதில் பாதி வருவதே சந்தேகம்தான். வேலை நாட்களையும் நாம் முடிவு செய்ய முடியாது. மேலே இருந்து அவர்கள் தான் முடிவு செய்வார்களாம். போதாக்குறைக்கு, இனி மாநிலங்கள் 40 விழுக்காடு நிதியை வழங்க வேண்டும் என்று வேறு புது திட்டத்தில் நம் மீது பெரிய தாக்குதலை தொடுத்திருக்கிறார்கள். ஒன்றிய பா.ஜ.க அரசு தன்னுடைய கடமையிலிருந்து நழுவி ஓடுகிறது; கிராமப்புற மக்களை மொத்தமாக கைகழுவி விடுகிறது. இந்த குறைபாடுகளை எல்லாம் சுட்டிக்காட்டி, இந்தத் திட்டத்தை உடனடியாக திரும்ப பெறவேண்டும். மறுபடியும், பழைய திட்டத்தை மகாத்மா காந்தி பெயரிலேயே தொடரவேண்டும் என்று சட்டமன்றத்தில் நாம் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியிருக்கிறோம். மக்களின் குரலுக்கு ஒன்றிய பா.ஜ.க அரசு கட்டாயம் செவிசாய்க்க வேண்டும்! இல்லையென்றால், மூன்று வேளாண் சட்டங்கள், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு போலவே, இதிலும், மக்கள் துணையுடன் உங்கள் முடிவை வாபஸ் பெற வைப்போம்!” இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சூளுரைத்தார்.</p>
