நிலுவையிலுள்ள நீர்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்றுவோம்
30 Mar 2026, 4:56 pm
<p><strong>நிலுவையிலுள்ள நீர்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்றுவோம்</strong></p>
<p>தருமபுரி, மார்ச் 30- விவசாயிகளின் நீண்ட கால தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில், நிலுவையிலுள்ள நீர்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்றுவோம் என பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் டி.என்.வி.எஸ்.செந்தில்குமார் உறுதியளித்தார். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில், தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளராக முன்னாள் எம்.பி., மருத்துவர் டி.என்.வி.எஸ்.செந்தில்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, திங்களன்று தருமபுரி மாவட்டத்திற்கு வருகை தந்த அவருக்கு மொரப்பூர் சந்திப்பு சாலையில் கூட்டணி கட்சியினர் ஆயிரக்கணக்கானோர் திரண்டு உற்சாக வரவேற்பளித்தனர். அப்போது வாக்கு சேகரித்து பேசுகையில், பாலக்கோடு தொகுதி உறுப்பினராக கடந்த 5 முறை, அதாவது 25 ஆண்டுகளாக அதிமுகவை சேர்ந்த கே.பி.அன்பழகன் உள்ளார். மேலும், இரண்டு முறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். ஆனால், இந்த தொகுதி விவசாயிகளின் கோரிக்கைகள் 25 ஆண்டு காலமாக நிறைவேற்றப்படாமலேயே நிலுவையில் உள்ளது. எந்தவொரு வளர்ச்சித் திட்டத்தையும் அவர் தொகுதிக்காக செய்ததில்லை. அலியாளத்திலிருந்து தூள் செட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டம், ஜெர்த்தலாவ் - புலிகரை இணைப்புக் கால்வாய் திட்டம், எண்ணேகொல்புதூர்- தும்பல அள்ளி இணைப்புக் கால்வாய் திட்டம் ஆகிய திட்டங்களை நிறைவேற்ற விவசாயிகள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். அதேபோல கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு அரவை முழு அளவில் நடைபெறுவதில்லை. கடந்த 25 ஆண்டுகளாக விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கைகள் நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாலக்கோடு தொகுதி மக்களின் கால் நூற்றாண்டு கால கோரிக்கைகள், விவசாயிகளுக்கான நீர்ப்பாசனத் திட்டங்கள் ஆகியவற்றை தேர்தலுக்கு பிறகு நிறைவேற்றித்தர நடவடிக்கை எடுக்கப்படும், என உறுதியளித்தார். இதன்பின் காரிமங்கலம் - மொரப்பூர் சாலையில் பொதுமக்களிடம் ஆதரவு திரட்டிய செந்தில்குமார், ராமசாமி கோவில் வழியாக தருமபுரி சாலை மற்றும் கெரகோட அள்ளி வரை நடந்து சென்று வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். இதில் திமுக மாநில விவசாயிகள் அணி துணைத்தலைவர் சுப்பிரமணி, பாலக்கோடு தொகுதி திமுக பார்வையாளர் அரியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
