ஸ்கேன் இந்தியா
19 Nov 2025, 3:33 pm

துண்டு

2030க்கு இப்போதே துண்டு போட்டு இடம் பிடிக்கும் வேலையில் சிராக் பாஸ்வான் இறங்கிவிட்டார். அந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவாராம். அண்மையில் நடந்து முடிந்த தேர்தலிலேயே போட்டியிடுவேன் என்றுதான் சொன்னார். கடைசி நேரத்தில்தான் முடிவை மாற்றினார். தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தவே இந்த உத்தி என்றார்கள். மக்களவைத் தேர்தலில் 100% வெற்றி பெற்றதைப் போலவே, இந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் 29 இடங்களையும் அவரது லோக் ஜன்சக்தி கட்சி கைப்பற்றும் என்று பிரச்சாரம் செய்தார். தங்கள் ஆதரவில்தான் ஆட்சி இருக்கும் என்று நினைத்தார். ஆனால், பத்து இடங்களில் அவரது வேட்பாளர்கள் தோல்வியடைந்தனர். 2030ல் குதிப்பேன் என்று இவர் சொல்வதே அமைச்சரவையில் கூடுதல் இடம், துணை முதல்வர் பதவிக்குதான் என்கிறார்கள்.

புதுசு..!

ஒன்றிய அரசின் என்.சி.இ.ஆர்.டி. புதிய புத்தகங்கள் என்ற அறிவிப்பைச் செய்தபோதே, பெற்றோர்களும், ஆசிரியர்களும் கைகளைப் பிசையத் தொடங்கினார்கள். குறித்த நேரத்தில் புத்தகங்கள் தங்கள் குழந்தைகளுக்குக் கிடைக்காது என்பது அவர்களுக்குத் தெரியும். பழைய அனுபவம் அதுவாகத்தான் இருந்தது. மொத்தம் நான்கு வகுப்புகளுக்கு மாற்றப் போவதாகச் சொன்னவர்கள், இரண்டு வகுப்புகளுக்கு ஜூலை மாதத்தில் தான் வெளியிட்டனர். ஏழு மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு இரண்டாம் பாகங்களை செப்டம்பர்/அக்டோபரில் வெளியிடுவதாகச் சொன்னார்கள். இன்றுவரை வெளியாக வில்லை. தாமதமாவது மட்டுமல்ல, கேள்விக்குரிய வகையிலான பாடங்கள், தவறான கருத்துகள் இந்தப் புத்தகங்களில் இடம் பெறுகின்றன என்று குற்றம்சாட்டு கிறார் என்.சி.இ.ஆர்.டி.யின் பாடப்புத்தக மேம்பாட்டுக்குழுவின் முன்னாள் தலைவர் அனிதா ராம்பால்.

அடி உதை

பாஜக ஆளும் திரிபுராவில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. பீகார் வெற்றியைக் கொண்டாடுகிறோம் என்று சொல்லிக் கொண்டு மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்கள், ஊழியர்கள் வீடுகள் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளன. எதிர்க்கட்சிகள் என்றில்லை, கூட்டணிக் கட்சிகளே ‘பாதுகாப்பில்லை’ என்று அலறுகின்றன. கூட்டணி அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள திப்ரா மோதாவின் எம்.எல். ஏ. பிலிப் ரியாங் தாக்கப்பட்டிருக்கிறார். தலைநகர் அகர்தலாவின் மையப்பகுதியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியில் வைத்தே அவரை அடித்து உதைத்துள்ளார்கள். தாக்கியது அடையாளம் தெரியாத நபர்கள் என்று மட்டும் காவல்துறையினர் திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். விசாரணையின் தன்மையைப் பார்த்தால், எம்.எல்.ஏ. மீதுதான் தவறு என்பார்கள் போலிருக்கிறது. இது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன.

“லபிச்சு”..!

திடீரென்று மலையாளத்தில் கடிதம் அனுப்பியிருக்கிறார் அமித் ஷா. இந்தி பேசாத மாநிலங்களுக்கு தொடர்பு மொழியான ஆங்கிலத்தில் கடிதங்களை எழுதுவதுதான் ஒன்றிய அரசுக்கு வழக்கமானதாகும். பாஜகவின் ஆட்சியில் இந்தியைத் திணிக்கத் தொடர்ந்து முயற்சிகள் நடக்கின்றன. கேரள எம்.பி. ஜான் பிரிட்டாஸ் எழுப்பும் வினாக்களுக்கு ஒன்றிய அமைச்சர்கள் இந்தியில் விடையளித்துக் கடிதம் எழுதி வந்தனர். அதன்பிறகு, அனைவருக்கும் மலையாளத்திலேயே கடிதங்களை ஜான் பிரிட்டாஸ் எழுதினார். அடுத்தபடியாக, நான்கு மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல்கள் நடக்கும் நிலையில், அதில் கேரளாவும் ஒன்று என்பதால், ஜான் பிரிட்டாஸ் எழுதிய கடிதம் ஒன்றிற்கு, கடிதம் “லபிச்சு”(கிடைத்தது) என்று மலையாளத்தில் அமித் ஷா பதில் எழுதியுள்ளார். அடுத்த நான்கைந்து மாதங்களுக்கு ஒன்றிய அரசின் கடிதங்கள் அனைத்தும் மலையாளத்தில் இருக்கும் என்று கிண்டல் எழுந்துள்ளது.