நிறமல்ல நிஜம் வெண்புள்ளி நோயல்ல, வெறும் நிறமாற்றம் தான்!
27 Jun 2026, 8:42 pm

நிறமல்ல நிஜம் வெண்புள்ளி  நோயல்ல, வெறும் நிறமாற்றம் தான்!

“என் முகத்தைக் கண்ணாடியில் பார்க்கும்போது இதயம் சுக்குநூறாக உடைந்துவிடுகிறது” – இது ஏதோ ஒரு சினிமா படத்தின் வசனமல்ல. நம்மிடையே வாழும் ஓர் இளம் பெண்ணின் நெஞ்சை உலுக்கும் மரண வலி. “உயிரே போயிருக்கலாம்... ஆனால், இந்த வெண்புள்ளிகளால் ஒவ்வொரு நாளும் செத்துப் பிழைக்க வேண்டியதாய் இருக்கிறது” என்று கதறும் மனிதர்களின் கண்ணீருக்கு எப்போதுதான் விடிவு காலம் பிறக்கும்? அரைகுறை தகவல்களும், அறிவியலுக்குப் புறம்பான நம்பிக்கைகளும் உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் நெருப்பை அள்ளி கொட்டியிருக்கின்றன. உளவியல் ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் அவர்கள் வெந்து கொண்டிருக்கிறார்கள். வயது, மதம், சாதி, இனம், மொழி, நாடு என எந்தப் பாகுபாடும் இல்லாமல் உலக மக்கள் தொகையில் சுமார் ஒரு சதவீத மக்களும், இந்திய மக்கள் தொகையில் சுமார் 4 சதவீத மக்களும் வெண்புள்ளிகளோடு வாழ்கிறார்கள் என மதிப்பிடப்படுகிறது. அதாவது நமது நாட்டில் கோடிக்கணக்கானோர் இந்த பாதிப்புடன் இருக்கிறார்கள். விட்டில்லகோ (Vitiligo) அல்லது லூகோடெர்மா என்று அழைக்கப்படும் வெண்புள்ளிகள் தான் இந்த வேதனையை பலரது வாழ்க்கையில் வலியோடு திணித்திருக்கிறது.

என்ன செய்கிறது நமது நோய் எதிர்ப்பு மண்டலம்?

“தோல் என்பது மனிதனின் இரண்டாவது மூளை என்பார்கள்”. வெளிப்புறத் தோற்றத்தை மெச்சுகிற இன்றைய உலகில், தோலில் ஏற்படும் ஒரு சிறு மாற்றம் மனிதர்களை உளவியல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் கடுமையாகப் பாதிக்கிறது. ஆனால், இதன் பின்னணியில் இருக்கும் அறிவியல் என்ன? நமது உடலில் நோய் எதிர்ப்பு அமைப்பு (Immune System) உள்ளது. உடலுக்குள் நுழைந்து ஆரோக்கியத்தைக் கெடுக்க முயலும் கிருமிகளை எதிர்த்துப் போராடுவதுதான் இதன் வேலை. ஆனால், சிலருக்கு இந்த அமைப்பு தேவையற்ற ஒரு வேலையைச் செய்துவிடுகிறது. தோலுக்கு நிறத்தினை அளிக்கிற ‘மெலனின்’ எனப்படும் நிறமியைச் சுரக்கும் ‘மெலனோசைட்ஸ்’ செல்களை, ஏதோ கிருமி எனத் தவறாக நினைத்து நமது நோய் எதிர்ப்பு மண்டலமே அழித்துவிடுகிறது. அது எங்கெல்லாம் அழிக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் வெண்மை நிறப் புள்ளிகளோ திட்டுகளோ தோன்றும். மருத்துவ உலகம் இதனை ‘ஆட்டோ இம்யூன் டிஸ்ஆர்டர்’ (Autoimmune Disorder) என்று கூறுகிறது. தோலில் வெண்புள்ளிகள் தோன்ற வைரஸ், பாக்டீரியா போன்ற கிருமிகள் காரணமில்லை. எனவே, இது நோய் இல்லை. அதுமட்டுமல்ல, ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குத் தொற்றும் தன்மையைக் கொண்டதும் அல்ல; பரம்பரையாக வருவதும் அல்ல. இதனால் ஆரோக்கிய ரீதியாக எந்த ஒரு அச்சுறுத்தலும் இல்லை என்பதே மருத்துவ அறிவியல் கூறும் உண்மை.

சமூகம் தந்த வடுக்களும், உடைந்தோடும் இளமையும்

மருத்துவர்களும் சமூகவியலாளர்களும் இது ஆபத்தானது அல்ல என்று தொடர்ந்து கூறிக் கொண்டே இருந்தாலும், சமூகம் இன்னும் முழுமையாக மாறவில்லை. சினிமாவிலும், தொலைக்காட்சிகளிலும், விளம்பரங்களிலும் தோன்றும் மாடல்கள் எல்லோரும் வசீகரமாகக் காட்டப்படுகிறார்கள். அழகு என்றால் வெளிப்புற வசீகரம் தான் என்ற எண்ணத்திற்கு ஆட்படாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். நம் நாட்டில் அதிகமாக விற்கப்படும் அழகு கிரீம்களே இதற்கு சாட்சி. இதில் கருப்பு நிறமாக இருப்பவர்களின் மனநிலையைச் சொல்லவே வேண்டியதில்லை. கருமை நிறத்திலும் ஆங்காங்கே வெண்மைத் திட்டுகள் தோன்றுவது எத்தகைய உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நாம் உணர வேண்டும். குறிப்பாக, வளரிளம் மற்றும் இளம் பருவத்தினருக்கு வெண்புள்ளிகள் ஏற்படும் போது அவர்கள் உடைந்து போகிறார்கள். விதவிதமான உடைகள் உடுத்துவது, அலங்கரித்துக் கொள்வது, கல்வியில் கவனம் செலுத்துவது, வேலைவாய்ப்புக்காக முயல்வது என எல்லாவற்றையும் இந்த வெண்புள்ளிகள் முடக்கி விடுகின்றன. பலரது அனுபவங்கள் இதனை உறுதிப்படுத்துகின்றன. நிறுவனங்கள் தங்களின் கொள்கைகளில் ‘அனைவரையும் உள்ளடக்குதல்’ (Inclusion) பற்றிப் பேசினாலும், நிஜ வாழ்க்கை வேறாக இருக்கிறது. “பணியிடத்தில் என் சக ஊழியர்கள் என்னைத் தனிமைப்படுத்தினார்கள். மதிய உணவின் போது நான் தனியாகத்தான் அமருவேன், யாரும் என்னருகில் வரமாட்டார்கள். அது மிகுந்த மன உளைச்சலைத் தந்தது. அதனாலேயே நான் பல வேலைகளை மாற்ற வேண்டியிருந்தது” என்ற குரல்கள் எத்தனை வேதனையானவை! எல்லாவற்றிற்கும் மேலாக, திருமண உறவுகளில் இளம் பெண்கள் தான் இதனால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள். ஒரு பெண்ணுக்கு வெண்புள்ளிகள் இருந்தால் அவருக்குத் திருமணம் நடப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைந்துவிடுகிறது. திருமணத்திற்குப் பின்பு வெண்புள்ளி ஏற்பட்டால், அப்பெண்ணை கணவன் கைவிடுவதும், குழந்தையோடு தனித்து விடப்படும் கொடுமைகளும் இன்னும் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. பெற்றோரில் ஒருவருக்கு வெண்புள்ளி இருந்தால் குழந்தைகளுக்கும் வந்துவிடும் என்ற அறியாமையால் பல வரன்கள் முறிந்து போகின்றன.

பெருமையோடு ஏற்போம்: சமீஹா மரியத்தின் வண்ணத்துப் பூச்சிகள்

ஆனால், இந்தச் சமூகப் பார்வையை உடைத்தெறிந்து, வெண்புள்ளிகளைத் தங்களின் அடையாளப் பெருமையாக மாற்றும் புதிய தலைமுறையும் உருவாகி வருகிறது. அதற்குச் சிறந்த உதாரணம், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 20 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வைரலான இளம் இன்ஃப்ளூயன்சர் சமீஹா மரியம் (Sameeha Mariam). மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சமீஹாவுக்கு வெண்புள்ளி பாதிப்பு கண்டறியப்பட்டபோது, அவர் அதை மறைக்க விரும்பவில்லை. மாறாக, அதைத் தனது உடலின் இயற்கை டாட்டூவாக (Natural Tattoo) நினைத்தார். “என் கழுத்தில் இருக்கும் வெண்புள்ளிகளை மறைக்க எனக்கு விருப்பமில்லை. அதனால் அதன் மீது வண்ணத்துப் பூச்சிகளையும் மீன்களையும் வரைந்து அழகுபடுத்தினேன்” என்று பெருமிதத்தோடு கூறும் சமீஹாவின் வீடியோக்கள், பலருக்குப் புதிய நம்பிக்கையை ஊட்டியுள்ளன.

30 ஆண்டுகால விழிப்புணர்வுப் போராட்டமும் சட்ட வெற்றிகளும்

வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கம் இந்தியா (LAMI) கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும், சமூகப் பாகுபாடுகளுக்கு எதிராகவும் தொடர் களப்பணியாற்றி வருகிறது. அவ்வியக்கத்தின் செயலாளர் கே. உமாபதி கடந்து வந்த பாதையை நினைவு கூர்கிறார்: “கடந்த காலங்களில் வெண்புள்ளி பாதிப்புள்ள மாணவர்களுக்குப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சேர்க்கை மறுக்கப்பட்ட பல சம்பவங்களை நாங்கள் சட்ட ரீதியாக எதிர்கொண்டுள்ளோம். 2015-ல் விருதுநகரில் உள்ள ஒரு கல்லூரி, மருத்துவர் சான்றிதழ் தந்தும் கூட, இது தொற்றும் தன்மை கொண்டது என்று கூறி ஒரு மாணவரைச் சேர்க்க மறுத்தது. நாங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் ரிட் மனு தாக்கல் செய்தோம். நீதிமன்றம் பிறப்பித்த கடுமையான உத்தரவுக்குப் பிறகே அந்த மாணவருக்கு இடம் கிடைத்தது. மேலும், எந்தவொரு கல்லூரியும் இந்த காரணத்திற்காக மாணவர் சேர்க்கையை மறுத்தால் அவர்களின் ‘NAAC’ அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்ற நிலையை அது உருவாக்கியது.” மேலும், மிக முக்கிய வரலாற்றுச் சாதனையாக, 2010 டிசம்பரில் அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அரசாணையைப் பிறப்பித்தார். அதன்படி, அதுவரை ‘வெண்குஷ்டம்’ என்று சமூகத்தில் அவமதிப்போடு அழைக்கப்பட்ட பெயரை அதிகாரப்பூர்வமாக ‘வெண்புள்ளி’ (White spots) என மாற்றி உத்தரவிட்டார். இந்த மாபெரும் பெயர் மாற்றம், இந்த நிலை குறித்த சமூகப் பார்வையை மாற்றுவதில் மிக முக்கியப் பங்காற்றியது. 2012 முதல், இந்த இயக்கம் வெண்புள்ளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகத் தனியாக சுயவரம் மற்றும் மாபெரும் கூட்டுத் திருமணங்களையும் நடத்தி, அவர்களின் வாழ்வில் ஒளியேற்றி வருகிறது.

சமத்துவச் சமுதாயம் நோக்கி...

திறமையை விட தோல் நிறத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் மனநிலையை சமூகம் கைவிட வேண்டும். வெண்புள்ளி உள்ளவர்களும் இன்று மருத்துவர், பொறியாளர், ஆசிரியர், நீதிபதி, விஞ்ஞானி எனப் பல்வேறு உயரிய பொறுப்புகளில் தங்களது ஆளுமையை நிரூபித்து வருகிறார்கள். வெண்புள்ளி உள்ளவர்களுடன் பழகுவதாலோ, தொடுவதாலோ, ஒன்றாக உணவருந்துவதாலோ எந்தப் பாதிப்பும் யாருக்கும் ஏற்படாது. ராணுவ மருத்துவப் பணிகள் போன்ற சில துறைகளில் காலனித்துவ காலத்து விதிகள் இன்னும் இவர்களுக்குத் தடை விதித்தாலும், அதை மாற்றும் போராட்டங்களும் தொடர்கின்றன. “அனைவரையும் அரவணைக்கும் ஒரு ‘உள்ளடக்கிய சமுதாயம்’ (Inclusive Society) உருவாக வேண்டும். வெண்புள்ளி குறித்த அறிவியல் உண்மைகளை இளைய தலைமுறையினர் தங்களின் குடும்பத்தினருக்கும் சமூகத்தினருக்கும் எடுத்துச் செல்ல வேண்டும்,” என்று உமாபதி வலியுறுத்துகிறார். இத்தகைய பின்னணியில் ஜூன் 25 உலக வெண்புள்ளிகள் தினத்தை முன்னிட்டு, வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கம் இந்தியா, மதுரை அமெரிக்கன் கல்லூரி நுண்ணுயிரியல் துறை மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் (மதுரை மாவட்டம்) ஆகியவை இணைந்து “ஒன்றுகூடி வாழ்வோம்” என்ற தலைப்பிலான சிறப்பு கருத்தரங்கத்தை நடத்தின. அமெரிக்கன் கல்லூரி முதல்வர் மற்றும் செயலாளர் முனைவர் ஜெ. பால் ஜெயகர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வெண்புள்ளி குறித்த அறிவியல் உண்மைகள் உரக்கப் பேசப்பட்டன. இக்கருத்தரங்கமும், அங்கு மாணவர்கள் திரளாகப் பங்கேற்ற கையெழுத்து இயக்கமும் மாற்றத்திற்கான தொடக்கப்புள்ளிதான். வெண்புள்ளிகள் என்பது சாபமல்ல; அது ஒரு தற்காலிக நிறமாற்றம் மட்டுமே. அவர்களுக்குத் தேவைப்படுவது மருத்துவ சிகிச்சையை விட, நாம் காட்டும் அன்பும், சமத்துவமான அங்கீகாரமும் தான்! பளபளக்கும் தோலில் அல்ல, பகுத்தறியும் மனித நேயத்தில்தான் உண்மையான அழகு இருக்கிறது! * ராஜூ பாய்