நாடுமுன்னேற கல்வி முக்கியம் : விஐடி வேந்தர் கோ.விசுவநாதன்
28 Jun 2026, 12:46 am
<p><strong>நாடுமுன்னேற கல்வி முக்கியம் : விஐடி வேந்தர் கோ.விசுவநாதன்</strong></p><p>வேலூர், ஜூன் 27- வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் 2001-ம் ஆண்டு பி.இ. மற்றும் பி.டெக். பயின்ற முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், கத்தார் மற்றும் இந்தியா முழுவதும் இருந்து 175-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் திரளாகக் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் பேசுகையில், கல்வியின் மூலம் மட்டுமே ஒரு நாடு வளர்ந்த நாடாக மாற முடியும் என்றும், விஐடி கல்வியில் முன்மாதிரியாகத் திகழ வேண்டும் என்றும் தெரிவித்தார். குறிப்பாக, ஏழை, எளிய மாணவர்களுக்கு விஐடி வழங்கும் 'ஸ்டார்ஸ்' திட்டத்தின் மூலம் கல்வி கற்கும் மாணவர்கள், தங்கள் பெற்றோரை விட 10 முதல் 20 மடங்கு அதிக ஊதியம் பெறுவது ஒரு சமூகப் பொருளாதார மாற்றத்தை உறுதி செய்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், உயர்கல்வி அறக்கட்டளை மூலம் வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட மாணவர்களுக்குத் தொடர்ந்து உதவித்தொகை வழங்கப்பட்டு வருவதாகவும், முன்னாள் மாணவர்கள் கல்வி வளர்ச்சிக்காகத் தாராளமாக நிதி வழங்க முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். வேலையில் இருப்பவர்கள் தங்கள் குடும்பத்தினரைப் பொறுப்புடன் கவனிக்க வேண்டும் என்றும், வெளிநாடுகளில் பணியாற்றும் இந்தியர்களின் பங்களிப்பு நாட்டின் பொருளாதாரத்திற்குப் பெரிதும் உதவி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். விழாவின் ஒரு பகுதியாக, 2001-ம் ஆண்டு முன்னாள் மாணவர்கள் சார்பில் விஐடியின் 'ஸ்டார்ஸ்' திட்டத்திற்கு 11 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் விஐடி துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், செயல் இயக்குநர் சந்தியா பென்டாரெட்டி, இணை துணைவேந்தர் பார்த்தசாரதி மல்லிக், பதிவாளர் ஜெயபாரதி, முன்னாள் மாணவர் துறை இயக்குநர் கார்த்திகேயன், புதுச்சேரி எம்எல்ஏ செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.</p>
