கழிவுநீர் தேக்கம்: தொற்றுநோய் பரவும் அபாயத்தால் மக்கள் அச்சம்
27 Jun 2026, 12:25 am
<p><strong>கழிவுநீர் தேக்கம்: தொற்றுநோய் பரவும் அபாயத்தால் மக்கள் அச்சம் </strong></p><p>விழுப்புரம், ஜூன் 26- விழுப்புரம் அருகே உள்ள சாலை அகரம் ஊராட்சி குடியிருப்புப் பகுதியில், கழிவுநீர் தேங்கியுள்ளதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது சாலை அகரம் ஊராட்சி. இங்குள்ள ஆறுமுகம் நகர் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் முறையான வடிகால் வசதி இல்லாததால், அருகிலுள்ள விழுப்புரம் நகராட்சிப் பகுதியிலிருந்து வரும் கழிவுநீர், காலி மனைகளிலும் குடியிருப்புப் பகுதிகளிலும் தேங்கி நிற்கிறது. தேங்கியுள்ள கழிவுநீரில் பன்றிகள் சுற்றித் திரிவதால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதுமட்டுமின்றி, கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், குடிநீர்க் குழாய்களில் சாக்கடை நீர் கலப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் பலர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது. தற்போதுள்ள சூழலே இவ்வளவு மோசமாக இருக்கும்போது, வரும் மழைக்காலங்களில் நிலைமை இன்னும் மோசமடையும் என மக்கள் அஞ்சுகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகமும் ஊராட்சி நிர்வாகமும் உடனடியாகத் தலையிட்டு, தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற வேண்டும், நிரந்தர வடிகால் வசதி அமைக்க வேண்டும் மற்றும் குடிநீர் மாசடைவதைத் தடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.</p>
