தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீவிரமடையும் முதலாளித்துவ நெருக்கடி அம்பலப்படுத்திய மே தினப் பேரணிகள் - பேராசிரியர் விஜய் பிரசாத்

17 May 2026, 10:15 pm
தீவிரமடையும் முதலாளித்துவ நெருக்கடி அம்பலப்படுத்திய மே தினப் பேரணிகள் - பேராசிரியர் விஜய் பிரசாத்

தீவிரமடையும் முதலாளித்துவ நெருக்கடி அம்பலப்படுத்திய மே தினப் பேரணிகள் - பேராசிரியர் விஜய் பிரசாத்

இந்த மே தினத்தில், உலகெங்கிலும் உள்ள உழைக்கும் வர்க்கத்தினர் மீண்டும் வீதிகளில் இறங்கிப் போராடினர். இது கடந்த காலப் போராட்டங்களை நினைவுகூரும் ஒரு சடங்கு அல்ல; மாறாக, தற்போதைய காலத்தின் ஆழமான முரண்பாடுகளை எதிர்கொள்வதற்கான ஒரு அவசியமாகும். சாண்டியாகோ முதல் இஸ்தான்புல் வரையிலும், பாரிஸ் முதல் மணிலா வரையிலும், போர், பணவீக்கம் மற்றும் வாழ்க்கையின் மீதான மூலதனத்தின் இறுக்கமான பிடியால் இருண்ட சூழலில், உழைக்கும் மக்களின் செங்கொடிகள் எழுச்சி பெற்றுள்ளன.

கண்டங்கள் கடந்த முழக்கங்கள்

கண்டங்கள் முழுவதிலும் உள்ள தொழிலாளர்கள் சில அவசரமான கோரிக்கைகளின் கீழ் அணி திரண்டனர்: ஊதிய உயர்வு, வேலை பாதுகாப்பு, சிறந்த வேலை நிலைமைகள், கண்ணியம் மற்றும் அமைதி - இவைதான் அந்தக் கோரிக்கைகள். ஏகாதிபத்தியத்தின் மையங்களான வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள தொழிற்சங்கங்கள், தங்கள் நாட்டு அரசாங்கங்களால் உலகின் மீது திணிக்கப் படும் போர்களுக்கான விலையைத் தொழிலாளர்கள் ஏற்கக் கூடாது என்று எச்சரித்தன. ஈரான் மீதான தொடர்ச்சியான போர், எரிசக்தி பொருட்களின் விலைகளை உயர்வாக வைத்திருப்பதுடன், ஏற்கனவே நலிவடைந்துள்ள குடும்பப் பொருளாதாரங்களைச் சிதைத்து வருகிறது.

ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் பணவீக்கத்திற்கு எதிராகவும், லத்தீன் அமெரிக்காவில் பொருளாதாரத் துயரங்கள் மற்றும் அரசு ஒடுக்குமுறைக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன. இந்த நெருக்கடி உலகளாவியது, இது முதலாளித்துவத்தால் உருவாக்கப்பட்டது, இதை உழைக்கும் வர்க்கத்தின் போராட்டங்களால் மட்டுமே எதிர்கொள்ள முடியும் என்ற ஒரே மொழியைத்தான் உலகெங்கும் உள்ள வீதிகள் மே தினத்தன்று பேசின.

ஹே மார்க்கெட் ‘கண்டத்தின்’ புதிய உத்திகள்

1886-ல் அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள ஹே மார்க்கெட் சதுக்கத்தில் தொழிலாளர் ஆர்ப்பாட்டத்தின் மீது நடத்தப்பட்ட வன்முறையான ஒடுக்குமுறையின் நினைவாகவே மே தினம் உருவானது. அமெரிக்கத் தொழிலாளர்களுக்கும் இந்த வரலாற்று நிகழ்விற்கும் உள்ள தொடர்பை உடைக்க, அமெரிக்க அரசு செப்டம்பர் மாதத்தில் ஒரு ‘தொழி லாளர் தினத்தை’ உருவாக்கியது. இது நாட்டின் உழைக்கும் வர்க்கப் பண்பாட்டின் வேர்களை அழிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட கம்யூனிஸ்ட் எதிர்ப்பு நடவடிக்கையாகும்.

ஆனால், இந்த மே தினத்தில், ஐக்கிய மோட்டார் தொழிலாளர் சங்கத்தின் (UAW) தலைவர் ஷான் ஃபைன், மே தினத்தை மீட்டெடுப்பதற்கான அடித்தளத்தை அமைப்பதாகக் கூறினார். ‘மே டே ஸ்ட்ராங்’ (May Day Strong) என்ற அணிதிரட்டல் மூலம் ‘வேலை இல்லை, பள்ளி இல்லை, ஷாப்பிங் இல்லை’ என்ற ஒருங்கிணைந்த பொருளாதார முடக்க நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இது தொழிலாளர் களின் அதிகாரம் வெறும் தற்காப்புப் போராட்டத்தில் மட்டுமல்ல, தங்களைச் சுரண்டும் இந்த அமைப்பை இயக்க மறுப்பதிலும் உள்ளது என்பதை உணர்த்தியது.

உலகளாவிய வர்க்கப் போராட்ட வடிவங்கள்

வர்க்கப் போராட்டத்தின் வடிவங்கள் உலகம் முழுவதும் மாறுபட்டாலும், அவற்றின் உள்ளடக்கம் ஒன்றாகவே இருந்தது:

• இந்தியா: வேலை நேரத்தை 12 மணி நேரமாக நீட்டிக்கும் அரசின் நடவடிக்கையைத் தொழி லாளர்கள் கடுமையாகக் கண்டித்தனர், இது 19-ஆம் நூற்றாண்டின் தொழிலாளர் போராட்டங்களை நினைவூட்டுகிறது.

• துருக்கி: தக்சிம் சதுக்கத்தைத் தொழிலாளர்கள் தன்வசமாக்குவதைத் தடுக்க அரசு கண்ணீர்ப்புகைக் குண்டுகள் மற்றும் கைதுகள் மூலம் ஒடுக்குமுறையை ஏவியது.

• பிரான்ஸ்: தொழிலாளர் சீர்திருத்தங்களுக்கு எதிராக வும், தங்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அணிதிரண்டனர்.

• அர்ஜென்டினா: தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பின் தலைவர் ஆக்டேவியோ அர்குயெல்லோ, “எங்கள் பொறுமை முடிந்துவிட்டது, ஜனாதிபதி அவர்களே!” என்று முழங்கினார்.

சமூக மறு உற்பத்தியின் பொது நெருக்கடி

தொழிலாளர் வர்க்கம் களமிறங்கியபோது, இந்த முதலாளித்துவ நெருக்கடியின் அளவு மறுக்க முடியாததாக மாறியது. நாம் இப்போது வாழும் காலம் ‘சமூக மறுஉற்பத்தியின் பொதுவான நெருக்கடி’ ஆகும். உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு ஒருபுறம் இருந்தாலும், வாங்கும் திறன் சரிவு, நீண்ட வேலை நேரத்தின் சோர்வு மற்றும் கடனில் மூழ்கும் தொழிலாளர்களின் அவநம்பிக்கை ஆகியவற்றில் இந்த அநீதி வாழ்கிறது. உலகளாவிய விநியோகச் சங்கிலிகள் கண்டங்கள் முழுவதும் பரவியிருந்தாலும், தொழிலாளர்களின் உரிமைகள் பரவவில்லை. மூலதனம் சுதந்திரமாக நகர்கிறது, ஆனால் உழைப்பு முடக்கப்படுகிறது.

இருப்பினும், வரலாறு வெறும் துயரங்களால் மட்டும் நகர்வதில்லை, அது போராட்டங்களால் நகர்கிறது. 2026-ஆம் ஆண்டு ஏற்கனவே பல்வேறு தொழிலாளர் போராட்டங்களைக் கண்டுள்ளது. நியூயார்க் செவிலியர்கள் பாதுகாப்பற்ற நிலைமை களுக்கு எதிராக வெளிநடப்பு செய்தனர்; சான் பிரான்சிஸ்கோ ஆசிரியர்கள் முதல்முறையாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். நார்வே மற்றும் காபோனிலும் கடுமையான போராட்டங்கள் நடந்துள்ளன.

புதிய வடிவப் போராட்டங்கள்

பாரம்பரிய தொழிலாளர் தகராறுகளுக்கு அப்பாற்பட்டு, சில புதிய வடிவப் போராட்டங்கள் எழுந்துள்ளன:

1.  அயர்லாந்து: எரிசக்தி செலவு உயர்வுக்கு எதிராக ஓட்டுநர்கள் சாலை முற்றுகைகள் மற்றும் மெதுவான பயண உத்திகள் மூலம் முக்கிய போக்குவரத்து வலைப்பின்னல்களை முடக்கினர்.

2. தென் கொரியா: சுரங்கப்பாதை தொழிலாளர்கள் முழுமையான வேலைநிறுத்தத்திற்குப் பதிலாக பகுதி இணக்கம் மற்றும் மந்தநிலை உத்திக ளைப் பயன்படுத்திப் பொதுமக்களின் ஆதரவை இழக் காமல் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்தனர்.

3. பிரேசில்: விநியோகத் தொழிலாளர்கள் (Delivery workers) குறிப்பிட்ட வழிகள் அல்லது அதிக தேவை உள்ள பகுதிகளை ஒட்டுமொத்தமாக மறுப்பதன் மூலம், முழு வருமான இழப்பைத் தவிர்த்து நிறுவனங்களின் செயல்திறனை முடக்கினர்.

4. இந்தியா: இயங்குதளத் தொழிலாளர்கள் (Platform workers) செயலிகளில் இருந்து பெருமளவில் லாக்-ஆஃப் (Log-off) செய்ததன் மூலம் சேவைகளை முழுமையாக முடக்கினர். இது அல்காரிதம் மூலம் நிர்வகிக்கப்படும் உழைப்பு முறையின் பலவீனத்தை அம்பலப்படுத்தியது.

5. நைஜீரியா: எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக போக்குவரத்து சங்கங்கள் மற்றும் முறைசாரா துறை தொழிலாளர்கள் தலைநகரங்களில் ஒருங்கிணைந்த நிறுத்தங்களை மேற்கொண்டனர்.

சர்வதேச ஒருமைப்பாட்டின் தேவை

இந்தப் போராட்டங்கள் இன்னும் முழுமையாக ஒன்றிணையவில்லை; அவை துறை சார்ந்ததாக, தேசிய அளவிலான தற்காப்புப் போராட்டங்களாகவே உள்ளன. தற்போதைய முதலாளித்துவ அமைப்பால் தங்களின் வாழ்க்கையைத் தக்கவைக்க முடியாது என்ற பொதுவான கருத்து இந்த அனைத்துப் போராட்டங்களுக்குள்ளும் உள்ளது. இருப்பினும், இந்தத் துண்டுகளை ஒரு பெரிய சக்தியாக மாற்றுவதற்கான அரசியல் திட்டம் இன்னும் முழுமையடையவில்லை. சில பத்தாண்டு கால நவதாராளவாதக் கொள்கைகளால் தொழிற்சங்கங்கள் பலவீனப்படுத்தப்பட்டுள்ளன.

ஆயினும் கூட்டு அதிகாரத்தின் நினைவு இன்னும் அழியவில்லை. மே தினமே அந்த நினைவின் சாட்சியம் தான். 2028-ல் அமெரிக்காவில் பொது வேலைநிறுத்தத்திற்கான அழைப்பு மற்றும் இந்தியாவில் தாராளமயமாக்கல் காலம் முழுவதும் ஆண்டுதோறும் நடைபெறும் பொது வேலைநிறுத்தங்கள் ஆகியவை தொழிலாளர்கள் செயலற்றவர்கள் அல்ல, அவர்கள் செயலில் உள்ள ஆற்றல்கள் என்பதை உணர்த்துகின்றன. முன்னேறிச் செல்ல நமக்கு சர்வதேச ஒருமைப்பாடு தேவை. அது வெறும் முழக்கமாக அல்லாமல் நடைமுறையாக மாற வேண்டும். சாண்டியாகோ, பாரிஸ் மற்றும் மணிலாவில் உள்ள தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் ஒன்றோடொன்று தொடர்புடையவை, எனவே ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டமும் உல களாவிய அளவில் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.

இந்த மே தினத்தில், தொழிலாளர் வர்க்கம் வெறும் தற்காப்புப் போராட்டத்தை மட்டும் நடத்தவில்லை; அது தங்களின் ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளது. உழைக்கும் வர்க்கம் தங்களைப் பற்றிய விழிப்புணர்வைக் கொள்ளும்போது மட்டுமே எதிர்காலம் நீதியானதாக மாறும். பீப்பிள்ஸ் டெமாக்ரசி , மே 10 தமிழில் சுருக்கம் : எஸ்.பி.ஆர்

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.