நிதி ஒதுக்கீடு இல்லாததால் பாதிப்பு ஊத்துக்குளி சிபிஎம் கவுன்சிலர் கு.சரஸ்வதி பேட்டி
28 minutes before

நிதி ஒதுக்கீடு இல்லாததால் பாதிப்பு ஊத்துக்குளி சிபிஎம் கவுன்சிலர் கு.சரஸ்வதி பேட்டி

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பேரூராட்சி 7-வது வார்டு உறுப்பினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளருமான கு.சரஸ்வதி, கடந்த 2022 முதல் ஆற்றிவரும் பணிகள் மற்றும் தீர்க்கப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்துக் கூறியதாவது:

"தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் சென்னிமலை சாலை ரயில்வே நுழைவாயில் பகுதியில் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் அமைத்து கழிவுநீர் தேங்கும் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது. கிணத்தாங்காடு மற்றும் பாரதி நகர் பகுதிகளில் தார் சாலைகள் அமைக்கப்பட்துடன், தெற்கு ராஜ வீதியிலும் பேவர் பிளாக் போடப்பட்டுள்ளது. பாரதி நகர் பொதுக் கழிப்பிடம் சீரமைக்கப்பட்டு, ரூ.1.5 கோடி சந்தை மேம்பாட்டு நிதி எந்த முறைகேமின்றி முழுமையாகப்பயன்படுத்தப்பட்டது. மேலும், வாட்ஸ்அப் குழு மூலம் பொதுமக்களுக்குமுன்கூட்டியே தகவல் தெரிவித்து குடிநீர் சீராக விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும், பல முக்கியப் பணிகள் இன்னும் நிலுவையில் உள்ளன. பட்டியலின மயானத்தையொட்டி வாவி குளம் இருப்பதால் குழியில் தண்ணீர் ஊறுகிறது. இதைத் தடுக்க தடுப்புச்சுவர், எரிமேடை மற்றும் புதைக்கும் இடம் தனித்தனியாக அமைக்கப்பட வேண்டும். பாரதிநகர் கழிப்பிடத்தில் ஆண், பெண்களுக்கு தலா 4 அறைகள் கொண்ட கூடுதல் கழிப்பறைகள் மற்றும் சென்னிமலை சாலையில் புதிய மேல்நிலைத் தொட்டி அமைக்க வேண்டும்.

ரூ.15.28 கோடி மதிப்பிலான அம்ருத் குடிநீர் திட்டப் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு, அனைத்துவார்டுகளிலும் சோதனை ஓட்டம் நடத்தப்படும் வரை சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு நிதி விடுவிக்கக் கூடாது. குப்பை கிடங்கு நிரம்பிவிட்டதால், அரசு கரடு புறம்போக்கு நிலத்தில் புதிய குப்பை மேலாண்மை மையம் அமைக்க வேண்டும்.

பேரூராட்சியில் சொத்து வரி உயர்த்தப்பட்டதை கடுமையாக எதிர்த்துள்ளோம். கடந்த ஆறு மாதங்களாக மாநில அரசு போதிய நிதி ஒதுக்காததால் வழக்கமான பணிகள் கூட மந்தமடைந்துள்ளன. எனவே, உடனடியாக நிதியை விடுவித்து மக்கள் நலத் திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும்" என்றார்.