தீக்கதிர் உலக செய்திகள்
30 Aug 2026, 8:43 pm

அமெரிக்கா - வெனிசுலா எண்ணெய் ஒப்பந்தம்

வெனிசுலாவில் ஹைட்ரோகார்பன் தொழில்துறை உள்கட்டமைப்பை மறுகட்டமைப்பு செய்ய தேவையான முதலீட்டை ஊக்குவிக்க அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக வெனிசுலா அறிவித்துள்ளது. வெனிசுலாவின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் வெளியிட்ட அறிக்கையில், இந்த ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த உதவுவதுடன், நாட்டின் எரிசக்தி துறையில் பெரும் முதலீடுகள் வர உதவி செய்யும் என்று தெரிவித்துள்ளார். தனியார் நிறுவனங்களின் பங்கேற்புடன் வெனிசுலா தனது எண்ணெய் உற்பத்தியை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்க இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தை தொடங்க ஐ.நா வலியுறுத்தல்

அமெரிக்காவும் ஈரானும் தங்களது போரை முடிவுக்குக் கொண்டுவர மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்று ஐ.நா பொதுச்செயலாளர் அந்தோணியோ குட்டரெஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஆறு மாத காலமாக நடக்கும் இந்தத் தொடர் போர் ஒரு துயரம். இதற்கு அரசு ரீதியாக நடத்தும் பேச்சுவார்த்தை மட்டுமே தீர்வு தரும் ஒரே வழி என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம். மேலும், அமெரிக்காவும் ஈரானும் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம் என குட்டரெஸ் கூறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நாள்தோறும் 1000 டிரோன்கள் ஏவ உக்ரைன் திட்டம்

நீண்ட தூரம் சென்று தாக்கும் ஃபிலமிங்கோ (Flamingo) க்ரூஸ் ஏவுகணைகளுக்கான பாகங்கள் சேமிக்கப்பட்டிருந்த உக்ரைனின் ராணுவக் கிடங்கு மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும் உக்ரைன் தலைநகர் கிய்வ் மற்றும் அதனை சுற்றியுள்ள ராணுவம் தொடர்பான இடங்கள். வெளிநாடுகள் கொடுத்த ஆயுதங்கள் வைக்கப்பட்டிருந்த கிடங்குகள் மீதும் ரஷ்யா தாக்குதல்கள் தொடுத்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ரஷ்யாவிற்குள் நீண்ட தூரம் சென்று தாக்கும் வகையில் நாள்தோறும் 100 டிரோன்களை அனுப்ப ஜெலென்ஸ்கி உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

செயற்கை நுண்ணறிவு மூலமாக இயங்கும் ஆயுதங்களுக்கு தடை விதிக்க வேண்டும்

ஜெனீவா,ஆக.30-செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் மூலமாக இயங்கும் தானி

யங்கி ஆயுதங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என ஐ.நா அவை மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளன.

ஐ.நா பொதுச்செயலாளர் அந்தோணியோ குட்டரெஸ் மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் (ICRC) தலைவர் மிர்ஜானா ஸ்போல்ஜாரிக் ஆகியோர், தானியங்கி ஆயுதங்களுக்கு அவசரத் தடைகளும் கட்டுப்பாடுகளும் விதிக்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

இப்பிரச்சனை தொடர்பாக தெளிவான சர்வதேச வரையறைகளை நிர்ணயிக்க வேண்டும். அதுவே அனைத்து நாடுகளுக்கும் பயனளிக்கும் என்று குட்டரெஸ் மற்றும் செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் ஸ்போல்ஜாரிக் ஏற்கெனவே 2023 இல் தங்களின் கூட்டறிக்கையில் கூறியிருந்தனர். தானியங்கி ஆயுதங்கள் பற்றிய முதல் விவாதம் 2014-இல் தொடங்கியது.

சமீப ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் தாங்களாகவே இயங்கி குறிவைத்து குண்டுவீசவும் துப்பாக்கிச் சூடு நடத்தும் வகையிலான ஆயுதங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. பெரும்பாலும் டிரோன்கள், ஆளில்லா விமானங்கள், கண்காணிப்பு கோபுரங்களில் பொருத்தப்பட்டுள்ள தானியங்கி ரோபோட்டிக்ஸ் தொழில் நுட்பத்துடன் கூடிய துப்பாக்கிகள் இத்தகைய தாக்குதலில் ஈடுபடுத்தப்படுகின்றன.

இயந்திரங்கள் தானாகவே மனிதர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தும் நடவடிக்கைகள் மிக ஆபத்தான கட்டத்தை நெருங்கிக் கொண்டுள்ளது. அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதகுலத்திற்குச் சேவை செய்ய வேண்டுமே தவிர, மக்களை ஆபத்தில் தள்ளக்கூடாது என குட்டரெஸ் தனது கவலையை தெறிவித்துள்ளார்.

உக்ரைன்-ரஷ்யா போர், காசாவில் இஸ்ரேல் நிகழ்த்தும் இனப்படுகொலை, ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போர் மற்றும் சூடான் உள்நாட்டுப் போர் என சமீபத்தில் நடந்து வரும் போர்களில் டிரோன்கள் மற்றும் பிற தானியங்கி ஆயுதங்களின் பயன்பாடு அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டி, ஐ.நா மற்றும் பிற அமைப்புகள் அவற்றின் பயன்பாட்டிற்கான விதிகளை வரையறுக்க வேண்டும் என்று ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளன. தற்போதுள்ள சர்வதேச சட்டங்களாலும், மாநாடுகளாலும் இத்தகைய ஆயுதங்களை கட்டுப்படுத்த முடியாது என்ற நிலையில் கட்டுப்படுத்துவதற்காக புதிய கோரிக்கைகள் எழுந்துள்ளன.

தானியங்கி ஆயுதங்கள் குறித்த தெளிவான புரிதல் இல்லாதது, அவற்றின் பயன்பாடு குறித்து சட்டப்பூர்வமாகப் பிணைக்கப்பட்ட ஒப்பந்தம் இல்லாதது, போன்ற காரணங்களால் தானியங்கி ஆயுதங்களால் நடத்தப்படும் கொடூரமான தாக்குதலுக்கு யார் பொறுப்பு என்பதை சட்டப்பூர்வமாக தீர்மானிப்பது கடினமாகிறது.

பெரும்பாலான நாடுகளின் ராணுவத்தில் புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் அதிகளவில் சேர்க்கப்பட்டு வருகின்றன. வரும் ஆண்டுகளில் இந்தப் பிரச்சனை பல மடங்கு அதிகரிக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

தற்போதுள்ள சர்வதேச சட்டங்கள் பொதுமக்கள் மற்றும் பொது உள்கட்டமைப்புகள் மீது குறிவைத்து தாக்குவதை தடைசெய்கிறது. இருப்பினும் அத்தடைகளை மீறி பொது மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றது. இந்நிலையில் தானியங்கி ஆயுத அமைப்புகள் தாக்குதல் நடத்தும் போது இந்தக் கட்டுப்பாடுகள் தெளிவற்றதாகிவிடுகின்றன.

இந்நிலையில் போர்களில் “மனித தலையீடு இன்றி உயிர்களைப் பறிக்கக்கூடிய அனைத்து இயந்திரங்களுக்கும் (தானியங்கி ஆயுதங்களுக்கு) சட்டப்பூர்வ தடை விதிக்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருவதாகவும் ஐ.நா அவை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

செயற்கை நுண்ணறிவு சார்ந்த அரை-தானியங்கி (semi-automatic) ஆயுதங்கள் தொடர்பான விதிகளை ஜெனீவாவில் அடுத்த வாரம் உலக நாடுகள் விவாதிக்க உள்ளன. இதில் தானியங்கி ஆயுதங்களுக்கு தடை விதிப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க முயற்சிகளும் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.