தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அமெரிக்காவின் பொருளாதாரத் தடையால் கியூபாவின் சுகாதார சேவைகள் கடும் பாதிப்பு - ஐ.நா.வில் கியூபா குற்றச்சாட்டு

29 Aug 2026, 6:30 pm
அமெரிக்காவின் பொருளாதாரத் தடையால் கியூபாவின் சுகாதார சேவைகள் கடும் பாதிப்பு - ஐ.நா.வில் கியூபா குற்றச்சாட்டு

அமெரிக்காவின் பொருளாதாரத் தடையால் கியூபாவின் சுகாதார மற்றும் சமூகம் சார்ந்த சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக கியூபா ஐக்கிய நாடுகள் சபையில் குற்றம்சாட்டியுள்ளது.

ஐ.நா. வளர்ச்சித் திட்டம் (UNDP), ஐ.நா. மக்கள் தொகை நிதியம் (UNFPA), ஐ.நா. திட்ட சேவைகள் அலுவலகம் (UNOPS) ஆகியவற்றின் நிர்வாகக் குழுவின் இரண்டாவது கூட்டத்தொடரில் ஐ.நா. சபைக்கான கியூபாவின் நிரந்தரப் பிரதிநிதி துணைத் தூதர் டேலெனிஸ் மொரேனோ குவேரா பேசுகையில், பெண்கள், சிறுமிகள் மற்றும் இளம் பருவத்தினரின் உரிமைகளைப் பாதுகாப்பதிலும், பாலியல் மற்றும் இனப்பெருக்க உரிமைகளை முன்னேற்றுவதிலும் கியூபா குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஆனால், அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள், எரிசக்தித் தடை மற்றும் ராணுவத் தாக்குதல் குறித்த அச்சுறுத்தல்கள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளால், இந்த முன்னேற்றங்களைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது மிகவும் கடினமாகியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் பொருளாதாரத் தடையால் அத்தியாவசிய சுகாதார சேவைகளைப் பெறுவதில் கியூப மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும், குறிப்பாக, 34,000-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு கர்ப்பகால அல்ட்ராசவுண்ட் பரிசோதனை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், குழந்தை இறப்பு விகிதம் இருமடங்காக அதிகரித்து, 1,000 பிறப்புகளுக்கு 9.8க்கும் அதிகமான இறப்புகள் என்ற அளவைத் தாண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச மனிதாபிமான உதவிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், ஐ.நா. அமைப்புகளின் நன்கொடைகள் உள்ளிட்ட 7,000-க்கும் மேற்பட்ட சரக்குக் கொள்கலன்கள் கரீபியன் துறைமுகங்களில் தேங்கியுள்ளதாகவும், மேலும் 170 கொள்கலன்கள் கியூபாவை வந்தடைந்தபோதிலும், எரிபொருள் பற்றாக்குறை காரணமாக அவை விநியோகிக்கப்படாமல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

குழந்தை பிரசவித்த பெண்களின் பராமரிப்புக்கும், கருத்தடை மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகளும் இதில் அடங்கும். UNFPA சார்பில் நன்கொடையாக வழங்கப்பட்ட 126 பாலியல் சுகாதாரக் கருவிகள், மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவப் பிரிவுகளுக்கான 20 படுக்கைகள் மற்றும் அலமாரிகள், ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஆணுறைகள், பிரசவம் மற்றும் அதன் சிக்கல்களுக்குத் தேவையான உயிர்காக்கும் மருந்துகள் ஆகியவை இரண்டு மாதங்களுக்கும் மேலாக அனுப்பப்படாமல் காத்திருப்பதாகவும், “கியூபாவின் இந்த நிலைமை, இந்தக் கொடூரமான கொள்கையின் தாக்கத்திற்கான தெளிவான சான்றாகும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கியூபா மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடையை நீட்டிக்கும் உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆகஸ்ட் 20 அன்று கையெழுத்திட்டார். இதன்படி, பொருளாதாரத் தடை 2027 செப்டம்பர் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவை கியூப வெளியுறவுத்துறை அமைச்சர் புருனோ ரோட்ரிக்ஸ் கடுமையாகக் கண்டித்திருந்தார். அமெரிக்காவின் கொள்கையை “இனப்படுகொலை” எனக் குறிப்பிட்ட அவர், கியூபா முழுவதையும் “மூச்சுத்திணறச் செய்ய” அமெரிக்கா முயற்சிப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.