உலகின் மிகப்பெரிய அச்சுறுத்தல் அமெரிக்கா - பென் நார்டன்
17 Jul 2026, 8:24 pm

உலகின் மிகப்பெரிய அச்சுறுத்தல் அமெரிக்கா - பென் நார்டன்

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுடன் இயங்கும் ‘ஜனநாயகப் பார்வைக் குறியீட்டெண்’ (Democracy Perception Index 2026) முடிவுகளின்படி, உலக நாடுகளில் உள்ள பெரும்பாலான மக்கள் அமெரிக்காவை உலகின் மிகப்பெரிய அச்சுறுத்தலாகக் கருதுவதாகவும், அமெரிக்காவை விட சீனாவையே விரும்புவதாகவும் உலகளாவிய கணக்கெடுப்பு கண்டறிந்துள்ளது. 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பல்லாயிரக்கணக்கான மக்களிடம் நடத்தப்பட்ட இந்த விரிவான ஆய்வில், அமெரிக்காவுக்கான ஆதரவு கடுமையாகச் சரிந்துள்ள தெற்குலக நாடுகளில், சீனாவின் ஏற்பு விகிதம் வியத்தகு அளவில் உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது.

‘ஜனநாயகங்களின் கூட்டணி’ (Alliance of Democracies) என்ற குழுவால் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஆய்வு இதுவாகும். இந்த அமைப்பை நேட்டோவின் முன்னாள் பொதுச்செயலாளரும், டென்மார்க்கின் வலதுசாரி முன்னாள் பிரதமருமான ஆண்டர்ஸ் ஃபோக் ராஸ்முசென் நிறுவினார். இதற்கு மைக்ரோசாப்ட், பாலன்டிர், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜனநாயகத்திற்கான ஐரோப்பிய அறக்கட்டளை, அமெரிக்க அரசாங்க ஆதரவு பெற்ற ஃப்ரீடம் ஹவுஸ் மற்றும் தைவான் ஆகியவை நிதியளிக்கின்றன. இப்படிப்பட்ட அமெரிக்கச் சார்பு பின்னணி கொண்ட குழுவின் 2026 அறிக்கைதான், வாஷிங்டனில் உள்ள தீவிர வலதுசாரிப் போக்காளர்களை ஆழமாகக் கோபப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவே உலகிற்குப் பெரும் ஆபத்து

இந்த ஆய்வில், 84 நாடுகளில் 23,968 பேரிடம் “உலகிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் எது?” என்று கேட்கப்பட்டது. இதில் 65 நாடுகளில் உள்ள பெரும்பாலான மக்கள், அமெரிக்காதான் மிகப்பெரிய ஆபத்து என்று கூறியுள்ளனர். 10 நாடுகள் (பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகள்) ரஷ்யாவையும், மேற்கு ஆசியா மற்றும் வட ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 7 நாடுகள் இஸ்ரேலையும், இஸ்ரேல் ஈரானையும், ஜப்பான் சீனாவையும் அச்சுறுத்தலாகக் குறிப்பிட்டுள்ளன. அதேபோல், 97 நாடுகளில் “உங்கள் நாட்டில் அமெரிக்கா ராணுவத் தளங்களை அமைக்க வேண்டுமா?” என்று கணக்கெடுத்ததில், 86 நாடுகளில் உள்ள பெரும்பாலான மக்கள் ‘வேண்டாம்’ என நிராகரித்துள்ளனர். இஸ்ரேல், போலந்து, போர்ட்டோ ரிகோ, தென் கொரியா ஆகிய நான்கு நாடுகளில் மட்டுமே இதற்கு ஆதரவு இருந்தது. ஒட்டுமொத்தமாக 74 சதவீதம் பேர் அமெரிக்கா மீது எதிர்மறையான பார்வையை வெளிப்படுத்தியுள்ளனர். ஐரோப்பா, மேற்கு ஆசியா, வட ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய-பசிபிக் பிராந்தியங்களில் அமெரிக்கா மிக அதிகமாக வெறுக்கப்படுகிறது.

சீனாவின் செல்வாக்கும் சர்வதேச ஆதரவும்

இதற்கு மாறாக, கணக்கெடுக்கப்பட்ட 83 நாடுகளில் 63 நாடுகளில் உள்ள பெரும்பாலான மக்கள் அமெரிக்காவை விட சீனாவையே விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர். மேற்கு ஆசியா, வட ஆப்பிரிக்கா, சகாராவுக்குத் தெற்கே உள்ள ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசிய-பசிபிக் பிராந்தியங்களில் சீனா குறிப்பாகப் பிரபலமாக இருக்கிறது. இஸ்ரேல், ஜப்பான், தென் கொரியா, தைவான், உக்ரைன் ஆகியவை மட்டுமே அமெரிக்க ஆதரவு “விதிவிலக்கு” நாடுகளாக உள்ளன. 2026 பிப்ரவரி 28 அன்று ஈரானுக்கு எதிராக ஒருதலைப்பட்சமாக அமெரிக்கா ஆக்கிரமிப்புப் போரைத் தொடங்கிய நிலையில், மார்ச்-ஏப்ரல் மாதங்களில் இதுகுறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 98 நாடுகளில் 41 நாடுகள் ஈரானை ஆதரித்தன. வெறும் 28 நாடுகள் மட்டுமே அமெரிக்காவை ஆதரித்தன. அதேபோல், இஸ்ரேல் - பாலஸ்தீன ஆதரவு குறித்த கேள்வியில், பெரும்பான்மையான 51 நாடுகள் பாலஸ்தீனத்தை ஆதரிப்பதாகக் கூறின. வெறும் 17 நாடுகள் மட்டுமே இஸ்ரேலை விரும்பின. உக்ரைன், அமெரிக்கா, ஜார்ஜியா, பனாமா ஆகிய நாடுகளில் மட்டுமே இஸ்ரேலுக்கு ஆதரவு உள்ளது.

சரியான திசையில் செல்லும் நாடுகள்

“உங்கள் நாடு சரியான திசையில் செல்கிறதா?” என்ற கேள்விக்கு, அதிகபட்ச நம்பிக்கையுணர்வுடன் சீன மக்கள் முதலிடத்தில் உள்ளனர். மேற்கு அரைக்கோளத்தில், பெரும்பான்மையான மக்கள் ‘ஆம்’ என்று கூறிய ஒரே நாடுகள் எல் சால்வடார் மற்றும் புரட்சிகர சாண்டினிஸ்டா முன்னணியால் ஆளப்படும் நிகரகுவா மட்டுமே. பிரான்ஸ், ஜெர்மனி, லெபனான், நைஜீரியா ஆகிய நாடுகளில் இந்த நம்பிக்கை மிகக் குறைவாக இருந்தது. ஒட்டுமொத்தத்தில், உலக மக்கள் தங்களுக்கு ஆபத்தாக இருப்பது அமெரிக்கா மட்டுமே என்ற தீர்ப்பை இக்குறியீட்டின் மூலம் தெளிவாக அளித்துள்ளனர். தமிழில் சுருக்கம் : நீடா சுப்பையா