நிறுத்தப்பட்ட நகரப் பேருந்தை மீண்டும் இயக்க வலியுறுத்தல்
8 Jan 2026, 2:44 pm
<p><strong>நிறுத்தப்பட்ட நகரப் பேருந்தை மீண்டும் இயக்க வலியுறுத்தல்</strong></p>
<p>செங்கல்பட்டு, ஜன. 8- செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப் பாக்கம் அடுத்த பள்ளி பேட்டை,நேமம், அத்திவாக்கம், காட்டுகூடலூர் ஆகிய பகுதிகளிருந்து அச்சிறுப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு போதிய பேருந்து வசதி இல்லாததால், நாள்தோறும் காலை 8 மணிக்கு வீட்டில் கிளம்பி 9 மணிக்கு பள்ளிக்கு வரக்கூடிய நிலை உள்ளது. அதேபோல், மாலை 5 மணிக்கு பள்ளி முடித்து 6 மணி வரை வீடு செல்லும் நிலை உள்ளது. மேலும், இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பள்ளி சென்று வரும் வகையில் தடம் எண் டி19 என்ற நகர பேருந்து, அச்சிறுப்பாக்கத்திலிருந்து காட்டுக்கூடலூர் வரையில் காலை, மாலை என இரு வேலைகளில் மாணவர்கள் பள்ளி சென்று திரும்பும் வகையில் இயக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது திடீரென பேருந்து நிறுத்தப்பட்டுள்ளதால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நிறுத்தப்பட்ட பேருந்து சேவையை மீண்டும் இயக்க வேண்டும் என மாணவர்களுக்கு வசதியாக நகரப் பேருந்து இயக்க வலியுறுத்தி, இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில், மதுராந்தகம் போக்குவரத்து பணிமனையின் மேலாளரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. இதில், இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.தயாநிதி, வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.ஜீவானந்தம் மாவட்ட குழு உறுப்பினர் எஸ். பாலாஜி மற்றும் பள்ளி மாணவர்கள் உடன் இருந்தனர்.</p>
