நகர்மயமாக்கல்: கழிவுகளைச் சுமக்கும் எளிய மக்கள் - ச.நந்தகோபால்
yesterday

நகர்மயமாக்கல்: கழிவுகளைச் சுமக்கும் எளிய மக்கள் - ச.நந்தகோபால்

இன்றைய இந்திய நகரங்கள் வேகமாக வளர்ந்து வருகின்றன. உயரமான கட்டிடங்கள், விரிவடையும் சாலைகள், தொழிற்பேட்டைகள், வணிக வளாகங்கள், ஐ.டி. பூங்காக்கள், புதிய குடியிருப்பு நகரங்கள், மேம்பாலங்கள் ஆகியவை ‘வளர்ச்சி’யின் அடையாளங்களாகக்காட்டப்படுகின்றன. ஆனால் இந்த வளர்ச்சியின் மறுபக்கத்தில், நகரங்கள் உற்பத்தி செய்யும் கழிவுகளை அங்குள்ள ஒருபகுதி மக்கள்தான் சுமக்கிறார்கள் என்ற உண்மை மறைந்து கிடக்கிறது. திட்டமிடப்படாத நகர்மயமாக்கல், முறையாக அமல்படுத்தப்படாத திடக்கழிவு மேலாண்மை, சுற்றுச்சூழல் பாதிப்புகள், காலநிலை மாற்றம் ஆகியவை இணைந்து புதிய சமூக நெருக்கடியை உருவாக்கியுள்ளன.

தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் நகரஎல்லைகளில் குப்பை மலைகள், குடியிருப்புகளுக்கு அருகில் திடக்கழிவு கொட்டுதல், குப்பைக்கிடங்குகளில் தீ விபத்துகள், கழிவுநீர்க் கால்வாய்அடைப்பு, தொழிற்சாலை–நகரக் கழிவு மாசு, மாநகராட்சிகளுக்கு நிதி–பணியாளர் பற்றாக்குறை ஆகியவை நிலவுகின்றன. இவை மக்கள் நலனைவிடக் கார்ப்பரேட் வளர்ச்சிக்கு முன்னுரிமை வழங்கும் நகர வளர்ச்சி மாதிரியின் விளைவுகள் எனமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது அகில இந்திய மாநாட்டு அரசியல் தீர்மானம் வாதிடுகிறது.

நகர்மயமாதலின் வேகம்

ஆண்டு நகர்ப்புற மக்கள் தொகை மொத்தத்தில் %

1951 சுமார் 6.2 கோடி 17.3 %

1991 சுமார் 21.7 கோடி 25.7 %

2011 சுமார் 37.7 கோடி 31.1 %

2036 (உத்தேசம்) 60 கோடிக்கும் மேல் 40+%

இந்தியாவில் ஒவ்வொரு மூவரில் இருவர் நகரங்களில் வாழ்கின்றனர்; அடுத்த பத்தாண்டுகளில் இது மேலும் அதிகரிக்கும். மிக அதிகமாக நகர்மயமான மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று - 2011இல் 48.4% ஆக இருந்த நகர்ப்புற மக்கள் தொகை தற்போது 50%ஐத் தாண்டியுள்ளது.

உருவாகும் குப்பை எவ்வளவு?

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத் தரவுகளின்படி, இந்தியாவில் ஒருநாளைக்கு 1.5–1.7 லட்சம் டன்,ஆண்டுக்கு 5 கோடி டன்னுக்கும் மேல் திடக்கழிவுஉருவாகிறது. தினசரி குப்பை தில்லியில் 11,000 டன், மும்பையில் 7,000 டன், சென்னையில் 5–6 ஆயிரம் டன், பெங்களூருவில் 4,500 டன். வேகமாக நகர்மயமாகும் தொழில் நகரான திருப்பூரில் மட்டும் தினமும் 550–650 டன் குப்பை உருவாகிறது; இதில்மக்கும் குப்பை சுமார் 350 டன் (60%), மக்காதது சுமார் 250 டன்.

திட்டமிடப்படாத வளர்ச்சி

நகர வளர்ச்சி என்பது வெறும் கட்டிடங்கள் அல்ல; மக்கள்தொகை, குடிநீர், கழிவுநீர் வடிகால்,சாலை, பொதுச்சுகாதாரம், இயற்கை வளங்கள், கழிவு மேலாண்மை போன்ற அடிப்படை வசதிகளுடன் இணைந்திருக்க வேண்டும்.ஆனால் பல நகரங்களில் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுக் குடியிருப்புகள் எழுகின்றன; ஆறுகள், கால்வாய்கள்குறுக்கப்பட்டுச் சாலைகள் அமைக்கப்படுகின்றன; இயற்கையான மழைநீர் வடிகால்பாதைகள்அழிக்கப்படுகின்றன. 2015 மற்றும் 2023ஆம் ஆண்டுசென்னைப் பெருமழை வெள்ளப் பாதிப்புகள் இந்தநகரத் திட்டமிடல் தோல்விக்குச் சான்று. நகரமையத்தில் நில விலை உயர்வதால், குப்பைக் கிடங்குகள், கழிவுநீர்சுத்திகரிப்பு நிலையங்கள், மாசு உண்டாக்கும்செயல்பாடுகள் அனைத்தும் நகர எல்லைப் பகுதிகளுக்குத்தள்ளப்படுகின்றன. அங்கு வாழ்பவர் பெரும்பாலும்குறைந்த வருவாய்ப் பிரிவினர், விளிம்புநிலை மக்கள்,புலம்பெயர்தொழிலாளர், நிலமற்றோர்.

காகிதத்தில் மட்டும் கழிவு மேலாண்மை

2016 திடக்கழிவு மேலாண்மை விதிமுறைகள், வீட்டிலேயே மக்கும், மக்காத, ஆபத்தான கழிவுகளைப் பிரிக்க வேண்டும் எனவும், உள்ளாட்சிகள் தனித்தனியே சேகரித்து உரமிடல், உயிரி எரிவாயு,மறுசுழற்சி, பாதுகாப்பான அகற்றல் முறைகளைப்பின்பற்ற வேண்டும் எனவும் வரையறுக்கின்றன. ஆனால் திருப்பூர் போன்ற நகரங்களில் உருவாகும் இடத்தில்குப்பை பிரிக்கப்படுவதில்லை; கலவைக் குப்பை சேகரிக்கப்படுகிறது; உரமாக்கும் மையங்கள் திறனுடன் இயங்குவதில்லை; மறுசுழற்சி விரிவடையவில்லை; திறந்தவெளியில் மலையளவு குப்பை கொட்டப்பட்டு அடிக்கடி தீ விபத்துகள் ஏற்படுகின்றன.

குப்பைக் கிடங்குகள் - அமைதியான பேரழிவுகள்

உணவு, காய்கறி, பிளாஸ்டிக், மருத்துவம், மின்னணுப் பொருள், துணி, மாமிசம், சாய ஆலைக் கழிவுஅனைத்தும்ஓரிடத்தில் கலந்துகொட்டப்படும்போது, மழை–வெயில்–அழுகல்–எரிதல் ஆகியவற்றால் நச்சு வாயுக்கள் வெளிவருகின்றன. மக்கும் கழிவு அழுகி உருவாகும் மீத்தேன் ெப்பத்தில் தீப்பிடிக்கலாம்; சமூக விரோதிகள் தீவைப்பதும் உண்டு. பிளாஸ்டிக், ரப்பர், மருத்துவம், துணிக் கழிவு எரியும் நச்சுப்புகை அருகில் வாழ்வோரின் சுவாசத்தைப் பாதித்து, கண் எரிச்சல்,ஆஸ்துமா, நுரையீரல் மற்றும் தோல் நோய்களை உண்டாக்குகிறது.

கழிவுகளைச் சுமப்பது யார்?

ஒருபகுதி மக்களுக்கு குப்பை என்பது வீட்டிலிருந்து வெளியேற்றப்படும் ஒன்று. ஆனால் அதன்அடுத்த கட்டத்தை எதிர்கொள்வோர் — தூய்மைப் பணியாளர், ஒப்பந்தத் தொழிலாளர், குப்பையிலிருந்து பொருள் சேகரிப்போர், குப்பைக் கிடங்கு அருகிலும் நகர எல்லைப் பகுதியிலும் வாழ்வோர். நகரங்கள்உருவாக்கும் செல்வத்தைச் சிலர் அனுபவிக்க, அதன் கழிவுகளை மற்றவர்கள் சுமக்கிறார்கள். இது சுற்றுச்சூழல் பிரச்சனை மட்டுமல்ல, சமூகநீதிப் பிரச்சனையும் ஆகும். கையுறை–காலணிஇன்றிக் குப்பை கையாளுதல், மருத்துவக் கழிவுத்தொற்று, நச்சு வாயு, முதுகெலும்பு–மூட்டுப் பாதிப்பு, சமூகப் பாகுபாடு ஆகியவற்றைத் தூய்மைப்பணியாளர்கள் தினமும் எதிர்கொள்கிறார்கள்; திறன்மிக்க திடக்கழிவு மேலாண்மையால் இவற்றைச் சரிசெய்யமுடியும்.

சுற்றுச்சூழலும் காலநிலையும்

திறந்தவெளிக் குப்பை மண், நீர், காற்று என மூன்று அடுக்குகளிலும் மாசு ஏற்படுத்துகிறது. பிளாஸ்டிக், உலோகம்,சாயம், மருத்துவ–மின்னணுக் கழிவு மண்ணை நஞ்சாக்கி நிலத்தடி நீரைப்பாதிக்கிறது; மழையில் கசியும் கழிவுநீர் குளம், கால்வாய், நிலத்தடி நீரில் கலந்து குடிநீரைத் தகுதியற்றதாக்கி வயிற்றுப்போக்கு, காமாலையை உண்டாக்குகிறது; குப்பை எரிப்பால் வெளியாகும் கார்பன்மோனாக்ஸைடு, டையாக்ஸின், ஃபியூரான்போன்றவை நுரையீரல், இதயம், நோய் எதிர்ப்புத்தன்மையைப் பாதிக்கின்றன.

கழிவு மேலாண்மையும் காலநிலை மாற்றமும் நேரடியாக இணைந்தவை. ஆக்சிஜன் இல்லாச் சூழலில் மக்கும்குப்பை அழுகி வெளியிடும் மீத்தேன், கார்பன் டை ஆக்சைடைவிடப் பன்மடங்கு வெப்பத்தைப் பிடித்துவைக்கும் மிக மோசமான கரியமில வாயு. கான்கிரீட் பரப்பு, மரம் அழிப்பு, குப்பைஅழுகல் ஆகியவை மீத்தேன் உமிழ்வையும் நகர வெப்பத் தீவு விளைவையும் அதிகரித்து, குடிநீர்ப் பற்றாக்குறை, மின்தேவை உயர்வு, வெப்ப அலைகளுக்கு வழிவகுக்கின்றன. கால்வாய்கள் குப்பையால் அடைபடும்போது மழைநீர் தேங்கி வெள்ளமும் சுகாதாரப் பேரழிவும் ஏற்படுகின்றன. எனவே குப்பை என்பது தூய்மைப் பிரச்சனை மட்டுமல்ல, காலநிலைத் தாங்குதிறன் தொடர்பானபிரச்சனையும் ஆகும்.

திருப்பூரின் வளர்ச்சி யாருக்கு?

திருப்பூரின் வளர்ச்சி துணி–பின்னலாடைத் தொழிலை அடிப்படையாகக் கொண்டது. ரசாயனம்கலந்த துணிக் கழிவு, பேக்கேஜிங் பிளாஸ்டிக், அடர்த்தியான குடியிருப்பு, பொதுச் சுகாதார வசதிப் பற்றாக்குறைஆகியவற்றால் நகரம் திணறுகிறது. பல்லாயிரம் கோடி அந்நியச் செலாவணி ஈட்டித்தரும் திருப்பூர், ‘குப்பையில்லா நகரம்’ என்ற முழக்கத்துக்குநடுவே, ஒருபகுதி மக்கள் மட்டும் “குப்பையைச் சுமக்கும் நகரமாக” மாற்றப்படும் அபாயத்தை எதிர்நோக்குகிறது.

மாற்றுவழிகள்

வீடுதோறும் குப்பை பிரித்தல், தெரு/வார்டு மட்டக் கண்காணிப்புக் குழுக்கள், குடியிருப்போர் சங்கம்–உள்ளாட்சிஒருங்கிணைப்பு எனும் ஜனநாயகத் திட்டமிடல் தேவை. ஒவ்வொரு வார்டிலும் உரமாக்கும் மையம், உலர் கழிவு மறுசுழற்சி மையம், ஆபத்தானகழிவுக்குத் தனிச்சேகரிப்பு, உயிரி எரிவாயு நிலையம் அமைய வேண்டும்; இதற்கான அதிகாரத்தையும்நிதியையும் மாநில அரசு உள்ளாட்சிகளுக்கு வழங்க வேண்டும்.

தூய்மைப் பணியாளர்களுக்கு நிரந்தர வேலை, பாதுகாப்பு உபகரணம், மருத்துவக் காப்பீடு, சமூகப்பாதுகாப்பு, மனித மரியாதையுடன்கூடிய பணிச்சூழல் உறுதிசெய்யப்பட வேண்டும். நீர்நிலைப் பாதுகாப்பு, மழைநீர் ஊடுருவும் திறந்தவெளி, நகரக் காடு,பொதுப்போக்குவரத்து, மலிவு வீட்டுவசதி எனும் பசுமை நகரத் திட்டமிடலும், தனியார்மயத்துக்குப் பதிலாகப் பொதுச் சேவைகளை வலுப்படுத்துதலும், குப்பைக் கிடங்கு அமைப்பில் மக்கள் கருத்துகேட்டல் எனும் சமூக நீதியும் அவசியம்.

நகர்மயமாக்கல் தவிர்க்க முடியாத சமூகமாற்றம்; ஆனால் திட்டமிடப்படாத நகர்மயமாக்கல் மனிதரையும் சுற்றுச்சூழலையும் பலிகடாவாக்குகிறது. நகரங்கள் சுத்தமாக இருக்க வேண்டுமெனில் குப்பையை மறைப்பது தீர்வல்ல; கழிவை உருவாக்கும் முறையையும், அதை நிர்வகிக்கும் சமூக-பொருளாதார அமைப்பையும் மாற்ற வேண்டும். இல்லையெனில், நகர வளர்ச்சியின் ஒளிரும் முகப்புக்குப்பின்னால், கழிவுகளின் நிழலில் வாழும்மக்களின் போராட்டக்குரல் தொடர்ந்து ஒலித்துக்கொண்டேயிருக்கும்.