வாய்ப்பு வாசல்
25 Jun 2026, 10:38 pm

வாய்ப்பு வாசல்

யு.பி.எஸ்.சி. மூலம் 538 பணியிடங்கள்

ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 538 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை(06/2026) வெளி வந்துள்ளது. எந்தெந்தத் துறையில் பணியிடங்கள் காலியாகவுள்ளன என்ற விபரங்கள் அறிவிக்கையில் உள்ள அட்டவணையில் தரப்பட்டிருக்கிறது. வயது வரம்பைப் பொறுத்தவரை, அதிகபட்சமாக 30 வயதைத் தாண்டியிருக்கக்கூடாது. இதர பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின, பழங்குடித் தேர்வர்களுக்கு அரசு விதிமுறைகளின்படி வயது வரம்பில் தளர்ச்சி வழங்கப்படும். பணி அனுபவம் உள்ளவர்களுக்கும் இந்தத் தளர்ச்சி தரப்படுகிறது. எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படும். எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு தரப்படும். பணிகளுக்கான கல்வித்தகுதி உள்ளிட்ட பல்வேறு விபரங்களுக்கு முழு அறிவிக்கையை http://www.upsc.gov.in என்ற இணைய தளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்களை நிரப்புவதற்கான கடைசித் தேதி ஜூலை 3, 2026 ஆகும்.

“பயிற்சி, பின் வேலை”

கூடங்குளம் அணுமின்நிலையத்தில் ஐடிஐயில் சான்றிதழ் பெற்றவர்களுக்கு அந்தந்தத் துறையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சிக்குப் பிறகு அவர்களை வேலைக்கு எடுத்துக் கொள்வார்கள். முதல் ஆண்டு மாதா மாதம் உதவித் தொகையாக ரூ.20,000, இரண்டாம் ஆண்டில் ரூ.22,000 வழங்கப்படும். பயிற்சிக்குப் பிறகு வேலையில் சேருகையில் மாதச் சம்பளம் ரூ. 34,720 ஆக நிர்ணயிக்கப்படும். இந்த வாய்ப்பு பற்றி விபரங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறைக்கு https://www.npcilcareers.co.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். விண்ணப்பிக்கக் கடைசித் தேதி ஜூன் 29, 2026 ஆகும்.

விளையாட்டு வீரரா?

விளையாட்டில் பல்வேறு சாதனைகளைப் புரிந்தவராக நீங்கள் இருந்தால் உங்களுக்கு ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு வந்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள கபூர்தலாவில் அமைந்திருக்கிற ரயில்வே பெட்டி தொழிற்சாலையில் விளையாட்டு வீரர்களுக்கான பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. காலியிடங்களின் எண்ணிக்கை 23 என்று அறிவித்துள்ளனர். 18 வயது முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். பட்டதாரியாக இருந்தால் சம்பளம் கூடுதலாக நிர்ணயிக்கப்படும், எந்தெந்த பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளன என்பதும், விண்ணப்பிக்கும் முறையும் https://www.rcf.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் தரப்பட்டுள்ளன. விண்ணப்பிக்கக் கடைசித் தேதி ஜுலை 14, 2026 ஆகும்.