உபி அரசின் ‘உபரி வருவாய்’ முகமூடி: இமாலய புள்ளிவிவர மோசடி!
7 Jul 2026, 10:07 pm

உபி அரசின் ‘உபரி வருவாய்’ முகமூடி: இமாலய புள்ளிவிவர மோசடி!

உத்தரப் பிரதேச ஆதித்யநாத் அரசு, தங்களின் மாநிலத்தில் கடந்த ஆறாண்டு களாக ‘உபரி வருவாய்’ (Revenue Surplus) நிலவுவதாகக் கூறி வரும் வெற்று விளம்பரங் களின் பின்னால் இருக்கும் இமாலயப் புள்ளி விவர மோசடியை, இந்தியத் தலைமைத் தணிக்கையாளர் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வத் தரவுகள் அப்பட்ட மாக வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளன. ஜூன் 16 அன்று வெளியான சிஏஜியின் 2024-25 நிதி யறிக்கையின்படி, உபி அரசு காட்டியுள்ள ₹59,327 கோடி உபரி வருவாய் என்பது, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியால் வந்ததல்ல; மாறாக, மக்கள் நலத்திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியைச் செலவிடாமல் முடக்கியதால் உருவான ஒரு போலியான கணக்கு வித்தையாகும். இது ஒட்டுமொத்தமாக 13 மாநிலங்கள் காட்டியுள்ள ₹1.27 லட்சம் கோடி உபரி நிதியில், தனி ஒரு மாநிலமாகவே 50 சதவீதத்தை உபி பிடித்துள்ளது போன்ற போலி பிம்பத்தை உருவாக்கியுள்ளது.

கடந்த பத்தாண்டு காலமாகவே, உபி அரசு தனது சொந்த பட்ஜெட் தொகையை முழுமையாகச் செலவிடத் துப்பற்றுக் கிடக்கிறது. குறிப்பாக 2019-20 முதல் ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தொகையில் குறைந்தது 15 சதவீதத்திற்கும் மேல் செலவிடாமல் முறை கேடாக முடக்கியுள்ளது. 2024-25 நிதியாண்டில், அம்மாநிலத்தின் வருவாய் வரவு 16 சதவீதம் குறைந்த போதிலும், திட்டங்களுக்கான செலவினங்களை அதைவிடக் கூடுதலாக 15.4 சதவீதம் அளவிற்கு பாஜக அரசு வெட்டிச் சுருக்கியுள்ளது. சில மாநிலங்கள் தங்களின் இலக்குகளை எட்டி, பட்ஜெட்டை விடக் கூடுதலாகச் செலவிட்டு மக்கள் நலனைக் காக்கும் வேளையில், உபி அரசோ நிதியைத் தேக்கி வைத்துப் போலி உபரி பிம்பத்தைக் காட்டுகிறது. மற்ற பல மாநிலங்களின் நிதியியல் திறனோடு ஒப்பிட்டால், உபியின் இந்த உபரி என்பது உண்மையில் ஒரு பெரும் பற்றாக்குறையாகவே (Deficit) மாறியிருக்கும்.

இந்த மோசடி, உள்கட்டமைப்பு மற்றும் மூலதனச் செலவினங்களில் மேலும் விபரீதமாகப் பிரதிபலிக்கிறது. 2024-25-ல் மூலதனச் செலவுக்காக ஒதுக்கப்பட்ட ₹1.55 லட்சம் கோடியில், வெறும் ₹1.13 லட்சம் கோடியை மட்டுமே செலவிட்டு, 27 சதவீத நிதியை அப்படியே முடக்கியுள்ளது. ஒன்றிய அரசின் வரிப் பகிர்வு மற்றும் மானியங்கள் மூலம் தங்களின் மொத்த வருவாயில் 55.11 சதவீதத்தை மத்திய நிதிப் பகிர்வாகப் பெறும் உபி அரசு, அந்த நிதியையும் பயன்படுத்தாமல், ஒன்றிய அரசின் திட்டங்களுக்கான நிதியில் 38.4 சதவீதத்தைச் செலவிடாமல் பாழாக்கியுள்ளது. ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம், கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்புகளுக்கான நிதியைத் திட்டமிட்டு முடக்கிவிட்டு, அதனை ‘உபரி நிதி’ எனப் பறைசாற்றிக் கொள்ளும் பாஜக அரசின் இந்த மக்கள் விரோத, நிர்வாகத் திறனற்ற புள்ளிவிவரச் சூழ்ச்சிகளை நாட்டு மக்களிடம் அம்பலப்படுத்துவோம்.