மதுரையைப் புறக்கணிக்கும் ஒன்றிய பட்ஜெட்; மதவாத அரசியலுக்குத் தமிழக மக்கள் பாடம் புகட்டுவார்கள்
20 Feb 2026, 2:39 pm
<p><strong>மதுரையைப் புறக்கணிக்கும் ஒன்றிய பட்ஜெட்; மதவாத அரசியலுக்குத் தமிழக மக்கள் பாடம் புகட்டுவார்கள்</strong></p>
<p>மதுரை, பிப். 20- “நாடாளுமன்றத்தை ஒரு மாட்டுத் தொழுவத்தை விடக் கேவலமாகப் பிரதமர் மோடி நடத்தி வருகிறார்; தமிழகத்தில் சாதி, மதப் பிரிவினையைத் தூண்டப் பார்க்கும் அதிமுக - பாஜக கூட்டணிக்கு 2026 தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் கே. பாலபாரதி மதுரையில் முழங்கினார். கட்சியின் மதுரை மாநகர் வடக்கு 1-ஆம் பகுதிக்குழு சார்பில், 23-வது வார்டு தாகூர் நகர் மற்றும் ஏ.கே.ஜி. அய்யனார்கோயில் கிளைகள் இணைந்து நடத்திய ‘மதச்சார்பின்மையைக் காப்போம்’ கருத்தரங்கம் செல்லூர் பகுதியில் நடைபெற்றது. பகுதிக்குழு உறுப்பினர் க. திலகர் தலைமை வகித்தார். ஜி. பாலு, வி. பழனி, க. மீனாட்சி சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுரையைப் புறக்கணிக்கும் ஒன்றிய அரசு கருத்தரங்கைத் தொடங்கி வைத்துப் பேசிய மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் மா. கணேசன், “ஒன்றிய பட்ஜெட்டில் மதுரை முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. கூடல்நகர் ரயில் நிலையத்தை இரண்டாவது முனையமாக மாற்றவோ, சரக்கு ரயில்களுக்குத் தனிப்பாதை அமைக்கவோ நிதி ஒதுக்கப்படவில்லை. எய்ம்ஸ் மற்றும் மெட்ரோ ரயில் திட்டங்கள் வேண்டுமென்றே தாமதப்படுத்தப்படுகின்றன. தமிழகத்திற்கான கல்வி, மின்பகிர்மானம் மற்றும் விவசாய மானியங்களில் கை வைத்துள்ள ஒன்றிய அரசு, தனது தவறான நிதிக்கொள்கைகளால் மாநிலத்தின் மீது செயற்கைக் கடன் சுமையை ஏற்றியுள்ளது” என்று சாடினார். மதச்சார்பின்மையே நாட்டின் உயிர்நாடி மாநிலக்குழு உறுப்பினர் இரா. விஜயராஜன் பேசுகையில், “இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படையான மதச்சார்பின்மையைப் பாதுகாக்க வேண்டியது இன்றைய அவசரத் தேவை. ஆர்எஸ்எஸ் மற்றும் இந்துத்துவ சக்திகள் அரசியல் சட்டத்திற்கு முரணாகச் செயல்பட்டு, பெரும்பான்மை-சிறுபான்மை மோதலைத் தூண்டுகின்றன. மதம், இனம், சாதி அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது என்பதே அரசியல் சாசனத்தின் நெறி. மதவாத அரசியலை மக்கள் நிராகரிக்க வேண்டும்; அப்போதுதான் நாட்டின் ஜனநாயகமும் ஒற்றுமையும் நிலைக்கும்” என்றார். அதிகாரத்தை விடக் கொள்கையே பெரிது சிறப்புரையாற்றிய தோழர் கே. பாலபாரதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தியாகம் மற்றும் கொள்கை உறுதி குறித்துப் பேசுகையில், “இந்தியாவின் பிரதமர் பதவியே தேடி வந்தபோதும், கொள்கைக்காக அதனை ஏற்க மறுத்த ஒரே கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. சோனியா காந்தியே நேரில் வந்து கேட்டபோதும், பதவியை விடக் கொள்கையே முக்கியம் என வெளியே இருந்து ஆதரவு அளித்தோம். அதன் விளைவாகவே கிராமப்புற ஏழைகளுக்காக 100 நாள் வேலைத் திட்டம் உருவானது. இத்தகைய உயர்ந்த மரபில் வந்த தோழர் நாகராஜன் இன்று மதுரையின் பொறுப்பு மேயராக மக்கள் பணியாற்றி வருகிறார்” என்றார். தொடர்ந்து ஒன்றிய அரசின் ஜனநாயகப் படுகொலையைச் சாடிய அவர், “நாடாளுமன்றத்தில் 146 எம்பிக்களை சஸ்பெண்ட் செய்தது ஜனநாயகத்தின் கரும்புள்ளி. தற்போது மதுரை எம்பி சு. வெங்கடேசன் உள்ளிட்ட 8 எம்பிக்களை வெளியேற்றியிருப்பது அப்பட்டமான அராஜகம். தேர்தல் பத்திரங்கள் மூலம் 6,000 கோடி ரூபாய் கொள்ளையடித்த பாஜகவை, எமது மறைந்த பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி முன்னின்று நடத்திய போராட்டத்தால் உச்ச நீதிமன்றம் இன்று அம்பலப்படுத்தியுள்ளது. மணிப்பூர் கலவரம் பற்றி வாய் திறக்காத அண்ணாமலை, மைக்கேல்பட்டி விவகாரத்தில் மதமாற்றப் பொய்யைக் கூறித் தமிழகத்தில் நெருப்பைப் பற்றவைக்க முயன்றார். ஆனால் சிபிஐ விசாரணை மூலம் அந்தப் பொய் உடைந்துள்ளது. மதவெறி அரசியலைத் தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்” என்று ஆவேசமாக உரையாற்றினார். இந்நிகழ்வில் மதுரை மாநகராட்சி பொறுப்பு மேயர் தி. நாகராஜன், கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வை. ஸ்டாலின், பகுதிக்குழு செயலாளர் வி. கோட்டைச்சாமி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி. குமரவேல் எம்.சி, வை. ஜென்னியம்மாள் எம்.சி உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினார்கள். இறுதியில் அ. மகாலிங்கம் நன்றியுரை வழங்கினார்.</p>
<p> </p>
