நிரந்தர கொரோனா போல் தாக்கும் ஒன்றிய பாஜக அரசு: முதலமைச்சர் சாடல்
13 Jan 2026, 3:17 pm
<p><strong>நிரந்தர கொரோனா போல் தாக்கும் ஒன்றிய பாஜக அரசு: முதலமைச்சர் சாடல்</strong></p>
<p>சென்னை, ஜன.13- பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மக்களுக்கு வெளியிட்டுள்ள கடிதத்தில், ஒன்றிய பாஜக அரசின் தமிழ்நாட்டின் மீதான வஞ்சகத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். தை முதல்நாள் தமிழர் வாழ்வில் சிறப்புமிக்க நாள் என்று குறிப்பிட்ட முதலமைச்சர், இல்லங்களிலும் உள்ளங்களிலும் இன்பம் பொங்கிடும் பொங்கல் விழா தொடங்குகிற நன்னாள் என்றும், உழைப்பைப் போற்றுகின்ற திருநாள் என்றும் தெரிவித்தார். தமிழ்ப் பண்பாட்டை உலகம் அறிந்திடும் வகையில் மகிழ்ச்சி யான கலை, பண்பாட்டு நிகழ்வு களும் பாரம்பரியமிக்க விளை யாட்டுப் போட்டிகளுமாகக் கொண்டாடப் படுகிற நாள் என்று பொங்கலின் சிறப்பை எடுத்துரைத்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகால திமுக ஆட்சியில் இயற்கையும் அரசு நிர்வாகமும் பருவம் தவறாமல் பணி செய்ததன் விளைவாக, விளை நிலங்கள் செழித்து, உழவர்களுடைய உழைப்பின் விளைச்சலையும் அதற்குரிய பலன்களையும் அதிகமாக்கியிருப்பதால் அவர்களின் நெஞ்சத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது என்று தெரிவித்தார். இயற்கை சீற்றங்கள் ஏற்பட்ட போதும், விவசாயிகளுக்கும் தொழி லாளர்களுக்கும் துணையாகவும் அரணாகவும் நின்றது அரசு என்றும் குறிப்பிட்டார். ஆட்சிப் பொறுப்பேற்ற போது கொரோனா இரண்டாவது பேரலை யின் கடுமையான தாக்கம், அதனைத் தொடர்ந்து நிரந்தரக் கொரோனா போல தாக்கிக் கொண்டே இருக்கும் ஒன்றிய பாஜக அரசின் தமிழ்நாட்டின் மீதான வஞ்சகம், அவ்வப்போது எதிர்கொண்ட இயற்கைப் பேரிடர்கள் என எல்லாவற்றையும் கடந்து, தமிழ்நாடு தற்போது பல்வேறு இலக்குகளில் இந்தியாவின் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது என்று முதலமைச்சர் வலியுறுத்தினார். பொங்கல் திருநாள் என்பது தமிழர்கள் அனைவருக்குமான திரு விழா என்றும், அதில் சாதி பேதம் கிடையாது, மத வேறுபாடுகள் கிடை யாது, ஏழை - பணக்காரர் என்ற ஏற்றத்தாழ்வு கிடையாது, பெண் - ஆண் என்ற பாகுபாடு கிடையாது என்றும் அவர் தெரிவித்தார். எல்லோருக்குமான திருநாள் பொங்கல், எல்லோருக்குமான அரசு திமுக என்று அவர் சுட்டிக்காட்டி யுள்ளார். சங்கமம் கலை விழா சென்னை சங்கமம் நிகழ்வை ஜன.14 அன்று தொடங்கி வைப்பதாகவும், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும் சென்னை சங்கமம் 2026 கலைவிழாக்களில் பொது மக்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டு நம் மண்ணின் மரபார்ந்த நாட்டுப்புறக் கலை வடிவங்களையும் கலைஞர்களையும் ஆதரித்திட வேண்டும் என்றும் அவர் வேண்டு கோள் விடுத்தார். நிரந்தரத் தடைகளை ஏற்படுத்த முயலும் சக்திகளைக் கடந்து, நிரந்தர மகிழ்ச்சியை மக்களுக்குத் தருவதுதான் திமுக அரசின் உன்னத நோக்கம் என்று முதலமைச்சர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.</p>
