உளுந்தூர்பேட்டை அரசு கலை அறிவியல் கல்லூரி கட்டுமானம் மிகதாமதம் பேராசிரியர்கள், வகுப்பறையின்றி தவிக்கும் மாணவர்கள்
22 Jul 2026, 11:42 pm
<p><strong>உளுந்தூர்பேட்டை அரசு கலை அறிவியல் கல்லூரி கட்டுமானம் மிகதாமதம் பேராசிரியர்கள், வகுப்பறையின்றி தவிக்கும் மாணவர்கள்</strong></p><p>உளுந்தூர்பேட்டை, ஜூலை 22- கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர் பேட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கான புதிய கட்டடப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதாலும், போதிய பேராசிரியர்கள் இல்லாததாலும் மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி யுள்ளனர். உளுந்தூர்பேட்டையில் கடந்த ஆண்டு ஜூன் 16-ம் தேதி சென்னை சாலையில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி கட்டடத்தில் தற்காலிகமாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டது. இதில் பி.ஏ. தமிழ், ஆங்கிலம், பி.பி.ஏ., பி.காம்., பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் என 5 பிரிவுகளில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டு முதலாம் ஆண்டில் 290 மாணவர்கள் சேர்க்கை நடை பெற்ற நிலையில், தற்போது 2026-27 கல்வியாண்டிற்கான முதற்கட்ட கலந்தாய்வு முடிவில் மொத்தம் 350-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளனர். அடுத்தடுத்த கலந்தாய்வுகளில் மாணவர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பேராசிரியர்கள் பற்றாக்குறை 350-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர் உள்ளிட்ட வெறும் 5 பேராசிரியர்கள் மட்டுமே உள்ளனர். இதில் 3 பேர் நிரந்தரப் பேராசிரியர்கள், ஒருவர் தற்காலிகப் பேராசிரியர் ஆவார். கடந்த ஆண்டு முதலாம் ஆண்டு மட்டும் இயங்கியதால் 4 பேரா சிரியர்களைக் கொண்டு சமாளிக்கப்பட்ட நிலையில், தற்போது 2-ம் ஆண்டு வகுப்புகள் தொடங்கி யுள்ளன. கூடுதல் பேரா சிரியர்கள் நியமிக்கப்படாததால் முதலாம் மற்றும் 2-ம் ஆண்டு மாணவர்களுக்கு முறையாகப் பாடம் நடத்துவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இட நெருக்கடியும் அடிப்படை வசதிகள் இல்லாமையும்: தற்காலிக கட்டடத்தில் போதிய வகுப்பறைகள் இல்லாததால் மாண வர்கள் இட நெருக்கடியில் அமர்ந்து படிக்கும் நிலை உள்ளது. டேபிள், பெஞ்ச், மின்விசிறி போன்ற அடிப்படை வசதிகள் கூட கல்லூரி மேலாண்மைக் குழு மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலமாகவே பெறப்படுகின்றன. மேலும், மாணவர்களுக்குப் போதிய கழிவறை வசதி இல்லாததால், பள்ளியின் ஒரு வகுப்பறை கட்டடத்தை இடித்துக் கழிவறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ரூ. 18.5 கோடி திட்டம் கிடப்பில் இதற்கிடையே, கல்லூரிக்கு நிரந்தரக் கட்டடம் கட்ட வெள்ளையூர் அரசு மறுவாழ்வு இல்லத்தில் 5 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு, கடந்த பிப்ரவரி 16ம் தேதி ரூ. 18..5 கோடி மதிப்பில் புதிய கல்லூரி கட்டடத்திற்குப் பூமி பூஜை நடத்தப்பட்டது. 20 மாதங்களில் கட்டி முடிக்க ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்தும், கட்டுமானப் பணிகள் மிகவும் மந்தமாக நடைபெற்று வருகின்றன. மாணவர்களின் எதிர்காலம் கருதி, கூடுதல் பேராசிரியர்களை உடனடியாக நியமிப்பதோடு, புதிய கல்லூரி கட்டடப் பணிகளை விரைந்து முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பெற்றோர்களும் மாணவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
