பட்டா இருந்தும் வீடு இல்லை 20 ஆண்டுகளாக தார்பாய் கொட்டகையில் வாசம்உளுந்தூர்பேட்டை அருகே பரிதாபம்
28 Oct 2026, 11:22 pm

பட்டா இருந்தும் வீடு இல்லை 20 ஆண்டுகளாக தார்பாய் கொட்டகையில் வாசம்உளுந்தூர்பேட்டை அருகே பரிதாபம்

உளுந்தூர்பேட்டை, அக்.28-கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பரமேஸ்வரிமங்கலம் கிராமத்தில், சென்னை - திருச்சி ஜி.எஸ்.டி. தேசிய நெடுஞ்சாலை ஓரம் பூம்பூம் மாட்டுக்காரர் இனத்தைச் சேர்ந்த குடும்பத்தினர்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தார்பாய் கொட்டகை அமைத்து வசித்து வருகின்றனர்.

இவர்கள் திருஷ்டி பொம்மை, கயிறு, பலூன், சீப்பு போன்ற சிறு பொருட்களை விற்பனை செய்து அன்றாட பிழைப்பை நடத்தி வருகின்றனர். இதில் கிடைக்கும் சொற்ப வருமானம் அன்றாட செலவுக்கே சரியாக உள்ளதாகவும், சேமிப்பு என்று எதுவும் இல்லை எனவும் வேதனையுடன் கூறுகின்றனர்.

இவர்கள் வசிக்கும் பகுதியில் சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதார வசதி கூட இல்லாமல் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். மின்சார வசதி இல்லாததால் இரவு நேரங்களில் ராந்தல் விளக்கையே வெளிச்சத்திற்காக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் குழந்தைகளின் படிப்பும் பாதிக்கப்படுகிறது.

மேலும் இவர்கள் குடியிருக்கும் இடத்தின் அருகே நீரோடை ஒன்று செல்வதால், சிறு மழை பெய்தால் கூட மழைநீர் குடியிருப்புக்குள் புகுந்து விடுகிறது. அச்சமயத்தில் பாம்பு போன்ற விஷப் பூச்சிகளும் கொட்டகைகளுக்குள் புகுவதால் அச்சத்துடன் வாழ வேண்டிய நிலையில் உள்ளதாக கூறினர். மேலும் தார்பாய் கொட்டகை ஒழுகுவதால் உடைமைகள் நனைந்து விடுகின்றன. இதனால் மழைக்காலங்களில் பச்சிளம் குழந்தைகளை தூக்கிக்கொண்டு அருகில் உள்ள அரசு கட்டிடங்களை தேடிச் சென்று தஞ்சம் அடையும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இவர்களின் பிள்ளைகள் 10 மற்றும் அதிகபட்சம் 12-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு, மேற்படிப்புக்காக கல்லூரிகளில் சாதி சான்றிதழ் கேட்பதால் படிப்பை பாதியிலேயே கைவிட்டு, வாழ்வாதாரத்திற்காக திருப்பூர், சென்னை போன்ற பகுதிகளுக்கு கூலி வேலைக்கு செல்கின்றனர். அரசு சாதி சான்றிதழ் வழங்காததால் தங்கள் கல்வி கனவு பாதியிலேயே சிதைந்து விடுவதாக மாணவர்கள் கண்ணீர் மல்க தெரிவிக்கின்றனர்.

தங்களின் நிலையை உணர்ந்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அரசு தரப்பில் பட்டா வழங்கப்பட்டதாகவும், ஆனால் வழங்கப்பட்ட பட்டாவுக்கான இடத்தை இதுவரை அதிகாரிகள் காண்பிக்காமல் கிடப்பில் போட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, பட்டா வழங்கிய இடத்தை அளந்து காட்டி, அங்கு இலவச வீடுகளை கட்டித்தர வேண்டும். மேலும் தங்கள் பிள்ளைகளின் எதிர்கால மேம்பாட்டிற்காக சாதி சான்றிதழ் வழங்கி, சுத்தமான குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளை செய்து தந்து தங்களின் வாழ்வியல் முறை மற்றும் வாழ்வாதாரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.