குடிநீர் கேட்டு சாலை மறியல்
24 Sept 2026, 1:27 am
<p><strong>குடிநீர் கேட்டு சாலை மறியல்</strong></p><p>உடுமலை, செப்.23-மடத்துக்குளம் தாலுகா பாப்பான்குளம் ஊராட்சி பகுதியில் ஒரு மாதமாக முறையாக குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து, புதனன்று பொதுமக்கள் காலிக்குடங்களுடன்உடுமலை–பழனி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.பாப்பான்குளம் ஊராட்சிக்குட்பட்ட ரெட்டிபாளையம், சாலரப்பட்டி, பாப்பான்குளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு திருமூர்த்தி அணையில் இருந்து கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாதமாக இத்திட்டத்தின் மூலம் குடிநீர் முறையாக வழங்கப்படவில்லை.மேலும், ஆழ்குழாய் கிணறுகளில் இருந்து இரண்டு நாட்களுக்கு ஒருமுறை வழங்கப்பட்டு வந்த தண்ணீரும் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக வழங்கப்படவில்லை. இதனால் குடிநீருக்காக பொதுமக்கள் விலைக்கு தண்ணீர் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மடத்துக்குளம் தாலுகா செயலாளர் ஆர்.வி.வடிவேல் கூறுகையில், ”கூட்டுக்குடிநீர் திட்டத்தில் ஏற்படும் பிரச்சினையைஉடனடியாக சரிசெய்து குடிநீரை முறையாக வழங்க வேண்டும். இப்பகுதியில் உள்ள குட்டைக்கு அமராவதி கால்வாயில் இருந்து தண்ணீர் திறந்துவிடுவதன் மூலம் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் கிடைக்கச் செய்ய வேண்டும்” என்றார்.இதையடுத்து பொதுமக்களிடம் பொதுப்பணித்துறை, ஊராட்சி நிர்வாகத்தினர் மற்றும் காவல்துறை அதிகாரிகள்பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் அமராவதி கால்வாயில் இருந்து குட்டைக்கு தண்ணீர் திறக்கப்படும் என்றும், கூட்டுக்குடிநீர் விநியோக பிரச்சினையை இரண்டு நாட்களுக்குள் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள்மறியல்போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.</p>
