முறைகேடான குடிநீர் இணைப்பு: மக்கள் போராட்டம்
9 Oct 2026, 2:33 am
<p><strong>முறைகேடான குடிநீர் இணைப்பு: மக்கள் போராட்டம்</strong></p><p>உடுமலை, அக்.8–உடுமலை அருகே பெரியபட்டி ஊராட்சி அப்பிலியபட்டி கிராமத்தில் 20 நாட்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததை கண்டித்து, கிராம மக்கள் குடிநீர் தொட்டி முன்பு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>அப்பிலியபட்டி கிராமத்தில் 250-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. திருமூர்த்தி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம்கிராமத்திற்கு வர வேண்டிய குடிநீர் முறையாக கிடைக்கவில்லை. குடிநீர்திருட்டு நடைபெறுவதுடன், முறைகேடான குடிநீர் இணைப்புகள் மூலம் தண்ணீர் வேறு பகுதிகளுக்கு திருப்பி விடப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவித்தனர். போராட்டத்தில், அப்பிலியபட்டி கிராமத்திற்கு தனியாக குடிநீர் குழாய் அமைத்து சீரான குடிநீர் வழங்க வேண்டும். குடிநீர் திருட்டை தடுக்க வேண்டும். முறைகேடான குடிநீர் இணைப்புகளை கண்டறிந்து உடனடியாக துண்டிக்க வேண்டும். குடிநீர் தட்டுப்பாட்டுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் நாட்ராயன் உள்ளிட்ட அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்துசென்றனர்.</p>
