தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் மேலும் தீவிரமடையும்: உ.வாசுகி
7 Oct 2026, 10:21 pm

தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் மேலும் தீவிரமடையும்: உ.வாசுகி

தஞ்சாவூர், அக். 6 –சக தேர்தல் ஆணையர்களின் எதிர்ப்பையும் மீறி ஒன்றிய அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டுவரும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ. வாசுகி வலியுறுத்தியுள்ளார்.

ஒருதலைப்பட்ச செயல்பாடுகளுக்குக் கண்டனம்

தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம் மல்லிப்பட்டினத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்டக் குழு உறுப்பினர்களுக்கான அரசியல் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உ. வாசுகி செய்தியாளர்களிடம் பேசினார்.

“சக தேர்தல் ஆணையர்களின் எதிர்ப்பையும் மீறி ஒன்றிய அரசுக்கு ஆதரவாகத் தலைமைத் தேர்தல் ஆணையர்ஞானேஷ்குமார் செயல்பட்டு வருகிறார். சட்டவிரோதமான முறையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) அமல்படுத்தி சுமார் 13.5 கோடி வாக்காளர்களின் பெயர்களை நீக்கி பாஜகவிற்கு ஆதரவாகத் தேர்தலின் போக்கையே மாற்ற அவர் முயன்றுள்ளார். எனவே, அவர் உடனடியாகப் பதவி விலகக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பல்வேறு ஜனநாயக அமைப்புகள் நாடு முழுவதும் கண்டனப் போராட்டங்களை நடத்தி வருகின்றன; இப்போராட்டம் மேலும் தீவிரமாக மாறும்” என்றார்.

விவசாயிகளின் கோரிக்கைகள்

மேலும் பேசிய அவர், “கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் தனியார் பல்கலைக்கழகங்களை அனுமதிக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவையும், தற்போது பன்னாட்டு பல்கலைக்கழகங்கள் தமிழகத்தில் கிளை தொடங்க அனுமதிக்கப்பட்டுஉள்ளதையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக எதிர்க்கிறது. இது கல்வித்துறையை முழுமையாகத் தனியார்மயமாக்கும் செயலாகும். டெல்டா மாவட்டங்களில் மேட்டூர் அணையில் இருந்து போதிய தண்ணீர் திறக்கப்படாததால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது; எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 15,000 மற்றும் விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்குத் தலா ரூ. 10,000வறட்சி நிவாரணமாக வழங்க வேண்டும்”என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் கருவிழி பதிவு செய்யப்படவில்லை எனக் கூறி வயதானதொழிலாளர்கள் திருப்பி அனுப்பப்படுவதைக் கண்டித்ததுடன், வேலை அட்டை வைத்துள்ள அனைவருக்கும் முழுஊதியத்துடன் வேலை வழங்க வேண்டும் எனக் கோரினார். மேலும், தஞ்சை மாவட்டத்தில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாடு, கிராமப்புற அடிப்படை வசதிகள், கோயில் நிலங்களில் பல தலைமுறைகளாகக் குடியிருக்கும் ஏழை எளிய மக்களுக்குப் பட்டா வழங்குதல் மற்றும் நேரடி நெல் கொள்முதல்நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளைப் பாதுகாப்பாகக் கொள்முதல் செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் மாதம் முழுவதும் 300-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் நகரங்களில் போராட்டம் நடத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

கட்சியின் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் சி. ஜெயபால், எஸ். தமிழ்ச்செல்வி மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள் பலர் உடனிருந்தனர்.